முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, December 26, 2015

கீழக்கரை கல்லூரியில் தமிழக அரசின் மடிக்கணினி மற்றும் பெரியார் விருது வழங்கும் விழா!!

No comments :
கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில், மாணவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா மடிக்கணினி மற்றும் பெரியார் விருது வழங்கும் விழா நடைபெற்றது.





150 மாணவ மாணவியருக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா மடிக்கணிணி வழங்கப்பட்டது.

10 மாணாக்கர்கள் பெரியார் விருது பெற்றனர், விருதுடன் சேர்த்து ரூ. 10,000/- ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் திரு.சுந்தரராஜன், திரு. அன்வர் ராஜா எம்.பி, இராமநாதபுர மாவட்ட செயலாளர் திரு.தர்மர், கீழக்கரை நகராட்சி தலைவர்கள், இளைஞர் அணி செயலாளர் திரு. இம்பாலா சுல்தான், மற்றும் இதர அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பொறியியல் கல்லூரி முதல்வர் திரு.ஜகபர் மற்றும் பாலிடெக்னிக் முதல்வர் திரு.அலாவுதீன் ஆகியோர் வரவேற்று நன்றிகூறினர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் இம்மாதம் 27ஆம் தேதி வீரர்கள் தேர்வு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் இம்மாதம் 27ஆம் தேதி சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் கிரிக்கெட் பயிற்சிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலர் கே.டி. பிரபாகரன் வியாழக்கிழமை கூறியதாவது: 14,16 மற்றும் 19 வயதுக்கு உள்பட்டவர்களுக்கான கிரிக்கெட் பயிற்சிக்கான தேர்வு இம்மாதம் 27ஆம் தேதி காலை 10 மணிக்கு சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.

பங்கேற்க விரும்புவோர் 9626984212 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

பசங்க 2 - தமிழ் திரை விமர்சனம்!!

No comments :
நடிகர்கள்: சூர்யா, அமலா பால், பிந்து மாதவி, கார்த்திக் குமார், வித்யா பிரதீப், நிஷேஷ், பேபி வைஷ்ணவி, முனிஸ்காந்த் இசை: ஆரோல் கரோலி
ஒளிப்பதிவு: பாலசுப்பிரமணியெம்
தயாரிப்பு: 2 டி என்டர்டெயின்மென்ட்
எழுத்து - இயக்கம்: பாண்டிராஜ்




பசங்க உலகம் பாண்டிராஜுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது.. பிடிபட்டும் இருக்கிறது. முதல் படம் பசங்க அழுத்தமாக இருந்தது... இந்த பசங்க 2 அழுத்தமாக, கூடவே கொஞ்சம் நகரத்துப் பளபளப்புடன் வந்திருக்கிறது. இரண்டு இளம் தம்பதியர். சென்னையில் வெவ்வேறு இடங்களில் வசிப்பவர்கள். இரு தம்பதியருக்கும் இரண்டு குழந்தைகள். இரு குழந்தைகளுமே சரியான வாண்டுகள். இவர்கள் என்ன செய்தாலும் அது அந்தப் பெற்றோருக்கு எரிச்சலைத் தருகிறது. சுற்றியிருப்பவர்கள் சண்டைக்கு வருகிறார்கள்.

இவர்களை இப்படியே விட்டால் நிம்மதி போய்விடும் என நினைத்து ஹாஸ்டலில் சேர்க்கிறார்கள். அங்கும் ஏகப்பட்ட குட்டி கலாட்டா செய்து தப்பி வீட்டுக்கு வந்துவிடுகிறார்கள். இனி ஹாஸ்டலே வேண்டாம்... நீங்கள் சொல்வதைக் கேட்கிறோம் என குழந்தைகள் சத்தியம் செய்கிறார்கள். அந்த நேரத்தில்தான் அந்தத் தம்பதிகள் டாக்டர் சூர்யாவைச் சந்திக்கிறார்கள். டாக்டர் சூர்யா - அமலா தம்பதி ஒரு ஐடியல் ஜோடி. குழந்தைகள் வளர்ப்பில் அவர்களைப் போன்ற உன்னத தம்பதிகளைப் பார்க்க முடியாது.

