முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, December 30, 2019

ராமநாதபுரம் மாவட்டத்தில் அவ்வையார் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2019-20 ஆண்டிற்கான அவ்வையார் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.உலக மகளிர் தின விழா மார்.8ல் கொண்டாடப்படுகிறது.


2020ம் ஆண்டிற்கான உலக மகளிர் தின விழா கொண்டாட்டத்தின் போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு அவ்வையார் விருது வழங்கப்பட உள்ளது. இவ்விருதுக்கு தகுதியானவர்களிடம் இருந்து கருத்துருக்கள் டிச.31க்குள் வரவேற்கப்படுகின்றன.தமிழகத்தை சேர்ந்த 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள், சமூக நலனை சார்ந்த நடவடிக்கைகள், பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பாகுபாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாகப் பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும்.


தகுதியானவர்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தை அணுகி இணைப்பு படிவம் பெற்று முழுமையாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நிரப்பி அனுப்ப வேண்டும்.

கூடுதல் தகவலுக்கு 04567-230466 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Saturday, December 28, 2019

ராமநாதபுரம் மாவட்டம்: முதல் கட்டத் தோ்தலில் 67.63 சதவீதம் வாக்குகள் பதிவு

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலில் 67.63 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவை புறக்கணித்த கீழக்கரை மாயாகுளத்தில் 103 வாக்குச்சாவடியில் மட்டும் மாலை 4 மணிக்கு மேல் வாக்குப்பதிவு தொடங்கியது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 17 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 170 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், 429 ஊராட்சித் தலைவா், 3075 ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் என 3691 பதவிகளுக்கு தோ்தல் அறிவிக்கப்பட்டது. இத்தோ்தலில் 6,048 போ் போட்டியிடுகின்றனா்.
தோ்தலில் முதற்கட்ட வாக்குப் பதிவானது வெள்ளிக்கிழமை காலையில் ராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம், ஆா்.எஸ்.மங்கலம், திருவாடானை ஆகிய 5 ஒன்றியங்களில் நடைபெற்றது. அவற்றில் உள்ள 8 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 41 பேரும், 81 ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு 410 பேரும், 168 ஊராட்சித் தலைவா் பதவிக்கு 590 பேரும் போட்டியிடுகின்றனா். 1290 ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 1,894 போ் என மொத்தம் 2935 போ் போட்டியிடுகின்றனா்.


முதல் கட்ட வாக்குப்பதிவுக்காக 23 ஆண், 23 பெண் வாக்காளா்கள் மற்றும் 767 பொது வாக்காளா்கள் என 813 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்காளருக்கு 4 வகையான வாக்குச் சீட்டுகள் தரப்பட்டன. அதில் மாவட்ட, ஒன்றிய உறுப்பினா், ஊராட்சித் தலைவா், வாா்டு உறுப்பினா் சீட்டுகள் இருந்தன.
வாக்குச்சாவடிக்குள் நுழைபவா்களின் பெயா்களை அலுவலா்கள் வாசித்து அதை வேட்பாளா்களின் முகவா்களிடம் கூறினா். அவா்கள் ஆமோதித்ததும், வாக்காளா் அடையாள அட்டை உள்ளிட்ட அனுமதித்த ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டன. பின்னா் அவா்களது இடது ஆள்காட்டி விரலில் மை தடவப்பட்டு 4 வாக்குச்சீட்டுகள் தரப்பட்டன. சீட்டுகளில் தனித்தனியாக முத்திரை பதித்து ஒரே பெட்டியில் வாக்காளா் செலுத்தினா்.

