முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, July 13, 2019

தொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்!!

No comments :


ராமநாதபுரம்:மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட உயர் மின் கோபுரங்களில் மின் கம்பிகளை கட்டி இணைக்கும் இன்சுலேட்டர்கள் டிஸ்க் உடைந்ததால் நேற்று முன்தினம் முதல் ஏராளமான கிராமங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

சீராக மின்சாரத்தை கடத்தும் வகையில் பல்வேறு பகுதிகளில் உயர் மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சீரான மின்னழுத்தம் கிடைப்பதற்காக 'இன்சுலேட்டர் டிஸ்க்' பொருத்தப்படுகிறது.
இவற்றை ராமநாதபுரம் மாவட்ட மின்வாரியம் தொடர் பராமரிப்பு செய்யாததால் கடந்த ஜூலை 3ல் வழுதுார், ராமநாதபுரம், கூரியூர் பகுதிகளில் உடைந்தன.
இதனால், ராமேஸ்வரம், ராமநாதபுரம் பகுதியில் இரண்டு நாட்கள் மின்தடை ஏற்பட்டு மக்கள் மிகுந்த சிரமப்பட்டனர். மூன்று நாட்களுக்கு பின் ஜூலை 6ல் மின் விநியோகம் சீரானது.



மாவட்ட தலைநகரான ராமநாதபுரத்தை இரண்டு நாட்கள் இருளில் மூழ்கடித்த நிலையில், நேற்று முன்தினம் (ஜூலை 10) பகலில் வழுதுார் பகுதியில் திடீரென உயர்மின் கோபுரத்தில் ஏராளமான இன்சுலேட்டர் டிஸ்க் அமைப்புகள் உடைந்து சிதறின. இதனால், ராமேஸ்வரம், மண்டபம், கீழக்கரை பகுதியில் மின்தடை ஏற்பட்டது. அவற்றை மின்வாரிய பொறியாளர்கள் நேற்று முன்தினம் இரவு முழுதுவதும் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். வழுதூர் பகுதியில் பீங்கான் அமைப்புகள் உடைந்த நிலையில், காரைக்குடி செல்லும் மின்தடம், பெருங்குளம் கீழக்கரை செல்லும் மின்தடங்களிலும் 300 க்கும் மேற்பட்ட இடங்களில் இன்சுலேட்டர்கள் சேதமடைந்தன.

இதனால், ராமேஸ்வரம், கீழக்கரை நகராட்சி பகுதிகளும், மண்டபம், பெருங்குளம், காவனுார், வாலிநோக்கம், ஏர்வாடி உள்ளிட்ட பெரும்பாலான ஊரகப் பகுதிகளிலும், பல கிராமங்களில் அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டது. சுமார் 75 ஆயிரம் மின் இணைப்புகளுக்கு மின்விநியோகம் செய்வது நேற்று தடைபட்டதாக மின்வாரியப் பொறியாளர்கள் தெரிவித்தனர். இன்சுலேட்டர்கள் பழுதுநீக்கும் பணியில் வெளியூர்களில் இருந்து அழைத்து வரப்பட்ட மின்வாரிய ஒப்பந்தப் பணியாளர்கள் நேற்று அதிகாலை முதலே ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொறியாளர்கள் கூறினர்.


செய்தி: தினசரிகள்


(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;

Thursday, July 11, 2019

ராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா!!

No comments :
ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில் ஜப்பான் பன்னோக்கு கூட்டுறவு முகமை உதவியுடன் ஒருங்கிணைந்த கடல் உணவு பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலீடு ஊக்குவிப்பு திட்டம் 2-ன் கீழ் அமைக்கப்பட்டு வரும் இந்த பூங்காவில் கடல் உணவு, மீன் பிடி தொழில் தொடர்பான மேம்படுத்தப்பட்ட கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் ரூ.22 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள இந்த கடல் உணவு பூங்கா முதல்கட்டமாக 50 ஏக்கரில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த 50 ஏக்கரில் 18 தொழில் மனை வளாகங்களை பிரித்து வழங்க தயாராக உள்ளது. இந்த மனை பகுதிகளில் தொழில்தொடங்க ஏதுவாக தொழிற்சாலைகளுக்கான தனி மின் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர சாலை வசதி, தண்ணீர் வசதி, மழைநீர் வடிகால் வசதி, வாய்க்கால் வசதி, தெருவிளக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த கடல் உணவு பூங்காவில் தொழில் தொடங்க தற்போதைய நிலையில் 2 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. குறிப்பாக சென்னையை சேர்ந்த நிறுவனம் ஒன்று படகு தயாரிக்கும் தொழில் தொடங்க கடை வளாகம் கேட்டுள்ளது.

