முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, December 11, 2018

பாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்!!

No comments :


ராமநாதபுரம் மாவட்டத்துடன் ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. 104 ஆண்டுகளை கடந்த பாம்பன் ரெயில் பாலம் வழியாக ரெயில் போக்குவரத்து சிறப்பாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தில் கடந்த 4–ந் தேதி அன்று சில இடங்களில் விரிசல் ஏற்பட்டது. விரிசல் ஏற்பட்ட பகுதி உடனடியாக சீரமைக்கப்பட்டாலும் தூக்குப் பாலத்தை முழுமையாக பராமரிக்கும் பணிகளை மேற்கொள்ள ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

இந்தநிலையில் 6 நாட்களுக்கு பிறகு பாம்பன் ரெயில் தூக்குப் பாலத்தில் சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் நேற்று முதல் தொடங்கின. அதற்காக பெரிய ஜெனரேட்டர், டிராலி மூலம் கொண்டு வரப்பட்டு தூக்குப் பாலம் அருகே உள்ள நடை பாதையில் வைக்கப்பட்டு உள்ளது.சீரமைப்பு பணிக்காக திருச்சியில் இருந்து ஏராளமான தொழிலாளர்களும் வந்துள்ளனர். விரிசல் விழுந்துள்ள இரும்பு இணைப்புகளில் புதிய தகடுகளை பொருத்தி சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது பற்றி ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

பாம்பன் ரெயில் தூக்குப் பாலத்தில் சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. பகலில் மட்டுமே நடைபெறும் இந்த பணிகளை இன்னும் ஓரிரு நாளில் இருந்து இரவிலும் மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம். வெல்டிங் செய்யும் பணிகள் முழுமையாக முடிந்த பின்பு தூக்குப் பாலத்தில் புதிதாக அலுமினிய பெயிண்ட் அடிக்கப்படும். தூக்குப் பாலத்தின் பராமரிப்பு பணிகளை இந்த மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

செய்தி: தினதந்தி(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Monday, December 10, 2018

கீழக்கரை இந்தியன் வங்கி இடமாற்றம், புதிய அலுவலக திறப்புவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு!!

No comments :

 தபால் அலுவலக சாலையில் மாடி பகுதியில் செயல்பட்டு வந்த இந்தியன் வங்கி தற்போது கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் இருக்கும் சித்தி விநாயகர் கோவில் எதிர்புறம் இம்பாலா சுல்தான் காம்ப்ளக்சில்
மாற்றப்பட்டு புதிய அலுவலகம் இன்று திறக்கப்பட்டது.

இஸ்லாமிய பைத்துல் மால் செயலாளர் அப்துல் மலீக் திறந்து வைத்தார்.வங்கியின் பாதுகாப்பு பெட்டக அறையை காம்ப்ளக்ஸ் உரிமையாளர் இம்பாலா சுல்தான் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், கீழக்கரை DSP, கீழக்கரை ரோட்டரி சங்கத்தினர், அ.தி.மு.க பிரமுகர் இம்பாலா உசைன் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

வங்கியின் மேலாளர்கள் மற்றும் ஊழியர்கள் விழா ஏற்பாட்டினை செய்திருந்தனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

108 சேவைக்கான டிரைவர், டெக்னீசியன் பணிக்கான தேர்வு நாளை (டிச-11) நடக்கிறது!!

No comments :
ஆம்புலன்ஸ் 108 சேவைக்கான டிரைவர், டெக்னீசியன் பணிக்கு இன்று பரமக்குடி அரசு மருத்துவமனையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்
செல்வன் கமுதியில் தெரிவித்தார்.


அவர் கூறியதாவது:

மெடிக்கல் டெக்னீசியன் பணிக்கு இளங்கலை அறிவியல் படிப்பான தாவரவியல், விலங்கியல், மைக்ரோ பையாலஜி, பையோ- கெமிஸ்ட்ரி, அல்லது 'பிளஸ் 2' தேர்ச்சியுடன், 2 ஆண்டுகள் நர்சிங் அல்லது 3 ஆண்டு நர்சிங், அல்லது இளங்கலை நர்சிங் படித்திருக்க வேண்டும்.

