Wednesday, February 27, 2019
கஞ்சா கடத்திக் கொண்டு வந்ததாக இளைஞர் கைது!!
ஆந்திரத்தில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கஞ்சா
கடத்திக் கொண்டு வந்ததாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை எழும்பூருக்கு சர்கார் விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை
வந்தது. இந்த ரயிலில் வந்திறங்கிய பயணிகளை மாநில போதைப் பொருள் கடத்தல் தடுப்புப்
பிரிவு போலீஸார் ரகசியமாக கண்காணித்தனர்.
அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் ஒரு
பெரிய பையுடன் வந்த இளைஞரை பிடித்து போலீஸார் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர், ராமநாதபுரம்
மாவட்டம் தொண்டி பகுதியைச் சேர்ந்த செ.பிரசன்னா (24) என்பதும்,
அவர் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து கஞ்சாவை
கடத்திக் கொண்டு வருவதும் தெரியவந்தது. | இதையடுத்து போலீஸார், பிரசன்னாவை
கைது செய்து,
வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும் விசாரணையில், பிரசன்னா அந்த கஞ்சாவை
ராஜமுந்திரியில் ரூ.40
ஆயிரத்துக்கு வாங்கியிருப்பதும், ராமநாதபுரத்தில்
அதை ரூ.3 லட்சத்துக்கு விற்க திட்டமிட்டு ரயிலில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இது தொடர்பாக போலீஸார், மேலும் விசாரணை நடத்தி
வருகின்றனர்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுரம் நகராட்சியில் குப்பைகளை அள்ளுவதற்கு பேட்டரி வாகனங்கள்!!
ராமநாதபுரம் நகராட்சியில் குப்பைகளை அள்ளுவதற்கு ரூ.50.40 லட்சம் செலவில் பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகளிலும்
தினமும் சுமார் 28
டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. அவை பட்டினம்காத்தான்
பகுதியில் திறந்த வெளியில் குவிக்கப்பட்டு வருகின்றன. தூய்மை இந்தியா திட்டத்தின்படி
நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை அந்தந்த இடத்திலேயே உரமாக்கி
மறுசுழற்சிக்கு உள்ளாக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 4 இடங்களில்
குப்பைகளை நுண்ணிய உரமாக்கும் மையங்கள் தலா ரூ.50 லட்சத்தில்
அமைக்கப்பட்டுவருகின்றன,
நகரில் குப்பைகளை சேகரிக்கும் வகையில் தலா ரூ.1.80 லட்சம் மதிப்பிலான 16
பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. அவற்றில் மக்கும்
குப்பைகள்,
மக்காத குப்பைகளை தனித் தனியாகச் சேகரிக்க 4 வாளிகள்
வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனத்தை ஆண்களும், பெண்களும் எளிதில்
இயக்கலாம் என்று அதிகாரிகள் கூறினர்.
இதைத் தவிர சிறிய ரக குப்பை சேகரிக்கும் 4 லாரிகளும்
வாங்கப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றும் ரூ.5.40 லட்சம்
மதிப்புடையவை. குப்பைகளைத் தரம் பிரித்து சேகரிக்க வாகனங்கள் வாங்கிய நிலையில், அதை
பயன்படுத்தி குப்பைகளை உரமாக்கும் மையம் செயல்பட பல மாதங்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது.
ஆனால் குப்பைகளைத் தரம் பிரித்து வாகனங்கள் மூலம் சேகரிக்க
அனைத்து நடவடிக்கையும் எடுத்துள்ளதாக நகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள்
கூறினர்.
மேலும், நகராட்சியில்
தற்போது 94
சுகாதாரப் பணியாளர்கள் நிரந்தரப் பணியில் உள்ளனர்.
இவர்களில் ஒப்பந்தப்பணி அடிப்படையில் 83 பேர் பணிபுரிகின்றனர்.