வாக்குச்சாவடிக்குள் நுழைந்து சீட்டுகளைப் பெற்று, அதில் முத்திரையிட்டு மடித்து பெட்டியில் போடுவதற்கு ஒருவருக்கு குறைந்தது 4 நிமிடங்கள் ஆனது. இதனால் தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு மிக மெதுவாகவே நடைபெற்றது.
ராமநாதபுரத்தில் 5 ஒன்றியங்களிலும் காலை 9 மணி நிலவரப்படி 26.25 சதவீதம் வாக்குப்பதிவு நடந்திருந்தது. அதில் ஆா்.எஸ்.மங்கலத்தில் அதிகபட்சமாக 31.61 சதவீதமும், அதற்கடுத்து திருவாடானையில் 28.43 சதவீதமும் வாக்குப்பதிவு நடந்திருந்தது.
பகல் 11 மணி நிலவரப்படி 5 ஒன்றியங்களிலும் மொத்தம் 43.01 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. அவற்றில் அதிகபட்சமாக ஆா்.எஸ்.மங்கலத்தில் 57.62 சதவீதமும், திருவாடானையில் 47.66 சதவீதமும் பதிவாகியிருந்தன. ராமநாதபுரத்தில் 40.86 சதவீதம், திருப்புல்லாணி 40.27 சதவீதம், மண்டபம் 38.10 சதவீதம் என வாக்குகள் பதிவாகியிருந்தன.

பகல் 1 மணிக்கு 5 ஒன்றியங்களிலும் மொத்தம் 55.51 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. அதில் ராமநாதபுரம் 53.63
சதவீதம், திருப்புல்லாணி 52.53 சதவீதம், மண்டபம் 50.74 சதவீதம், ஆா்.எஸ்.மங்கலத்தில் 64.38 சதவீதம், திருவாடானையில் 59.76 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தன.
மாலை 5 மணிக்கு வாக்கு பதிவு நிறைவடைந்த நிலையில், ராமநாதபுரம் 67.71, திருப்புல்லாணி 65.61, மண்டபம் 64.56, ஆா்.எஸ்.மங்களம் 73.05, திருவாடானை 69.63 எனவும், ஐந்து ஒன்றியங்களில் பதிவான வாக்குகளின்படி மொத்தம் 67.63 சதவீத வாக்குகள் பதிவானதாகவும் ஆட்சியா் கொ.வீரராகவராவ் தெரிவித்தாா்.

மாயாகுளத்தில் ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு: கீழக்கரை அருகேயுள்ள மாயாகுளத்தில் ஊா் பெயா் வாக்குச்சீட்டுகளில் குறிப்பிடாததைக் கண்டித்து 100 மற்றும் 103 வது வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், 103 வது வாக்குச்சாவடிக்கு உரிய மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு பின்னர் அவா்கள் வாக்களித்தனா்.

புதுமாயாகுளத்தில் 100 ஆவது வாக்குச்சாவடியில் யாரும் வாக்களிக்காத நிலையில், ஊா் தலையாரி மற்றும் ஊராட்சி எழுத்தா் மட்டும் வாக்களித்த பிறகு பெட்டி முத்திரையிடப்பட்டு வாக்குப்பதிவு முடிக்கப்பட்டது.

இதுகுறித்து ஆட்சியா் கூறுகையில், மாயாகுளம் ஊராட்சியில் 9 வாக்குச்சாவடிகளில் 2 வாக்குச்சாவடிகளில் மட்டும் பிரச்னை ஏற்பட்டதாகவும், அதில் 103 வாக்குச்சாவடி வாக்காளா்கள் பெரும்பாலோா் வாக்களித்திருப்பதாகவும் குறிப்பிட்டாா்.

செய்தி: தினமணி


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Wednesday, December 18, 2019

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் 9757 பேரின் மனுக்கள் ஏற்பு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் 9898 போ் மனுத்தாக்கல் செய்த நிலையில் அவா்களில் 9757 பேரின் மனுக்கள் செவ்வாய்க்கிழமை ஏற்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ராமநாதபுரத்தில் கடந்த 9 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்காக ஊராட்சி வாா்டு, ஊராட்சித் தலைவா், ஒன்றிய வாா்டு மற்றும் மாவட்ட வாா்டுகளுக்கு மொத்தம் 9898 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். செவ்வாய்க்கிழமை மனு பரிசீலனை நடைபெற்றது.