19- 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

13,650 ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆம்புலன்ஸ் டிரைவர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகு ரக வாகன லைசென்ஸ், மூன்றாண்டுகளுடன் 'பேஜ் லைசென்ஸ்' பெற்று, ஓராண்டு நிறைவு பெற்றிருக்கவேண்டும்.

24- 35 வயதிற்குள் தேவை.

13,100 ரூபாய் சம்பளம் வழங்கப்படும்.

கூடுதல் தகவலுக்கு 73977 24828, 73974 44156 அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, December 9, 2018

கீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்!!

No comments :
மத்திய அரசின் 'டிராய்' என்ற தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் குறை கேட்பு முகாம் கீழக்கரையில் நாளை(டிச.10) நடக்கிறது.

கீழக்கரை உசைனீயா மகாலில் நடக்கும் முகாமில், அன்றாடம் பயன்படுத்தும் தொலைத்தொடர்பு சாதனங்களில் உள்ள குறைகளை
வாய்மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் தெரிவிக்கலாம்.ஏர்டெல், ஜியோ, வோடபோன், ஐடியா, பி.எஸ்.என்.எல்., உள்ளிட்ட அனைத்து கம்பெனி நெட்ஒர்க்கிலும் உள்ள குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். கீழக்கரை அனைத்து ஜமாத்தார்கள், சமூக நல அமைப்புகள், பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்பாடுகளை கீழக்கரை நுகர்வோர் சங்கம், மக்கள் டீம் அமைப்பினர் செய்து வருகின்றனர்.


செய்தி: கீழை தாஹீர்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Thursday, December 6, 2018

ஐந்திணை மரபணு பூங்கா சேதங்களை சரி செய்ய கோரிக்கை!!

No comments :
ராமநாதபுரம் அச்சடிப்பிரம்பு ஐந்திணை மரபணு பூங்காவில் எல்லா வசதிகளும் இருந்தும் எதுவும் செயல்படாமல் காட்சி பொருளாக உள்ளன.

ராமநாதபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் அச்சடிபிரம்பு கிராமத்தில் 10 ஏக்கரில் 7 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்
உருவாக்கப்பட்ட ஐந்திணை மரபணு பூங்கா தோட்டக்கலைத் துறை சார்பில் மூன்று ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

பூங்கா நுழைவு வாயிலில் கட்டணம் வசூல் கட்டடத்தின் மேற்கூரை பெயர்ந்து அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. பூங்கா நடைபாதையில் கற்கள் பெயர்ந்து, தண்ணீர் தேங்கி, பாசி படிந்துள்ளது. இதனால் கொசு உற்பத்தியாகும் அபாயம் உள்ளது.
இங்கு அமைக்கபட்டிருக்கும் குடில்களின் மேற்கூரை சேதமடைந்து கந்தலாகிப் போனது. 

நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு 15 ரூபாயும், சிறியவர்களுக்கு 10 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. விடுமுறை நாட்களில் மட்டும் மக்கள் இங்கு வருகிறார்கள்.

பல கோடி ரூபாய் செலவழித்து உருவாக்கப்பட்ட பூங்காவிற்கு பயணிகள் வருகையை அதிகப்படுத்த மக்களை கவரும் வகையில் பூங்காவை
சிரமைத்து, நவீனப்படுத்த வேண்டும், என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமேசுவரத்தில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் இருந்து இயக்கப்படும்!!

No comments :
ராமேசுவரம் தீவை மண்டபத்துடன் இணைக்கும் பாம்பன் ரெயில் பாலத்தில் அனைத்து ரெயில்களும் 20 கிலோ மீட்டர் வேகத்தின் தான் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் தூக்கு பாலத்தின் மையப்பகுதியில் இணைப்பு கம்பிகளில் திடீரென சுமார் 20 அடி நீளத்திற்கு விரிசல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அதிகாரிகள் அங்கு வந்து பார்வையிட்டு சீரமைப்பு பணிகளை தீவிரப்படுத்தினர்.