தூய்மை இந்தியா திட்டத்தின்படி 155 பேர் விரைவில் பணியில்
சேர்க்கப்படவுள்ளனர். அதன்படி நகராட்சியில் மொத்தம் 342 பேர் சுகாதார பணியில் சில மாதங்களில் ஈடுபடுத்தப்படுவர் என்றும் நகராட்சி
அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்தி:
தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Monday, February 25, 2019
பாம்பன் பாலத்தில் 26 அல்லது 27-ந்தேதி முதல் மீண்டும் ரெயில் போக்குவரத்து!!
ராமேசுவரம் பாம்பன் ரெயில்
தூக்குப்பாலத்தில் கடந்த டிசம்பர் மாதம் 4-ந் தேதி விரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து பராமரிப்பு பணிகள் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக
நடைபெற்று முழுமையாக முடிவடைந்துள்ளன. ஆனால் இதுவரை பாம்பன் ரெயில் பாலம் வழியாக
பயணிகளுடன் ரெயில் போக்குவரத்து தொடங்கப்படவில்லை.
இந்தநிலையில் பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலத்தை நேற்று தெற்கு ரெயில்வேயின் உதவி தலைமை பொறியாளர் ஸ்ரீகுமார் தலைமையிலான அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது.
இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலத்தில் நடைபெற்று வந்த பராமரிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்துவிட்டன. ரெயில் பாலம் அமைக்கப்பட்டு 100 ஆண்டுகளை கடந்துவிட்டதால் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்க வேண்டிய பாலமாகும். அதில் பொருத்தப்பட்டுள்ள இரும்புகளில் துருப்பிடிக்காமல் இருக்க 6 மாதங்களுக்கு ஒரு முறை அலுமினிய பெயிண்ட் அடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தூக்குப்பாலம் மிகவும் பழமையாகி விட்டதால் இனி மூன்று மாதத்திற்கு ஒருமுறை பெயிண்ட் அடிக்க முடிவு செய்துள்ளோம்.
புதிய ரெயில்வே பாலம் கட்டி முடிக்கப்படும் வரை தற்போது உள்ள ரெயில்வே பாலத்தில் கூடுதல் கவனம் செலுத்தி பராமரிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும்.
பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள் முடிந்து பாதுகாப்பாக உள்ளது. எனவே அந்த பாலத்தில் வருகிற 26 அல்லது 27-ந்தேதி முதல் மீண்டும் ராமேசுவரத்திற்கு பயணிகளுடன் ரெயில் போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Friday, February 22, 2019
கீழக்கரை கடைகளில் தடைசெய்யப்பட்ட தடை செய்யப்பட்ட 5 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல்!!
கீழக்கரை நகராட்சிப் பகுதியில் உள்ள கடைகளில் புதன்கிழமை
நகராட்சி ஆணையர் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டு தடைசெய்யப்பட்ட நெகிழிப்
பொருள்களை பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிப் பகுதியில் உள்ள
கடைகளில் மீண்டும் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகள், கப்புகள்
பயன்படுத்தப்படுவதாக நகராட்சி ஆணையர் தனலட்சுமிக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து ஆணையர் தலைமையிலான குழுவினர் வி.எஸ் சாலை
உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 5 கிலோ
நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடைகளின் உரிமையாளர்களுக்கு முதல்கட்டமாக
ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆய்வின் போது நகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் பூபதி, நகராட்சி
பணியாளர்கள் உடனிருந்தனர்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரியில் சட்ட உதவி மையம்!!
ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரியில் சட்ட உதவி மையம்
புதன்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்டக்
கல்லூரி மாணவர்களுக்கு சட்டப் பயிற்சிகள் அண்மையில் வழங்கப்பட்டன. பயிற்சி பெற்ற
மாணவர்கள் மூலம் பொதுமக்களுக்கு ஆணைக்குழு வழக்குரைஞர்களுடன் சேர்ந்து உதவி
செய்யும் வகையில் சட்டக் கல்லூரி வளாகத்தில் சட்ட உதவி மையம்
தொடக்கிவைக்கப்பட்டது.
