முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Friday, April 22, 2022

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்!!

No comments :

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று பள்ளி, கல்வித்துறை தெரிவித்துள்ளது.

 

​ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறுபான்மை யற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 2022-23-ம் கல்வியாண்டிற்கு குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி 25 சதவீத இடஒதுக்கீட்டில் 155 பள்ளிகளில் 1817 இடங்களுக்கு இணையதள வாயிலாக விண்ணப்பித்து மாணவ, மாணவிகள் பள்ளியில் சேர்க்கப்படுவார்கள் என்று பள்ளி கல்வித்துறையினர் தெரிவித்து உள்ளனர். 

 

இதன்படி பள்ளிகளில் எல்.கே.ஜி.வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் rte.tnschools.gov.in என்ற இணையதள முகவரியில் மே 18-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை பதிவேற்ற வேண்டும்.

 


மாவட்ட, வட்டார கல்வி அலுவலகங்கள், அந்தந்த பள்ளிகள் மற்றும் அரசு இ-சேவை மையங்களில் பதிவேற்றலாம். விண்ணப்பத்துடன் போட்டோ, சாதி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், தாய், தந்தையின் ஆதார் அட்டைகள், இருப்பிட சான்று, ரேசன் கார்டு, வாக்காளர் அட்டை, வருமான சான்று ஆகியவற்றை பதிவேற்ற வேண்டும்.

 

ரூ.2 லட்சத்திற்குள் வருவாய் உள்ள வாய்ப்பு மறுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முஸ்லிம்கள், மிகவும் பிற்படுத் தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், தாழ்த்தப் பட்டோர் மற்றும் பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட பள்ளி கல்வித்துறையினர் தெரிவித்து உள்ளனர்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Tuesday, April 12, 2022

ராமேசுவரத்தில் போலீசார் வாகனத்தை அனுமதிக்காததால், பெண் ஒருவர் உயிரிழந்தார்!!

No comments :

மகாராஷ்டிரா மாநிலம் டேஸ் முக் நகர் பகுதியில் இருந்து ராமதாஸ் மற்றும் அவரது மனைவி சந்தா பாய் (வயது72) ராமேசுவரம் கோவிலுக்கு வந்தனர்.

 

தெற்கு ரத வீதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்த இவர்களில் சந்தா பாய்க்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அந்த தங்கும் விடுதியில் இருந்து போலீசார் தடுப்பு பகுதிக்கு வந்து ஆட்டோ அல்லது வேறு ஏதாவது ஒரு வாகனத்தை அனுமதிக்குமாறும் அவரது குடும்பத்தினர் கேட்டுள்ளனர்.

 

ஆனால் போலீசார் எந்த வாகனத்தையும் அனுமதிக்கவில்லை.

 


இதனால் ஆம்புலன்ஸ் காலதாமதமாக வந்து சேர்ந்தது. பின்னர் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் சிறுது நேரத்துக்கு முன்னதாக இறந்ததாக தெரிவித்தார்.

 

பின்னர் அந்த பெண்ணின் உடலை சொந்த மாநிலத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர்.

 

போலீசார் உடனடியாக வாகனத்தை அனுமதித்திருந்தால் இந்த இறப்பை தவிர்த்திருக்கலாம் என்று அந்தப் பகுதி மக்கள் கூறினார்கள்.

 

செய்தி: தினத்தந்தி


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Saturday, April 9, 2022

ராமநாதபுரத்தில் ஏப்-19 ஆம் தேதி பேச்சுப் போட்டிகள்; முதல் பரிசு ரூ.5 ஆயிரம்!!

No comments :


அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி ராமநாதபுரத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பேச்சுப் போட்டிகள் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது.

 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சங்கர்லால்குமாவத் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

 

அம்பேத்கர் பிறந்த தினத்தையொட்டி வரும் ஏப். 19 ஆம் தேதி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

 

ராமநாதபுரம் நகரில் உள்ள சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாவட்ட அளவில் நடைபெறவுள்ள இப்போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு

முதல் பரிசாக ரூ.5 ஆயிரம்,

இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம்,

மூன்றாம் பரிசாக ரூ. 2 ஆயிரம் என தனித்தனியாக வழங்கப்படும்.

 

போட்டிகளில் பங்கேற்கும் அரசுப் பள்ளி மாணவர்களில் இருவர் தேர்வு செய்யப்பட்டு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

 


பள்ளி அளவில் 30 மாணவர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படவுள்ளனர். ஆகவே, மாவட்ட, முதன்மைக் கல்வி அலுவலரைத் தொடர்புகொண்டு பேச்சுப் போட்டியில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் பங்கேற்கலாம்.

ஒரு கல்லூரியில் இருந்து 2 பேர் மட்டுமே பங்கேற்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Tuesday, April 5, 2022

மதுரை-ராமேஸ்வரம் வழித்தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படுமா?!!

No comments :


மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு காலை, மாலை என இரண்டு ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.

கூடுதலாக ரயில்கள் இயக்க வேண்டும் என வியாபாரிகள், பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மதுரையில் இருந்து ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரத்திற்கு தற்போது இரண்டு சிறப்பு ரயில் தினந்தோறும் இயக்கப்படுகிறது. மதுரையிலிருந்து மாலை 6:10மணிக்கும், ராமேஸ்வரத்திலிருந்து காலை 5:40மணி சிறப்பு ரயில்கள் புறப்படுகிறது.