இதன் காரணமாக நேற்று முன்தினம் ராமேசுவரம்–மண்டபம் இடையே ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. திருச்சி, மதுரை போன்ற ஊர்களில் இருந்து வந்த ரெயில்கள் மண்டபத்துடன் நிறுத்தப்பட்டு பின்னர் அங்கிருந்து மறுமார்க்கத்தில் மீண்டும் இயக்கப்பட்டன. காலையில் ராமேசுவரம் வந்த சென்னை ரெயில்கள் அங்கேயே நிறுத்தப்பட்டன.

ரெயில்வே அதிகாரிகள் தலைமையில் 50–க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தொடர்ந்து சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் பணிகள் நிறைவடைந்தன. இதையடுத்து தென்னக ரெயில்வே பாலங்களின் பராமரிப்பு தலைமை பொறியாளர் ரவீந்திரபாபு பாம்பன் ரெயில் பாலத்திற்கு வந்து பார்வையிட்டார். 

சுமார் 2 மணி நேர ஆய்வுக்கு பின்னர் மண்டபத்தில் இருந்து என்ஜின் மட்டும் 5 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் பாம்பனில் இருந்து 15 கிலோ மீட்டர் வேகத்தில் மீண்டும் அந்த என்ஜினை பாலத்தில் இயக்கினர். அதன் பின்னர் ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து ரெயில் பெட்டிகளும் மெதுவாக பாம்பன் ரெயில்பாலம் வழியாக மானாமதுரைக்கு கொண்டு செல்லப்பட்டன.

இதுகுறித்து தென்னக ரெயில்வே பாலங்களின் பராமரிப்பு தலைமை பொறியாளர் ரவீந்திரபாபு கூறியதாவது:– பாம்பன் தூக்கு பாலத்தில் விரிசல்கள் சரி செய்யப்பட்டு விட்டது. இருந்தாலும் அதன் உறுதி தன்மையை கருவி மூலம் ஆய்வு செய்வதற்காக சிறப்பு அதிகாரிகள் வர உள்ளனர். அவர்கள் வந்து ஆய்வு செய்த பின்னர் தான் பாலத்தில் ரெயில்கள் இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும். தற்போது இந்த தூக்குப்பாலத்தில் ரெயில்கள் இயக்கப்படமாட்டாது.

ராமேசுவரத்தில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் இருந்து இயக்கப்படும். இதேபோல மறு மார்க்கத்தில் இருந்து வரும் ரெயில்களும் மண்டபத்துடன் நிறுத்தப்படும். புதிய பாலம் கட்டுவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.


இவ்வாறு அவர் கூறினார். 

ராமேசுவரத்தில் இருந்து இயக்கப்பட்ட அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் இருந்து வழக்கமான நேரத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது. மண்டபம் வரை ரெயில்கள் இயக்கப்படுவதால் ரெயில்களில் வரும் பயணிகள் இறங்கி தாங்கள் செல்லும் பகுதிகளுக்கு பஸ்களில் சென்றுவருகின்றனர். ரெயில் பாலத்தில் ரெயில்கள் இயக்கப்படும் வரை மண்டபத்தில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கவேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Tuesday, December 4, 2018

இந்திய விமானப்படைக்கு ஆள்சேர்ப்பு - கலெக்டெர்!!

No comments :
இந்திய விமானப்படைக்கு ஆள்சேர்ப்பு வருகிற 9–ந்தேதி முதல் 14–ந்தேதி வரை நெல்லை அண்ணா அரங்கத்தில் குரூப் ஒய் பிரிவில் ஏர்மேன் பணிக்கான ஆள்சேர்ப்பு நடைபெற உள்ளது.
இதற்கு 10–ம் வகுப்பு, பிளஸ்–2 அல்லது அதற்கு இணையான தகுதியும் 50 சதவீதம் மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு 14.7.1998 – 26.6.2002 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.
மேலும் 7 பாஸ்போர்ட்டு அளவு புகைப்படம், விணணப்பதாரர் பெயர், புகைப்படம் எடுத்த தேதி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும் மற்றும் தாசில்தாரிடம் இருந்து இருப்பிடச்சான்று பெற்றிருக்க வேண்டும்.இதில் கலந்துகொள்ளும் இளைஞர்கள் எழுத்து தேர்வுக்கு தேவையான எழுதுபொருட்களை எடுத்துச்செல்ல வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களை சேர்ந்தவர்கள் வயது, தகுதியின் அடிப்படையில் இந்திய விமானப்படைக்கு சேர்வதற்கு இந்த ஆள்சேர்ப்பு திரளணியில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மேலும் விவரங்களை ராமநாதபுரம் முன்னாள் படைவீரர் நல இணை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Monday, November 26, 2018

கஜா புரல் நிவாரணம் - ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ரூ.40 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் - அமைச்சர்!!