இந்த மையத்தை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், முதன்மை
மாவட்ட நீதிபதியுமான அ.கயல்விழி திறந்து வைத்தார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிப்ரவரி 28 ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிப்ரவரி 28 ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என ஆட்சியர்
கொ.வீரராகவராவ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள
ஊராட்சி மன்றக் கூட்ட அரங்கில் பிப்ரவரி 28 ஆம் தேதி காலை 11.30 மணிக்கு பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
நடைபெறுகிறது.
ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் விவசாயிகளும்
விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகள்
குறித்து விவாதிக்கலாம்.
இதில் விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகள் மட்டுமே
பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Thursday, February 21, 2019
சவுதி அரேபியாவில் நடந்த வாலிபால் போட்டியில் கீழக்கரை வாலிபர்கள் இரண்டாம் இடம் பெற்றனர்!!
சவுதி அரேபியா ஜித்தாவில் கால் டாக்சி நிறுவங்கள் இணைந்து
நடத்திய வாலிபால் போட்டி பனிமாலிக் விளையாட்டு மைதானத்தில் நேற்று (19/02/2019) நடைபெற்றது.
இதில் பல்வேறு கிளப் அணிகள் கலந்த கொண்டு மோதின.
இறுதிப்போட்டியில் முதல் பரிசை பாகிஸ்தான் கிளப் தட்டிச் சென்றது. இரண்டாவது
இடத்தை FRC (Friends Republic Club) என்ற கரீம் டாக்ஸி அணி வென்றது.
மேலும் Friends Republic Club ஐ சார்ந்த ராஜேஸ் விளையாட்டு நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நமது ராமநாதபுர மாவட்ட, கீழக்க்ரையைச் சார்ந்த நண்பர்கள் ஹமீது ராஜா, சாஹீல், அலியார் மற்றும் பஜரு ஆகியோர் Friends
Republic Club அணிக்காக விளையாடினார்கள் என்பது
குறிப்பிடத்தக்கது.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
பிப்ரவரி 23, 24ம் தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க, நீக்க
மற்றும் திருத்தம் செய்திட பிப்ரவரி 23, 24 (சனி, ஞாயிற்றுகிழமைகள்)
ஆகிய இரண்டு நாள்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான
கொ.வீரராகவராவ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கடந்த ஜனவரியில்
வாக்காளர் சிறப்பு சுருக்கத் திருத்தம் நடைபெற்று இறுதி வாக்காளர் பட்டியலும்
வெளியிடப்பட்டது.
அதன்படி பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும், இளம் வாக்காளர்கள் மற்றும்
விடுபட்ட வாக்காளர்களை சேர்ப்பதற்காகவும், தற்போதுள்ள வாக்காளர்
பட்டியலில் திருத்தங்கள் மற்றும் நீக்கம் செய்வதற்கும் பிப்ரவரி 23 (சனிக்கிழமை) மற்றும் 24
(ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு நாள்களிலும் மாவட்டத்திலுள்ள
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
இச்சிறப்பு முகாம்களை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
நாட்டுப்புறக் கலைஞர்கள் இலவச இசைக்கருவிகள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர்!!
நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு
செய்துள்ளவர்கள் இலவச இசைக்கருவிகள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ்
புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியம்
மதுரை மண்டலத்திற்கு உள்பட்டதாகும். இந்த நலவாரியத்தில் பதிவு செய்துள்ள
கலைஞர்களுக்கு 2017-18
ஆம் ஆண்டுக்கான இலவச இசைக்கருவிகள் மற்றும் ஆடை ஆபரணங்கள்
வழங்கப்படவுள்ளன.
எனவே நல வாரியத்தில் தவறாது புதுப்பித்துள்ள நாட்டுப்புற
கலைஞர்கள் இலவச இசைக்கருவிகள் மற்றும் ஆடை ஆபரணங்கள் பெற பிப்ரவரி 25 ஆம் தேதிக்குள்
உதவி இயக்குநர்,
மண்டலக் கலை பண்பாட்டு மையம்,
பாரதி உலா முதல் தெரு,
தல்லாகுளம்,
மதுரை-2
என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அதில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Tuesday, February 19, 2019
கிஷான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகையாக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம், விவசாயிகள் விண்ணபிக்கலாம்!!