ராமநாதபுரத்திலிருந்து மதுரைக்கு தினமும் காலை 6:50 மணிக்கும், ராமேஸ்வரத்திற்கு இரவு 8:40 மணிக்கும் செல்கிறது. இவ்வழிதடத்தில் ஏற்கனவே தினமும் ஆறுமுறை ரயில்கள் இயக்கப்பட்டன.

தற்போது இருமுறை மட்டும் இயங்குவதால் தொழிலாளர்கள், அலுவலர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ரயிலில் பயணம் செய்ய முடியவில்லை. ஆகையால் வியாபாரிகள், அலுவலர்கள், பொதுமக்கள் வசதிக்காக மதுரையிலிருந்து காலையிலும், ராமேஸ்வரத்தில் இருந்து மாலை நேரங்களில் கூடுதலாக ரயில் இயக்க தென்னக ரயில்வே முன்வர வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Monday, April 4, 2022

ராமநாதபுரத்தில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ.1 கோடி மதிப்பிலான வைரம் பறிமுதல்; ஒருவர் கைது!!

No comments :

ராமநாதபுரத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.1 கோடி மதிப்பிலான பட்டை தீட்டப்படாத 160 கிராம் வைரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கீழக்கரையை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

 

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் இருந்து ராமநாதபுரம் வழியாக விற்பனைக்காக விலை உயர்ந்த சிலை, வைரம் முதலியவை கடத்தி செல்லப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக்கிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதனை தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், சரவணன் ஆகியோர் ரெயில்வே கேட் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் அமர்ந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் புகைபிடித்து கொண்டிருந்தவரை விசாரிக்க முயன்றனர். ஆனால் போலீசாரை கண்டதும் அந்த நபர் தப்பி ஓட முயன்றார். போலீசார் விரட்டி மடக்கி பிடித்து விசாரித்தபோது அவர் கீழக்கரை புது கிழக்குத்தெரு  யூசுப் சுலைமான் (வயது 36) என்பது தெரிந்தது. 


 


மேலும் சோதனையிட்டபோது அவர் வைத்திருந்த துணிப்பையில் சிறிய கற்கள் போன்று இருந்தது. மேலும் சிறிய கருவி போல் ஒன்றும் வைத்திருந்தார். அதுகுறித்து கேட்டபோது முன்னுக்குபின் முரணாக பதில் கூறினார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். 

 

இந்த விசாரணையில் அவை வைரகற்கள் என்றும், கீழக்கரையில் இருந்து வாங்கி வந்துள்ளதாகவும், தான் ஒரு வியாபாரி என்றும் தெரிவித்துள்ளார். வியாபாரிக்கான ஆவணத்தை கேட்டபோது இல்லை என்றதால் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

 

பின்னர் அந்த கற்களை ஒரு நகை கடையில் சோதித்தபோது அது வைரம் தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர். 2 கவர்களில் மொத்தம் 160.9 கிராம் வைர கற்கள் இருந்தது. அவர் வைத்திருந்த சிறிய கருவி வைரத்தை தரம் பரிசோதிக்கும் கருவி என்பது தெரிந்தது.

 

இதையடுத்து திருச்சியில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி அந்த  வைர கற்களை பரிசோதித்ததில் தோண்டி எடுக்கப்பட்ட பட்டை தீட்டப்படாத சுத்தமான வைரம் என்று அறிக்கை பெறப்பட்டது. இந்த வைரங்களின் மதிப்பு ரூ.1 கோடி வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. 

 

யூசுப் சுலைமானிடம் விசாரித்தபோது கீழக்கரையில் கோழிக்கறி கடை வைத்து வியாபாரம் செய்யும் சுல்தான் மற்றும் அசார் ஆகியோரிடம் இருந்து வாங்கி வந்ததாக தெரிவித்துள்ளார். இவரை வைத்தே அவர்களிடம் பேசியபோது சர்புதீன் என்பவரிடம் வாங்கியதாக தெரிவித் துள்ளார். இதனால் தனிப்படை போலீசார் அவர்களை தேடி சென்றுள்ளனர். 

 

இவர்களிடம் பெறும் தகவலின் அடிப்படையிலேயே இந்த வைரம் உண்மையில் யார் கொடுத்து அனுப்பியது, அவர்களுக்கு எங்கிருந்து வந்தது, இதனை யாருக்காக கொடுத்து அனுப்பினார்கள் என்பது போன்ற விவரங்கள் தெரியவரும்.

 

முதல்கட்ட விசாரணையில் இந்த வைரம் ரஷியா பகுதியில் இருந்து வாங்கி வந்திருக்கலாம் என்றும், அங்கு போர் நடந்து வருவதால் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்த வைரம் கொடுத்தனுப்பப்பட்டு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. பொதுவாக ரஷியாவில் தான் அதிக அளவிலான வைரம் வெட்டி எடுக்கப்படுவதாகவும் அந்த வைரத்திற்கு தான் மதிப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது.

 

வைரம் வைத்திருப்பதற்கு உரிய ஆவணங்களை காட்டினால் ஒப்படைத்து விடுவதாகவும், இல்லாவிட்டால் இதில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

 

ராமநாதபுரத்தில் ரூ.1 கோடி வைரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தி: தினத்தந்தி


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.