No comments :
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ரூ.40 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தெரிவித்தார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயர் துடைக்கும் விதமாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு கட்டங்களாக இதுவரை மொத்தம் ரூ.40.45 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து  பட்டுக்கோட்டை மற்றும் திருவாரூர் ஆகிய பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் கொடிஅசைத்து அனுப்பி வைத்தார்.

அப்போதுஅவர் கூறியதாவது:-

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், தன்னார்வலர்கள் தாங்கள் அனுப்ப விரும்பும் நிவாரணப் பொருட்களை ஒருங்கிணைத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம்  நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு மையம் துவங்கப்பட்டது. இதன் மூலம் பொதுமக்கள், தன்னார்வலர்கள், அரசுத்துறை அலுவலர்கள் பங்களிப்போடு சேகரிக்கப்பட்ட நிவாரணப்பொருட்கள் சேகரிக்கப்பட்டது. 

இதன் மூலம், மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் பல்வேறு கட்டங்களாக இதுவரை மொத்தம் ரூ.40,45,510 மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம், ரூ.6,08,090 மதிப்பிலான நிவாரணப் பொருட்களுடன் ஒரு வாகனம் திருவாரூர் பகுதிக்கும், ரூ.4,05,720 மதிப்பிலான நிவாரணப் பொருட்களுடன் ஒரு வாகனம்  பட்டுக்கோட்டை பகுதிக்கும் என மொத்தம் ரூ.10,13,810 மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், தன்னார்வளர்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு மையத்திற்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர். அவை அனைத்தும்  புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பாதுகாப்பாக வாகனங்களில் அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்வாறு தெரிவித்தார்.   

இந்த நிகழ்வின் போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளாகள்; (பொது) எஸ்.கண்ணபிரான், (வளர்ச்சி) நாகேஸ்வரன், ராமநாதபுரம் வட்டாட்சியர் கார்த்திகேயன், திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்குமார், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் சுரேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.


செய்தி: தினபூமி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

கீழக்கரை துணை மின் நிலையத்தில் மின் பணியாளர் பற்றாக்குறை!!

No comments :
கீழக்கரை துணை மின் நிலையத்தில் இருந்து கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வீட்டு மின் இணைப்புகளும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிக இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. 

இதுதவிர இப்பகுதியில் 17–க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், வங்கிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இதுதவிர கீழக்கரையை ஒட்டி சின்ன மாயாகுளம், பெரிய மாயாகுளம், புது மாயாகுளம், பாரதிநகர், அளவாய்கரைவாடி, செங்கல் நீரோடை, சிவகாமிபுரம், லட்சுமிபுரம், முள்ளுவாடி, மாவிலாதோப்பு ஆகிய கிராமங்கள் உள்ளன.

தற்போது கீழக்கரை மின் நிலையத்தில் நிரந்தர பணியாளர்கள் 2 பேர் மட்டுமே உள்ளனர். 8–க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் உள்ளனர். இதில் சில பணியாளர்கள் 12 வருடத்திற்கும் மேலாக தற்காலிக பணியாளர்களாகவே பணியாற்றி வருகின்றனர். எந்த மின் பணியாளர் எந்த பகுதிக்கு செயல்படுகிறார் என்ற விவரங்கள் யாருக்கும் தெரியவில்லை.இது குறித்து முன்னாள் கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் கூறுகையில், கீழக்கரை மின் வாரிய அலுவலகத்தில் பல ஆண்டுகளாக தொலைபேசி வேலை செய்யவில்லை. எந்த பகுதியிலாவது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் அலுவலக தொலைபேசியில் தகவல் தெரிவித்தால் உடனடியாக சரி செய்ய வருவார்கள். ஆனால் பல ஆண்டுகளாக இந்த தொலைபேசி வேலை செய்யாததால் இப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

மேலும் கீழக்கரை அலுவலகத்தில் உதவி பொறியாளர் பணியிடமும் காலியாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக பணியாளர்களை நியமித்து மின் குறைபாடு சம்பந்தமாக பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.