மத்திய அரசு விவசாயிகளை
ஊக்குவித்திடும் வகையில் 5 ஏக்கர் வரை சாகுபடி செய்து
கொண்டிருக்கிற நிலத்தின் நேரடி பட்டாதாரர்களாக உள்ள விவசாயிகளுக்கு பிரதான்
மந்திரி கிஷான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகையாக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்த ஊக்கத்தொகையானது 3 தவணைகளாக தலா ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட
உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயனடைய விருப்பமுள்ள விவசாயிகள் தங்களது
ஆதார் எண்,
வங்கி கணக்கு எண்,
செல்பேசி எண்,
பட்டா நகல் எண்
உள்ளிட்ட விவரங்களை உரிய விண்ணப்பத்துடன் சம்பந்தப்பட்ட கிராம
நிர்வாக அலுவலகத்தில் சமர்ப்பித்து பயனடையலாம்.
ராமநாதபுரம்
மாவட்டத்தில் உள்ள 400 வருவாய்
கிராமங்களிலும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மூலம் விவசாயிகளின் விவரங்கள்
சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும்
வருவாய்த்துறை சார்ந்த அலுவலர்கள் மூலமாக இப்பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வருவாய்
கிராமங்கள் வாரியாக தகுதியான பயனாளிகளின் விவரப்பட்டியல் அந்தந்த கிராம நிர்வாக
அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த
விவரங்களை பொதுமக்கள் நேரில் பார்த்து அறிந்து கொள்ளலாம். இதில் விடுபட்டுள்ள
தகுதியான விவசாயிகள் காலம் தாழ்த்தாமல் உடனடியாக இத்திட்டத்தின் கீழ் பயனடைய உரிய
ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த
தகவலை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Monday, February 18, 2019
ராமநாதபுரத்தில் 9 புதிய அரசுப் பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்தது!!
ராமநாதபுரத்தில் 9 புதிய அரசுப் பேருந்துகளை
தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் எம்.மணிகண்டன் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து
தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தலைமை வகித்தார்.
ராமநாதபுரம் - மதுரை,
ஏர்வாடி தர்ஹா - குமுளி,
சாயல்குடி-சிதம்பரம்,
ராமேசுவரம்-திருச்சி,
ராமேசுவரம்-மதுரை,
ராமேசுவரம்-கரூர்,
ராமேசுவரம்-மதுரை,
முதுகுளத்தூர்-சிதம்பரம்,
கமுதி-சேலம்
ஆகிய வழித்தடங்களில் இப்பேருந்துகள் இயக்கப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 4 கட்டங்களாக
மொத்தம் 57
புதிய பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி
வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.மணிகண்டன் தெரிவித்தார்.
செய்தி:
தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Sunday, February 17, 2019
ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பேட்டரி கார் சேவை!!
ராமநாதபுரம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் பாராளுமன்ற
உறுப்பினர் நிதியில் இருந்து அன்வர்ராஜா எம்.பி. ரூ.8 லட்சத்து
79 ஆயிரம் மதிப்பீட்டில் பேட்டரி கார் வழங்கியுள்ளார். இதன் சேவை தொடக்க விழா
மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. மருத்துவமனை இணை இயக்குனர்
டாக்டர் முல்லைக்கொடி வரவேற்று பேசினார். விழாவில் கலந்து கொண்ட அன்வர்ராஜா
எம்.பி. நோயாளிகளின் வசதிக்காக பேட்டரி கார் சேவையை தொடங்கி வைத்தார். அதனை
கலெக்டர் இயக்கினார். விழாவில் அன்வர்ராஜா எம்.பி. பேசியதாவது:–
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி முழுவதும் எம்.பி. தொகுதி
மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.80 லட்சம் செலவில் அலங்காரகற்கள்
அமைக்கப்பட்டுள்ளது. தற்போது நோயாளிகள் பயணம் செய்வதற்காக பேட்டரி கார்
வழங்கப்பட்டுள்ளது.
மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு அடுத்தபடியாக தினமும் 2 ஆயிரம்
வெளிநோயாளிகள்,
மாதத்திற்கு 15 ஆயிரம் உள்நோயாளிகள்
மற்றும் 500
அறுவை சிகிச்சைகள் நடைபெறக்கூடிய மிகப்பெரிய மருத்துவமனையாக
ராமநாதபுரம் உள்ளது.
இதேபோல ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே டி–பிளாக்கில்
ரூ.1 கோடியே 30
லட்சம் செலவில் எம்.பி. நிதியில் இருந்து அம்மா பூங்கா
அமைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
பூங்கா முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமையாக மாற்ற
மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறேன். பாம்பன்–சின்னப்பாலம், கீழநாகாச்சி–தேவர்
நகர், என்மனங்கொண்டான்–தர்காவலசை, ஆர்.எஸ்.மங்கலம்–சேத்திடல், நயினார்கோவில்–எஸ்.சிறுவயல், முதுகுளத்தூர்–கீழத்தூவல், கமுதி–சின்ன
ஆணையூர், காரியாபட்டி–அல்லாலபேரி கிராமம் ஆகிய இடங்களில் ரூ.1 கோடியே
65 லட்சம் செலவில் சமுதாயக்கூடம் மற்றும் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள்
என 544 பள்ளிகளுக்கு ரூ.37½
லட்சம் செலவில் நூலகங்களுக்கு நூல்கள் வழங்கப்பட்டுள்ளன. 63 அரசு பள்ளிகளுக்கு ரூ.1½
கோடி செலவில் இருக்கைகள், மேஜைகள்
வழங்கப்பட்டுள்ளன. தொகுதி முழுவதும் 129 இடங்களில் ரூ.6கோடியே
68 லட்சம் செலவில் எல்.இ.டி. உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. 70 ஊராட்சிகளில் ரூ.5
கோடியே 16 லட்சம் செலவில் சாலை பணிகள்
நடைபெற்றுள்ளன. 25
ஊராட்சிகளில் ரூ.1 கோடியே 19 லட்சம் செலவில் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. 49 ஊராட்சிகளில் ரூ.2.57
கோடி செலவில் கலையரங்கம் கட்டி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பரமக்குடி முதல் ராமநாதபுரம் வரை நான்கு வழிச்சாலையை
நீட்டிப்பதற்காக ரூ.900
கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல
ராமநாதபுரம் முதல் ராமேசுவரம் அரிச்சல்முனை வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட
உள்ளது. இதற்காக பாம்பன் கடலில் புதிய ரோடு பாலம் கட்டப்படும். காவிரி பிரச்சினைக்காக
அ.தி.மு.க.வின் 37
எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தையே ஒரு மாதம் முடக்கியதன்
காரணமாக மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது.
தமிழகத்தின் உரிமைக்காக அ.தி.மு.க. எம்.பி.க்கள்
நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்ததால் பல்வேறு திட்டங்கள் நமக்கு கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, மருத்துவமனை
கண்காணிப்பாளர் டாக்டர் ஜவகர்லால், நகர் செயலாளர் அங்குச்சாமி, ஒன்றிய
செயலாளர்கள் ராமநாதபுரம் அசோக்குமார், திருப்புல்லாணி முனியாண்டி, மக்கள்
தொடர்பு அலுவலர் அண்ணாதுரை,
உதவி அலுவலர் கயிலை செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
டாக்டர் சாதிக் அலி நன்றி கூறினார்.
செய்தி:
தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Thursday, February 14, 2019
ராமநாதபுரத்தில் குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இலவச மாதிரி நேர்காணல்!!
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வில்
தேர்ச்சி பெற்றவர்களுக்கு இலவச மாதிரி நேர்காணல் தேர்வு ராமநாதபுரத்தில் வரும் 16 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
இது குறித்து சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாதெமி
நிறுவனர் து.சுகேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் 113 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தொடர்ந்து அவர்களுக்கு நேர்காணல்
நடத்தப்படவுள்ளது.
