முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, March 23, 2016

மக்கள் நலக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார்!!

No comments :
மக்கள் நலக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவிற்கு 124 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் நலக்கூட்டணியில் உள்ள கட்சிகள் 110 தொகுதிகளில் போட்டியிடும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மக்கள் நல கூட்டணி தலைவர்கள், இன்று காலை தேமுதிக தலைவர் விஜயகாந்தை அக்கட்சி அலுவலகத்தில் சந்தித்து பேசிய பின்னர் இது அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு இழுக்க திமுக, பாஜக, மக்கள்நல கூட்டணி ஆகிய கட்சிகள் முயற்சி செய்து வருகின்றன. இந்த நிலையில், சென்னையில் கடந்த 10ம் தேதி நடந்த தேமுதிக மகளிர் தின பொதுக்கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், சட்டசபைத் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்தார். விஜயகாந்த் தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்த பிறகும், திமுக, பாஜக மக்கள்நல கூட்டணியை சேர்ந்த தலைவர்கள், தங்கள் கூட்டணிக்கு அழைப்பு விடுத்துக்கொண்டே இருந்தனர். தேமுதிக தங்கள் கூட்டணிக்கு வரும் என்ற நம்பிக்கை இருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் பேசிய திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.


சென்னையில் நேற்று முன்தினம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய மக்கள்நல கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ, ‘‘மக்கள்நல கூட்டணியில் விஜயகாந்த் கைகோர்க்க இருக்கிறார்'' என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். ஆனால், தே.மு.தி.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டு விஜயகாந்த் பேசும்போது, ‘‘அ.தி.மு.க. - தி.மு.க.வுக்கு யாரும் வாக்களிக்காதீர்கள்'' என்று அதிரடியாக கூறினார்.
அதே நேரத்தில் இனிமேல் விஜயகாந்த் உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என்று பாஜக அறிவித்து விட்டது.

இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தங்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை திங்கட்கிழமை அழைத்து பேசினார். அப்போது, தனித்து போட்டி என்ற நிலையை மாற்றிக்கொள்ளலாமா? என்று கருத்து கேட்டார். இதைத்தொடர்ந்து மக்கள்நல கூட்டணியில் தே.மு.தி.க. இணைவது உறுதியாகியுள்ளதாக கூறப்பட்டது. மக்கள் நலக்கூட்டணி தலைவர்களுக்கு தேமுதிக அழைப்பு விடுத்தது.

இதைத்தொடர்ந்து பங்குனி உத்திரமான இன்று இது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் அண்ணா நகரில் உள்ள வைகோவின் வீட்டில் தற்போது நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் மக்கள் நலக்கூட்டணித் தலைவர்கள் திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ தேமுதிக அழைப்பின் பேரில் விஜயகாந்தை சந்திப்பதாகத் தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய திருமாவளவன், தேமுதிக உடன் இன்று தொகுதி உடன்பாடு கையெழுத்தாகும் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மக்கள்நல கூட்டணி தலைவர்கள் வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் ஆகியோர் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசுவதற்காக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது சட்டசபைத் தேர்தல் கூட்டணி, தொகுதி உடன்பாடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

பேச்சு வார்த்தையின் போது விஜயகாந்த் உடன் பிரேமலதா, சுதீஷ் ஆகியோரும் பங்கேற்றனர். கூட்டத்தில் மக்கள் நலக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் தேமுதிக 124 தொகுதிகளிலும் மக்கள் நலக்கூட்டணி 110 தொகுதிகளிலும் போட்டியிடும் என தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)