முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, November 26, 2016

விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் ஊக்க உதவித்தொகை பெற நவ.,30க்குள் விண்ணப்பிக்கலாம்!!

No comments :

ராமநாதபுரம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வழங்கப்படும், விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் ஊக்க உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். 

கலெக்டர் நடராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 2016--17ல் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், கல்லுாரி, பல்கலையில் படிக்கும் தகுதியான விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி வீரர்கள், வீராங்கனைகளுக்கு 10 ஆயிரம் ரூபாயும், கல்லுாரி, பல்கலை விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு 13 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.

கடந்த 2015 ஜூலை 1 முதல் 2016 ஜூன் 30 வரையிலான காலத்தில் விளையாட்டுத்துறையில் வெற்றி பெற்ற தகுதியும், திறனும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
தேசிய அளவிலான பள்ளி விளையாட்டு குழுமம், அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கழகங்கள், இந்திய விளையாட்டு குழுமம் நடத்திய போட்டிகள், அகில இந்திய பல்கலை இடையேயான போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை 10 ரூபாய் செலுத்தி ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலகத்தில் பெறலாம். 

இணையதளத்தில் பெறும் விண்ணப்பத்துடன், 10 ரூபாய்க்கு உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் என்ற பெயரில் அஞ்சல் ஆணையாகவோ, அல்லது டி.டி., இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் தக்க அசல் மற்றும் நகல் சான்றுகளுடன் நவ.,30க்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் குரூப்–1 போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு!!

No comments :
ராமநாதபுரத்தில் குரூப்–1 போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பை மாவட்ட கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் தொகுதி– 1 நிலை அலுவலர் பணியிடங்களுக்கு உரிய போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பை மாவட்ட கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

தமிழ்நாடு அரசின் மூலம் இளைஞர் நலனை மேம்படுத்தும் வகையில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப்–1 நிலை அலுவலர் பணியிடங்களுக்குரிய போட்டித்தேர்வுகளில் பங்கு பெற்று வெற்றி பெறுவதை லட்சியமாக கொண்டுள்ள எண்ணற்ற இளைஞர்களுக்கு உறுதுணையாக ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குரூப்–1 நிலை அலுவலர் பணியிடங்களுக்குஉரிய போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடங்கி வைக்கப்பட்டுஉள்ளது.இந்தபயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் 248 இளைஞர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து கொண்டு அடையாள அட்டை பெற்றுள்ளனர். இந்தபயிற்சி வகுப்பு வாரந்தோறும் திங்கட்கிழமை தவிர மீதமுள்ள 6 நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடத்தப்படும்.

இதில் கலந்து கொண்டுள்ள இளைஞர்களுக்கு பொது அறிவு, வரலாறு, அறிவியல், தொழில் நுட்பம், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களில் இருந்து போட்டித் தேர்வுக்கு தேவையான பல்வேறு பிரிவுகளின்கீழ் பயிற்சியும், பாடப்புத்தகங்களும் வழங்கப்படுகிறது. இதுதவிர அரசுத்துறைகளில் பணிபுரிந்து வரும் இந்திய ஆட்சிப்பணி நிலை அலுவலர்கள், துணை ஆட்சியர் நிலை அலுவலர்கள் கலந்து கொண்டு அவ்வப்போது பயிற்சி வகுப்பை நடத்துவதோடு, தங்களது போட்டித்தேர்வு அனுபவங்களை இளைஞர்களிடம் பகிர்ந்து கொள்ளும் வகையில் பயிற்சி வகுப்பை நடத்த திட்டமிடப்பட்டுஉள்ளது.

எனவே நடைபெறவுள்ள குரூப்–1 தேர்வில் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ள இளைஞர்கள் அனைவரும் வெற்றி பெற்று நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


அப்போது மாவட்ட வேலைவாய்ப்பு துறை உதவி இயக்குனர் அபுபக்கர் சித்திக் உடன் இருந்தார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் ரூ.13 லட்சம் மதிப்பிலான ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் பிடிபட்டது, ஹவாலா பணமா??

No comments :
ராமநாதபுரத்தில் அரசுப்பேருந்தில் வெள்ளிக்கிழமை ரூ.13 லட்சம் மதிப்பிலான ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை போலீஸார் கைப்பற்றினர். அவை ஹவாலா பணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை பாரதியார் நகரைச் சேர்ந்த கருப்பையா மகன் வெங்கடேசன் (40). மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநரான இவர் மதுரையிலிருந்து ராமநாதபுரத்துக்கு அரசுப்பேருந்தை ஓட்டிச்சென்றார்.  

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்ட பேருந்தில் மதுவிலக்குப் போலீஸார் பேருந்தில் சோதனை நடத்தினர். போலீஸார் ஓட்டுநர் வெங்கடேசனிடம் இருந்த பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்தனர்.  


அதில் பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுகள் 13 வீதம் ரூ.13 லட்சம் இருந்தது. அவரிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர், மதுரை பேருந்து நிலையத்தில் ஒருவர் பொட்டலத்தைக் கொடுத்து ராமநாதபுரம் மதுரையார் தெருவில் வசிக்கும் வெற்றிவேல் மகன் நித்தியானந்தம் (42) என்பவரிடம் கொடுக்குமாறு கூறியதாக தெரிவித்தார்.

இதன்பேரில் போலீஸார் நித்தியானந்தத்தைப் பிடித்து விசாரணை நடத்தியதில், மதுரையை சேர்ந்த புகாரி என்பவர் ராமநாதபுரத்தில் உள்ள ரசாக் தாகா என்பவரிடம் பார்சலை ஒப்படைக்குமாறு கூறியதாகவும்,பணம் என்னுடையது கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து ரூ.13 லட்சத்தையும் போலீஸார் பறிமுதல் செய்து நித்தியானந்தத்திடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நித்தியானந்தம் குறிப்பிட்ட இரு நபர்களையும் தேடி வருகின்றனர்.  
 பேருந்தில் கைப்பற்றப்பட்ட பணம் ஹவாலா பணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் வருமான வரித்துறை அதிகாரி சி.பாண்டி தலைமையிலான குழுவினரும் கேணிக்கரை காவல் நிலையத்தில் நித்தியானந்தத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக மேலும் சிலர் சிக்குவார்கள் எனவும் காவல்தறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)