இதனை முன்னிட்டு ராமநாதபுரத்தில் உள்ள சுரேஷ் ஐ.எஸ்.எஸ்.
அகாதெமி சார்பில் வரும் சனிக்கிழமை (பிப்.16) காலை 9 மணிக்கு
இலவசமாக மாதிரி நேர்முகத் தேர்வு நடத்தப்படவுள்ளது.இத்தேர்வில் ராமநாதபுரம்
மாவட்டம் மற்றும் அனைத்துப் பகுதி போட்டியாளர்களும் கலந்துகொள்ளலாம்.
தேர்வில்
கலந்துகொள்ளும் அனைவருக்கும் அகாதெமி சார்பில் இலவசமாக பாடக்குறிப்புகள், நடப்பு
நிகழ்வுகள்,
விரிவான விளக்கங்களுடன் விடைகள் அடங்கிய தொகுப்பு
வழங்கப்படும்.
மாதிரித் தேர்வில் பங்கேற்போர் முன்பதிவு செய்வது அவசியம். அரசு
தேர்வுக்கான நுழைவுச்சீட்டு, 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
கொண்டு வரவேண்டும். மாதிரித் தேர்வுக்கு வருவோருக்கு அகாதெமி சார்பில் இலவசமாக
விடுதி வசதிகளும் செய்துதரப்படும்.
மேலும் விவரங்களுக்கு 7550352916 மற்றும் 7550352917
என்ற செல்லிடப் பேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் எனக்
குறிப்பிடப்பட்டுள்ளது.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
பாதாளச் சாக்கடை குடிநீர் இணைப்புக்கு தவணை முறையில் கட்டணம் செலுத்தும் திட்டம்!!
பாதாளச் சாக்கடை குடிநீர் இணைப்புக்கு தவணை முறையில் 5 ஆண்டுகளில்
கட்டணம் செலுத்தும் புதிய திட்டம் ராமநாதபுரம் நகராட்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி பொறியாளர் பி.குமரகுரு புதன்கிழமை செய்தியாளர்களிடம்
கூறியதாவது:
ராமநாதபுரம் நகரில் வரி செலுத்தும் கட்டடங்கள் 23,918 உள்ளன. இதில் சுமார் 11
ஆயிரம் கட்டடங்கள் பாதாளச் சாக்கடை இணைப்புப் பெறும்
வகையில் உள்ளன. அதன்படி கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தற்போது
வரை 10,258
பாதாளச் சாக்கடை இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. நகராட்சியில்
புதிதாக 500
பாதாள சாக்கடை இணைப்பு கொடுத்துவிட்டால், கிட்டத்தட்ட
அனைத்து கட்டடங்களிலும் பாதாள சாக்கடை இணைப்பு பெற்றதாகிவிடும்.
இந்த நிலையில், தமிழக
அரசின் புதிய திட்டமாக பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்புக்கு
தவணைமுறையில் கட்டணம் செலுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பாதாள
சாக்கடைத் திட்ட இணைப்பைப் பெறுவோர் ரூ.150 கட்டணம் செலுத்தி
விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து கொடுத்தால் அவர்களுக்கு நகராட்சி சார்பில்
ஒப்பந்ததாரர் மூலம் சாக்கடை இணைப்பு தரப்பட்டுவிடும். அதன்பின்னர் இணைப்புப்
பெற்றவர்கள் சொத்துவரியிலோ அல்லது 5 ஆண்டுகளில் 10 தவணை |
முறையிலோ கட்டணத்தை செலுத்தலாம். பாதாள சாக்கடை இணைப்புக்கு
அதிகபட்சம் ரூ.6
ஆயிரம் செலவாகும். அதை முதலிலே செலுத்த வேண்டிய தேவையில்லை, குடிநீர்
குழாய் இணைப்புக்கும் முதலில் இணைப்பு கொடுக்கப்பட்டுவிடும். பின்னர் தவணை
முறையில் அதற்கான கட்டணத்தை செலுத்தலாம், இத்திட்டத்தை பொதுமக்கள்
பயன்படுத்தவேண்டும்.