இந்த கடல் உணவு பூங்காவில் ஒரு ஏக்கர் பரப்பளவிலான கடை வளாகம் ரூ.23 லட்சம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மனை வளாகம் பெறப்பட்ட 24 மாதங்களுக்குள் தொழில் தொடங்க வேண்டும். இந்த வளாகத்தில் மீன் உணவு வகைகள் தயாரித்தல், மேம்படுத்தப்பட்ட பதப்படுத்தப்பட்ட உடனடி மீன் உணவு வகைகள் தயாரித்தல், மீன்பிடி வலைகள் தயாரிப்பு, படகு தயாரித்தல் போன்ற சிறு,குறு தொழில்கள் தொடங்கலாம்.

தற்போதைய நிலையில் 50 ஏக்கரில் 18 மனை வளாகங்கள் உருவாக்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த கட்டமாக மீதம் உள்ள 50 ஏக்கரில் இந்த கடல் உணவு பூங்காவை விரிவுபடுத்தும் பணி தொடங்கப்பட உள்ளது.

இதுதவிர இங்கு மீன்கள் பதப்படுத்த ஏதுவாக குளிர்சாதன கிடங்கு வசதியும், கடல் உணவு பூங்காவிற்காக தனி துணை மின்நிலையமும் அமைக்கப்பட உள்ளது.


செய்தி: தினசரிகள்


(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;

Thursday, July 4, 2019

ராமநாதபுர மாவட்டத்தில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள், திருடர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தலுக்கு பின்னர் கடந்த ஒரு மாதத்தில் வீடு புகுந்து திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனை தடுக்க சிறப்பு குற்றப்பிரிவை சேர்ந்த 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் அதனை செயல்படுத்திய விதம் குறித்து ஆராய்ந்து கடந்த காலங்களில் இதுபோன்று செயல்களில் ஈடுபட்டு கைதான நபர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதன்படி 38 குற்றவாளிகளின் பட்டியல் தயார் செய்து தனிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த 38 குற்றவாளிகளின் தற்போதைய நிலை, சிறையில் உள்ளனரா?, எப்போது வெளியில் வந்தனர்?, அதன்பின்னர் வேறு ஏதாவது குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனரா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.


இதன்மூலம் முக்கிய தகவல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வீடு புகுந்து திருட்டு, வீட்டு வாசலில் படுத்திருப்பவர்களிடம் செயின் பறிப்பு என 15 சம்பவங்கள் நடந்துள்ளன. இதனை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பம் காரணமாக பொதுமக்கள் காற்றுக்காக வெளியில் படுக்கின்றனர். இவர்களை நோட்டமிட்டு மர்ம நபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

காற்றுக்காக வெளியில் படுப்பவர்கள் தங்க நகைகளை அணிந்து கொண்டு படுக்க வேண்டாம் என்பது போன்ற எச்சரிக்கை வாசகங்கள் அச்சடிக்கப்பட்டு கிராமங்கள் தோறும் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள கதவுகளின் உறுதித்தன்மையை சரிசெய்து கொள்ள வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை வங்கி பெட்டகத்தில் வைக்க வேண்டும். வீட்டிற்கு வரும் நபர்களை உறுதிசெய்த பின்னரே கதவை திறந்து அனுமதிக்கும் வகையில் கதவில் துளைஅமைத்து சங்கிலியால் கட்டி வைத்து கொள்ள வேண்டும். வீட்டில் தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திக்கொள்ள வேண்டும் என்பதுபோன்ற அறிவுரைகள் அடங்கிய விளம்பர பலகைகள் முக்கிய இடங்களில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா தெரிவித்தார்


(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;