செய்தி: கீழை தாஹீர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Tuesday, November 20, 2018

கஜா புயல் நிவாரணம்; ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 1.14 லட்சம் லிட்டர் குடிநீர் - கலெக்டர்!!

No comments :
ராமநாதபுரம்,- கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் குடிநீர் தேவைக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 1.14 லட்சம் லிட்டர் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் குடிநீர் தேவைக்கு ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 1.14 லட்சம் லிட்டர் தண்ணீர் நிரப்பிய வாகனங்களை கலெக்டர் வீரராகவராவ்   கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

அதன்பின்னர்அவர் கூறியதாவது:-

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் துயர் துடைக்கின்ற விதமாக தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் பங்களிப்பு செய்திடும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு பணிகளுக்காக நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு தீயணைப்பு, ஊரக வளர்ச்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் சார்பாக 2 குழுக்களாக மொத்தம் 40 மர அறுவை இயந்திரங்களுடன், 80 பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 


அதேபோல நெடுஞ்சாலைத் துறையின் மூலம் 6 மர அறுவை இயந்திரங்களுடன் 6 பணியாளர்கள் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் மீட்புப் பணிகளுக்கும், திருவாரூர் மாவட்டத்தில் நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் 6 குழுக்களாக 30 மருத்துவத்துறை சார்ந்த பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இதுதவிர ஆவின் மூலமாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 265 கிலோ பால் பவுடர் அனுப்பப்பட்டுள்ளது.  மேலும் பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசிய தேவையான நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்திட ஏதுவாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிவாரணப்பொருட்கள் சேகரிப்பு மையம் துவங்கப்பட்டு, பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விரும்பும் நல்லுள்ளம் கொண்ட பொதுமக்கள் தங்களால் இயன்ற அளவு நிவாரணப் பொருட்களை வழங்கலாம்.

மேலும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் குடிநீர் தேவைக்கு ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 11 டேங்கர் லாரிகளில் 1,14,500 லிட்டர் தண்ணீர் டேங்கர் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.  மேலும் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு மையத்தில் சேகரிக்கப்படும் நிவாரணப் பொருட்கள் அனைத்தும் உரிய முறையில் பாதுகாப்பாக புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இ;வ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஆ.செல்லத்துரை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணபிரான் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


செய்தி: தினபூமி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Tuesday, November 13, 2018

கஜா புயல் வருகை, ராமநாதபுர மாவட்டத்தில் தயார் நிலையில் மீட்புக்குழு - கலெக்டர்

No comments :
தென்கிழக்கு வங்க கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமானது வலுப்பெற்று கடும்புயலாக மாறி உள்ளது. இதற்கு தற்போது கஜா(யானை) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உருவாகி உள்ள இந்த கஜா புயல் நாகபட்டிணத்தில் இருந்து 720 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த கஜா புயல் முதலில் கடலூருக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே வருகிற 15–ந் தேதி கரையை கடக்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் தற்போதைய கணக்கீட்டின்படி கஜா புயல் கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே வருகிற 15–ந் தேதி கரையை கடக்கும் என்று அறிவித்துள்ளது.

இதன்காரணமாக இந்த பகுதியில் பலத்த புயல்காற்றுடன் மழை பெய்யும் என்றும் மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் கூறப்பட்டுள்ளது. கஜா புயல் வலுவிழக்க வாய்ப்பில்லை என்றும் அதிக வலுவடைந்து அதிதீவிர புயலாகத்தான் மாற வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுஉள்ளது. 15–ந் தேதி முற்பகலில் பாம்பனுக்கு இடையே கரையை கடக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதுதொடர்பாக ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது. இதில் கஜா புயலை எதிர்கொள்வது தொடர்பாகவும், மாவட்ட மக்களுக்கு குறிப்பாக மீனவர்களுக்கு கொடுக்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு உரிய உத்தரவுகள் வழங்கப்பட்டன.