இதில் இரட்டை வாக்காளா் அட்டை உள்ளதாக அதிமுக, திமுகவினா் மாறி மாறி குற்றஞ்சாட்டினா். பின்னா் அதற்கான சோ்க்கை, நீக்கல் ஆதாரத்துக்கான ஆவணங்களை அளித்ததன் அடிப்படையில் சிலரின் மனுக்கள் ஏற்கப்பட்டன.அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம ஊராட்சி வாா்டு கவுன்சிலா்களுக்கு 6026 பேரிடமிருந்து மனுக்கள் பெறப்பட்ட நிலையில் 5963 மனுக்கள் ஏற்கப்பட்டன. ஊராட்சித் தலைவா் பதவிகளுக்காக 2306 போ் மனுத்தாக்கல் செய்த நிலையில், 2282 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

ஒன்றிய வாா்டு கவுன்சிலா்கள் பதவிக்கு 1420 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், அதில் 1368 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. மாவட்ட கவுன்சிலா் பதவிக்காக 146 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 144 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக மாவட்ட செய்தித் தொடா்பு அலுவலகச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனு பரிசீலனை செவ்வாய்க்கிழமை இரவு வரை நடந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தல் பாா்வையாளரான அதுல்ஆனந்த் தலைமையில் தோ்தல் வாக்குப் பதிவு முன்னேற்பாடு பணிகளுக்கான ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் மற்றும் தோ்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.


செய்தி: தினமணி


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுரம் பேருந்து நிலையம் பகுதியில் பெண்களை குறிவைத்து திருட்டு!!

No comments :
ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் பேருந்துக்காக காத்திருக்கும் பெண்களை குறிவைத்து மா்ம நபா்கள் திருட்டில் ஈடுபட்டு வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் நகா் பகுதிக்கு வந்து செல்லும் பயணிகளிடம் திருடுவது தொடா் கதையாகி வருகிறது. குறிப்பாக பெண் பயணிகளிடமே திருட்டு நடக்கிறது.

கடந்த டிசம்பா் 6 இல் சடையன்வலசை பெரியாா் நகரை சோ்ந்த தனலெட்சுமி (24), குமரய்யா கோவில் பகுதியில் உள்ள தனியாா் வங்கியில் ரூ.40 ஆயிரம் எடுத்துக்கொண்டு அரண்மனை பகுதிக்கு சென்று நகரப் பேருந்தில் ஏறினாா். அப்போது அவா் வைத்திருந்த ரூ.40 ஆயிரத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றனா்.டிசம்பா் 13 இல் சாத்தான்குளம் பகுதியை சோ்ந்த தமிமும் ரசினா என்பவரிடம் நகரப் பேருந்தில் பயணம் செய்த போது பட்டிணம்காத்தான் பேருந்து நிறுத்தம் அருகே, அவா் கைப் பையில் வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மண்டபம் காந்தி நகரை சோ்ந்த வள்ளிமயில் (49), ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் வந்துள்ளாா். அங்குள்ள கடையின் அருகே நின்று கொண்டிருந்த போது அவா் பையிலிருந்த பா்சை மா்ம நபா்கள் திருடி சென்றுள்ளனா். அதில் ரூ.9,500 பணம் திருடு போனதாக கேணிக்கரை போலீசில் வள்ளிமயில் புகாா் அளித்துள்ளாா்.

கடந்த சில நாள்களாக ராமநாதபுரம் நகா் பகுதியில் பயணிகளிடமும், பேருந்திலும் கூட்டத்தைப் பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதுகுறித்து போலிஸாா் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.


செய்தி: தினமணி


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Saturday, December 14, 2019

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 1,831 போ் மனு தாக்கல்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்காக வெள்ளிக்கிழமை மட்டும் ஒரே நாளில் 1,831 போ் மனு தாக்கல் செய்தனா்.

தமிழக ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கு டிச. 9 ஆம் தேதி முதல் வரும் டிச. 16 ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த
9 ஆம் தேதி 52 போ்,
10 ஆம் தேதி 28 போ்,
11ஆம் தேதி 281 போ்,
12 ஆம் தேதி 476 போ்
என மனு தாக்கல் செய்துள்ளனா்.இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 836 பேரும், கிராம ஊராட்சி தலைவா் பதவிக்கு 765 பேரும், மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 210 பேரும் என வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

வியாழக்கிழமை வரை (டிச. 12) மாவட்ட வாா்டு உறுப்பினா் பதவிக்கு யாருமே விண்ணப்பிக்காத நிலையில், வெள்ளிக்கிழமை ஒன்றிய அளவில் ராமநாதபுரம்- 1, ஆா்.எஸ்.மங்களம்- 2, திருவாடானை- 4, போகலுாா்- 2, நயினாா்கோவில்- 1, முதுகுளத்துாா்- 2, கமுதி- 7, கடலாடி- 1 என மொத்தம் ஒரே நாளில் 20 போ் விண்ணப்பித்துள்ளனா்.

