முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, August 12, 2015

துபாய் நட்சத்திர ஓட்டலில் நடந்த மோதலில் இராமநாதபுர வாலிபர் இறப்பு!!. அரபு நாட்டை சேர்ந்த ஒருவர் கைது!!

No comments :

துபாயில் ரியல் எஸ்டேட் ஏஜெண்டாக இருந்தவர் மகேந்திரன் யாதவ். இவர் ராமநாதபுரத்தை சேர்ந்தவர். இவர் தனது நண்பர்களுடன் துபாய் நட்சத்திர ஓட்டலில் உணவருந்திக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்து அரபு நாட்டைச்சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது காதலியுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். 


அப்போது மகேந்திரன் அவரது நண்பர்களுடன் செல்போனில் போட்டோ எடுத்தார். இதை பார்த்த அரபு நாட்டு வாலிபர், தங்களை படம் பிடிப்பதாக எண்ணி தகராறு செய்தார். இந்த தகராறு அடிதடியாக மாறியது.
(படம்: தினசரிகள்)


அப்போது அந்த அரபு நாட்டு வாலிபர் மகேந்திரனின் தலையின் பின்புறம் வேகமாக அடித்தார். இதில் மகேந்திரன் மயங்கி விழுந்தார். அதை பார்த்த நண்பர்கள் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் பயந்து போய் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். 

உடனே விரைந்து வந்த ஆம்புலன்ஸ் சிகிச்சை குழுவினர் மயங்கி கிடந்த மகேந்திரனை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக அரபு நாட்டு வாலிபர் கைது செய்யப்பட்டார். மகேந்திரன் உடல் தமிழகம் கொண்டு செல்லப்பட்டு அவரது சொந்த ஊரான ராமநாதபுரத்தில் இறுதிச்சடங்கு நடைபெறும் என அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.


செய்தி: கல்ஃப் நியூஸ்

கீழக்கரை, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய ஊர்களில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்!!

No comments :


கீழக்கரை, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய ஊர்களில் உள்ள அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. 

கீழக்கரை

கீழக்கரை மேலத்தெரு உஸ்வத்துன்ஹசனா முஸ்லீம் சங்க நிர்வாகத்தின் கீழ் முள்ளவாடியில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் யூசுப் சாகிப் தலைமை தாங்கினார். செய்யது சலாகுதீன் முன்னிலை வகித்தார். விழாவில் கீழக்கரை நகரசபை தலைவர் ராவியத்துல் கதரியா ரிஸ்வான் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இதில் முஸ்லீம்சங்க நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். 



திருவாடானை

திருவாடானை யூனியனில் பாண்டுகுடி அரசு மேல்நிலைப்பள்ளி, தொண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஓரியூர் புனித அருளானந்தர் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கவுன்சிலர் ஆனிமுத்து தலைமை தாங்கினார். யூனியன் துணை தலைவர் ராமகிருஷ்ணன், தொண்டி பேரூராட்சி தலைவர் சேகுநயினா, ஒன்றிய கவுன்சிலர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் மாவட்ட கவுன்சிலர் ஆனிமுத்து மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர்கள் கிருஷ்ணமூர்த்தி, கிறிஸ்டல் ஜாய்லெட், பியட்ரஸ் அன்னஜாய், தனிஸ்லாஸ், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் சாதிக் பாட்சா, பெற்றோர் சங்க தலைவர்கள் மகாலிங்கம், ராஜா, தொண்டி நகர் அ.தி.மு.க. துணை செயலாளர் கண்ணன், ஓரியூர் பள்ளி தாளாளர் யாகு, ஆசிரியர்கள் வன்மீகநாதன், ஆல்ட்ரின் சவரிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 



ஆர்.எஸ்.மங்கலம்

ஆர்.எஸ்.மங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள மாணவிகளுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை அமலா தங்கத்தாய் தலைமை தாங்கினார். யூனியன் தலைவர் வ.து.ந.ஆனந்த், ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி தலைவர் சிராஸ்நிஷா அஜ்மல்கான், ஒன்றிய கவுன்சிலர், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் யூனியன் தலைவர் மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களையும், அரசு பொதுத்தேர்வில் மாநில அளவில் 4வது இடத்தையும், மாவட்ட அளவில் முதலிடமும் பிடித்த மாணவி சங்கீதாவுக்கு தங்க மோதிரம் வழங்கி பாராட்டினார். இதில் பேரூராட்சி கவுன்சிலர் உஷாராணி உள்பட மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் ஜான்பிரிட்டோ நன்றி கூறினார். 


செய்தி: தினத்தந்தி