நகரில் தற்போது 147 ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன.
அதில் தூர்ந்துபோன 20
கிணறுகளை ரூ.3 லட்சத்தில் சீரமைக்க
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கெனவே உள்ள
வட்டக்கிணறுகள் மூலம் தண்ணீர் எடுக்கும் வசதிக்காக ரூ.7 லட்சம்
செலவிடப்படவுள்ளது. அதன்படி புதிய வட்டக்கிணறானது சிதம்பரம் பிள்ளை ஊருணியில்
அமைக்கப்படுகிறது.
நகராட்சி விதிமுறைப்படி தினமும் நபர் ஒருவருக்கு 135 லிட்டர் தண்ணீர் தரப்படவேண்டும். ஆனால், தற்போது 61 லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்பட்டுவருகிறது. கோடை கால குடிநீர் பற்றாக்குறையை
சமாளிக்க தொட்டிபட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
ரூ.2 ஆயிரம் உதவித்தொகை - பட்டியலை சரிபார்க்க ஏராளமானோர் குவிந்தனர்!!
தமிழக அரசின் ரூ.2 ஆயிரம் உதவித்தொகையைப்
பெறும் பயனாளிகள் பட்டியலை சரிபார்ப்பதற்காக கமுதி பேரூராட்சி அலுவலகத்தில்
புதன்கிழமை ஏராளமானோர் குவிந்தனர்.
வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை
உயர்த்தும் வகையில்,
ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் பயனாளிகளின் வங்கி
கணக்கில் வரவு வைக்கப்படுவதாக தமிழக முதல்வர் அண்மையில் அறிவித்தார்.
இதனையடுத்து, அத்தொகையைப்
பெறும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் பயனாளிகளின் பட்டியலில் தங்கள் பெயர்கள்
உள்ளனவா என சரிபார்ப்பதற்காக கமுதி, சிங்கபுலியாபட்டி, வெள்ளையாபுரம், கண்ணார்பட்டி
ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், கமுதி பேரூராட்சி
அலுவலகத்தில் குவிந்தனர்.
பட்டியலை சரிபார்த்த பின்னர் அதில் பெயர்கள் இருந்தால்
அவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய மனு அளித்தனர்.
இதுகுறித்து பேரூராட்சி
அலுவலர் ஒருவர் கூறுகையில்,
பயனாளிகளின் விண்ணப்பங்களைப் பெற்று, பரிசீலனை
செய்து. வறுமை கோட்டிற்குகீழ் வாழும் மக்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு
பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர் என்றார்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Sunday, February 10, 2019
ராமநாதபுரம் நகராட்சியில் புதிதாக 145 சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்!!
ராமநாதபுரம் நகராட்சியில் புதிதாக 145 சுகாதாரப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் விரைவில் நியமிக்கப்படவுள்ளதாக
சுகாதார அலுவலர் சி.ஸ்டான்லி குமார் கூறினார்.
ராமநாதபுரம் நகராட்சியில் புதிதாக சுகாதார அலுவலராக
பொறுப்பேற்றுக்கொண்ட அவர் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. தற்போது
நிரந்தமான சுகாதாரப் பணியாளர்களாக 94 பேர் உள்ளனர். நகராட்சி
விதிமுறைப்படி 342
சுகாதாரப் பணியாளர்கள் இருக்கவேண்டும். அதனடிப்படையில் 197 பேர் தேவைப்படுகின்றனர். தற்போது புதிதாக 145 சுகாதாரப் பணியாளர்களை ஒப்பந்த
ஊதிய அடிப்படையில் நியமிக்க நகராட்சி இயக்குநரகம் அனுமதித்துள்ளது.