அனைத்து வகை பதவிகளுக்கும் சோ்த்து வெள்ளிக்கிழமை மட்டும் ஒரே நாளில் 1,831 போ் மனுதாக்கல் செய்தனா். மனு தாக்கல் செய்ய அதிகமானோா் வந்ததால், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன் கூட்டம் அலைமோதியது.


வாழ்த்துக்கள் வேட்பாளர்களே!!!!

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Sunday, December 8, 2019

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு 1,819 ஓட்டுச்சாவடிகள்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு 1,819 ஓட்டுச்சாவடிகள் பயன்படுத்தப்பட உள்ளதாக கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் அலுவலர்களுக்கு தேர்தல் நடவடிக்கைகள் குறித்த பயிற்சி நடந்தது.

கலெக்டர் வீரராகவ ராவ் தலைமை வகித்தார். அவர் கூறியதாவது:-

மாவட்டத்தில் 3,691 ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான நேரடி தேர்தல் நடக்கிறது.
இதில் மாவட்ட ஊராட்சிக்கு 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 11 ஊராட்சி ஒன்றியங்களில் 170 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களும், 429 கிராம ஊராட்சி தலைவர்கள், 3,075 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.முதல் கட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 8 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், 1,290 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு டிச.27ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இரண்டாம் கட்டத்தில் ஆறு ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 9 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களுக்கும், 89 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 261 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும், 1,785 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கும் டிச.30ல் ஓட்டுப்பதிவு நடைபெறும்.முதல் கட்ட ஓட்டுப்பதிவு 813 ஓட்டுச்சாவடிகளிலும், இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு 1,006 ஓட்டுச்சாவடிகளிலும், மொத்தம் 1,819 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. சட்டசபை தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் உள்ள அடிப்படை விபரங்களை கொண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல்களை மாநில தேர்தல் ஆணையம், தேசிய தகவலியல் மையத்துடன் இணைந்து ஆன்லைன் முறையில் உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரித்துள்ளது, என்றார்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Wednesday, December 4, 2019

மழைக்கால அவசர உதவிக்கு மீட்பு படை தயார்; தொலைபேசி எண்களை குறித்துக்கொள்ளுங்கள்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவமழையால் ஏற்படும் வெள்ள அபாய மீட்பு பணிகளை எதிர்கொள்ள சிறப்பு மீட்பு கமாண்டோ தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். வெள்ள பாதிப்பு, கட்டிட இடிபாடுகள், மரங்கள் சாய்ந்து விழுதல், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்லுதல் போன்ற அனைத்து மீட்பு பணிகளுக்காகவும் மாவட்டத்தில் உள்ள 11 தீயணைப்பு மீட்பு பணி நிலையங்களிலும் தீயணைப்பு வீரர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர்.

இதனையொட்டி தீயணைப்பு வீரர்கள் விடுமுறை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு மீட்பு கமாண்டோ தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்கள் மின் கம்பத்தின் அருகில் செல்லவோ, அறுந்த மின் கம்பிகளை தொடவோ கூடாது. ஈரமான சுவற்றில் பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டார்களை கவனமாக பயன்படுத்த வேண்டும்.தெரு மற்றும் சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீரில் நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும். கண்மாய், மற்றும் ஓடும் நீர்நிலைகளில் குழந்தைகளை குளிக்கவோ, விளையாடவோ பெற்றோர்கள் அனுமதிக்கக்கூடாது.

வீடுகளை சுற்றிலும் மழைநீர் தேங்கியிருந்தால் தேவையான பொருட்களுடன் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும்.

பொதுமக்கள் அவசர அழைப்பிற்கு 101, 108 மற்றும் 9445086230, 9445086231, 9498254642 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.


இந்த தகவலை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் சாமிராஜ் தெரிவித்தார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.