இதன்முடிவில் கலெக்டர் வீரராகவ ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:–

வானிலை ஆய்வு மையம் கஜா புயல் தொடர்பாக விடுத்துள்ள எச்சரிக்கையை தொடர்ந்து முதல்–அமைச்சர் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். மாவட்ட அவசர கால நடவடிக்கை மையம் 24 மணி நேர தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுஉள்ளது. அனைத்து துறை அலுவலர்களும் விழிப்புடன் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது. வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகளை கொண்ட 15 மண்டல அளவிலான குழுக்கள் இதற்காக அமைக்கப்பட்டு உள்ளது.

39 தாழ்வான பகுதிகள் அடையாளம் காணப்பட்டு அந்த பகுதியில் தீவிரமாக கண்காணிக்கவும், உடனடி தேவைகளை நிறைவேற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்க வசதியாக 23 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் தேர்வு செய்யப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர பல்வேறு பகுதிகளில் 32 பள்ளிகள், 2 கல்லூரிகள், 91 திருமண மண்டபங்கள் என 148 பாதுகாப்பு மையங்கள் தயாராக உள்ளன. இதற்கான பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு உணவு, தண்ணீர், கழிப்பறை, ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 5 ஆயிரம் தன்னார்வலர்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுஉள்ளனர். அதிக புயல் காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்து விழ வாய்ப்பு உள்ளதால் அதனை உடனடியாக அப்புறப்படுத்த வெட்டி அகற்றும் எந்திரம், 141 ஜே.சி.பி. எந்திரங்கள், 52 பொக்லைன்கள் தயார்நிலையில் வைக்கபட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம் அனைத்து நிலைகளையும் எதிர்கொள்ளும் வகையிலும், மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களை பாதுகாக்கவும், தேவையான வசதிகள் செய்யவும் முழுஅளவில் தயாராக உள்ளது.


எனவே, மக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். மீனவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பும் வழங்கப்படும். மீனவர்கள் தற்போதைய நிலையில் கடலுக்கு செல்லவில்லை. 1077 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை மக்கள் பெற்றுக்கொள்ளலாம். இந்த சமயத்தில் பாம்புகள் தொந்தரவை தவிர்க்க பாம்பு பிடிப்பவர்கள் 21 பேர் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மாடுகளை பிடித்து பாதுகாக்க 132 பேர் தயாராக உள்ளனர். 72 அதிதீவிர பயிற்சி போலீசார் 24 மணி நேர தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். 45 ஆயிரம் மணல் மூடைகள்அ னைத்து பகுதிகளிலும் இருப்பு வைக்கப்பட்டுஉள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Monday, November 12, 2018

பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய பதிவு செய்யலாம்!!

No comments :

பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளில் இருந்து பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கவும் 2018–19–ம் ஆண்டின் தமிழ்நாட்டில் சம்பா, தாளடி, பிசான பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெற்பயிரை பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


இதன்படி நடப்பாண்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 400 வருவாய் கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்கீழ் கடன் பெறும் விவசாயிகள் தாங்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாக பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்படுவர். கடன்பெறா விவசாயிகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் பொது சேவை மையங்கள் மூலமாகவோ வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.


சம்பா பருவத்தில் நெற்பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய வருகிற 30–ந்தேதி கடைசி நாளாகும். எனவே விவசாயிகள் இறுதி நேர நெரிசலை தவிர்க்கவும், விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும் முன்கூட்டியே காப்பீட்டு தொகை செலுத்தி பதிவு செய்து பயன்பெறலாம்.


காப்பீட்டு தொகையில் விவசாயிகள் 1.5 சதவீதம் மட்டும் அதாவது ஏக்கருக்கு ரூ.341 காப்பீட்டு கட்டணமாக செலுத்தினால் போதுமானது. பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டண தொகையை செலுத்த வேண்டும். அதற்கான ரசீதை பொதுச்சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக்கொள்ளலாம். 

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)