ஆகவே வரும் மார்ச்சுக்குள் புதிய சுகாதாரப் பணியாளர்கள்
நியமிக்கப்படவுள்ளனர். அதற்காக ஒப்பந்தம் கோரும் பணிகள் நடந்துவருகின்றன. புதிதாக
சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டதும், நகராட்சியில் 250 வீடுகளுக்கு 3
பேர் கொண்ட குழு நியமிக்கப்படும். அக்குழுவினர் சுகாதாரப்
பிரச்னைகளை வீடு வீடாகச் சென்று பார்த்து சீர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் நகரில் சுகாதாரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள்
ஆணையர் ஆலோசனைப்படி எடுக்கப்படும். குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கவும், அனைத்துப்
பகுதிகளிலும் புதிதாக மரக்கன்றுகள் நடவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது தினமும்
இரு வேளைகள் 7
வாகனங்கள் மூலம் 28 டன் குப்பைகள்
அகற்றப்பட்டுவருகின்றன என்றார்.
இருநாள் பயிற்சி: ராமநாதபுரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் வரும்
12, 13 (செவ்வாய்,
புதன்) ஆகிய தேதிகளில் திடக்கழிவு மேலாண்மை குறித்த
சிறப்புப் பயிற்சி நடத்தப்படவுள்ளது.
இப்பயிற்சியில் பரமக்குடி, கீழக்கரை, ராமேசுவரம்
நகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். திடக்கழிவு மேலாண்மை
திட்டத்தில் குப்பைகளை கையாளுதல், அவற்றை தரம் பிரித்து உரமாக மாற்றுதல்
குறித்த பயிற்சி சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக நகராட்சி அதிகாரிகள்
தெரிவித்தனர்.
செய்தி:
தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Saturday, February 9, 2019
புதிய தொழில் முனைவோர் ரூ.30 லட்சம் வரை அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர்!!
படித்த, முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள்
பயன்பெறும் வகையில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய தொழில் முனைவோர்
மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தில் பயன்பெற பட்டம், பட்டயப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ. படித்த தொழில் தொடங்க ஆர்வமுள்ள
நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
நீட்ஸ் திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவை தொழில்கள்
ஆரம்பிக்க குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் முதல் அதிக பட்சம் ரூ.5 கோடி வரையிலான தொழில் திட்டங்களுக்கு வங்கிக்கடன் பெற
பரிந்துரைக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது பூர்த்தியடைந்திருக்க
வேண்டும்.
பொதுப் பிரிவினராய் இருப்பின் 35 வயதிற்கு மிகாமலும்,
ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட
வகுப்பினர், சிறுபான்மையினர், பெண்கள்,
முன்னாள் ராணுவத்தினர், திருநங்கையர்
மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற சிறப்பு பிரிவினராக இருப்பின் 45 வயதிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும.
வருமான வரம்பு ஏதுமில்லை.
விண்ணப்பதாரர் 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டில்
தொடர்ந்து வசிப்பவராகவும், முதல் தலைமுறை
தொழில்முனைவோராகவும் இருக்க வேண்டும்.
தொழில் முனைவோர் பொது பிரிவினராக இருந்தால் திட்ட
மதிப்பீட்டில் சொந்த முதலீடு 10 சதவீதமாகவும், சிறப்பு
பிரிவினராக இருந்தால் 5 சதவீதமாகவும் இருத்தல் வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.30 லட்சம்
மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும்.
பங்குதாரர் நிறுவனங்களும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.
நீட்ஸ் திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவை தொழில்கள்
தொழில்முனைவோர்க்கான பட்டியலில் மேலும் புதிய 16 தொழில்கள்
சேர்க்கப்பட்டுள்ளன.
எனவே தொழில் ஆரம்பிக்க விரும்பும் முதல் தலைமுறை தொழில்
முனைவோர் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில்
மையத்தை நேரிலோ,
அல்லது 04567-230497 என்ற தொலைபேசி
மூலமாக தொடர்பு கொண்டு விவரங்களை பெற்று https://www.msmeonline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயனடையலாம். இந்த தகவலை
மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)