இந்த தம்பதிகளின் பிரச்சினை என்ன என்பதைக் கண்டறிந்து அவர்களைச் சரிசெய்வதுடன், அவர்களின் குழந்தைகளின் திறமையை எப்படி உணர வைக்கிறார் என்பது மீதி. குழந்தைகளின் உலகம் வேறு. அந்த உலகைப் பார்க்க, கமர்ஷியல் சமரசங்களில் சிக்கி அல்லாடும் பெற்றோரு வேறு ஒரு மனநிலை தேவைப்படுகிறது என்பதை ரொம்ப கலர்ஃபுல்லாகச் சொல்லியிருக்கிறார் பாண்டிராஜ். ஆனால் பிரச்சினைக்குரிய பெற்றோர், குழந்தைகளைக் காட்டிய விதத்தில் தெரியும் 'ரியலிஸம்', சூர்யா தம்பதிகள், குழந்தைகளைக் காட்டும்போது 'உட்டோப்பியனிஸ'மாகிவிடுகிறது.. அதாவது முழுக்க கற்பனையுலகம்! இப்படி ஒரு தம்பதி - குழந்தைகள் இருப்பார்களா என்று தெரியவில்லை... இருந்தா நல்லாருக்கும் என கமல்தனமாக சொல்லத் தோன்றுகிறது, சூர்யா - அமலா மற்றும் அவர்கள் குழந்தைகளைப் பார்க்கும்போது.

அந்த டேலன்ட் போட்டி டிவி ஷோ மாதிரி இருந்தாலும், அந்த சுட்டிப் பெண் கதை சொல்லும்போது கலங்கடித்துவிடுகிறாள். சூர்யா கெஸ்ட் ரோல் என்று சொன்னாலும், இந்தப் படத்தை உருவாக்கியது, இமேஜை அப்படி ஓரமாக வைத்துவிட்டு இறங்கி நடித்திருப்பது போன்றவற்றால்... அவர்தான் படத்தின் ஹீரோ. வெல்டன் சூர்யா!

அமலா பால் முன்பை விட ரொம்ப அழகாகத் தெரிகிறார், ஏற்றுக் கொண்ட வேடத்தை பக்குவமாக, கச்சிதமாக செய்த விதத்தில். பிந்து மாதவி, கார்த்திக் குமார், முனீஸ்காந்த், வித்யா என எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அதிலும் பணக்காரராக இருந்தும் போகும் இடத்திலெல்லாம் ஏதாவது ஒரு பொருளைச் 'சுடும்' முனீஸ்காந்த் கவர்கிறார்.

பாலசுப்பிரமணியெத்தின் ஒளிப்பதிவு காட்சிகளை வண்ணமயமாக்கியிருக்கிறது. அருள் கரோலியின் பின்னணி இசை உறுத்தவில்லை. பிஸினஸ், வேலை என பரபரக்கும் தம்பதியருக்கு குழந்தை வளர்ப்பு பற்றி பொறுமையாக க்ளாஸ் எடுத்திருக்கிறார்கள் பாண்டிராஜும் சூர்யாவும். கட்டாயம் பார்க்க வேண்டிய பாடம்!

விமர்சனம்: ஒண் இண்டியா

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் - கீழக்கரை சாலையில் தோட்டக்கலைக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் நடைபெறுகிறது!!

No comments :
ராமநாதபுரம் அருகே ஐந்திணை மரபணுப் பூங்காவில் தோட்டக்கலைக் கண்காட்சியை தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
அச்சடிப்பிரம்பு கிராமத்தில் உள்ள மரபணுப் பூங்காவில், தோட்டக் கலைத்துறையால் நடத்தப்படும் இக்கண்காட்சியில் காய்கறிகள், மலர்களில் பல்வேறு சிற்பங்களை வடிவமைத்து பார்வைக்கு வைத்துள்ளனர்.

மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம், தமிழக முதல்வர் ஜெயலலிதா, விநாயகர், ஏசுநாதர், வாத்து, முயல், கொக்கு, ஆமை, கோழி, சேவல், யானை, டைனோசர், டால்பின், வண்ணத்துப்பூச்சி, பனிக்கரடி உள்ளிட்ட சிற்பங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும், பல்வேறு வகையான ரோஜாப் பூக்கள், பிளாஸ்டிக் போன்ற இயற்கைப் பூக்களான ஹெலிகோனியா, காட்டுப்பூக்களான உலர்மலர்கள் உள்பட 20-க்கும் மேற்பட்ட மலர் வகைகளும் கண்காட்சியில் உள்ளன.




இக்கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.  திறப்பு விழாவில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ. முருகன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் மு.சுந்தரபாண்டியன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ச.தமிழ்வேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி இயக்குநர் இளங்கோவன் வரவேற்று பேசினார். கண்காட்சி ஏற்பாடுகளை பூங்கா அலுவலர் அழகேசன் தலைமையிலான அதிகாரிகள் செய்திருந்தனர்.



வெறும் மூன்று நாட்கள் என்பதனை மறுபரிசீலனை செய்து விடுமுறை நாட்கள் அதிகமிருப்பதால் மாவட்ட மக்கள் அனைவரும் கண்டுகளிக்கும் வண்ணமாக இன்னும் ஒரு வாரக் காலம் நீட்டித்து தர மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

செய்தி: திரு. ஷேக் அப்துல்லாஹ், இராமநாதபுரம்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)