முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, April 11, 2018

சிறந்த சமுதாய நல்லிணக்க கிராமமாக வேளானூர் தேர்வு; ரூ.10 லட்சம் பரிசு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறந்த சமுதாய நல்லிணக்க கிராமமாக தேர்வு செய்யப்பட்ட வேளானூர் கிராமத்திற்கு ரூ.10 லட்சம் காசோலை பரிசுத்தொகையை கலெக்டர்முனைவர் நடராஜன் வழங்கினார்.

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பாக தீண்டாமை கடைப்பிடிக்காத மற்றும் மத நல்லிணக்கத்துடன் மக்கள் வாழும் சிறந்த சமுதாய நல்லிணக்க கிராமமாக தேர்வு செய்யப்பட்டுள்ள திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வேளானூர் கிராமத்திற்கு வளர்ச்சி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டிற்கு பரிசுத்தொகையாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார். 


ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்ற மாவட்ட கலெக்டர் அம்மனுக்களை ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.   

அதன்பிறகு, 2017-2018-ஆம் ஆண்டில் தீண்டாமை கடைப்பிடிக்காத மற்றும் மத நல்லிணக்கத்துடன் அனைத்து மக்களும் சுதந்திரமாக வாழும் சிறந்த சமுதாய நல்லிணக்க கிராமமாக திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வேளானூர் கிராமம் தேர்வு செய்யப்பட்டது.  அதனடிப்படையில் வேளானூர் கிராமத்தில் வளர்ச்சி மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்திட ஏதுவாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பாக பரிசுத்தொகையாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி தனி அலுவலரிடம் வழங்கினார். 

இதன் மூலம் அக்கிராமத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்துதல், சாலைவசதி மேம்பாடு செய்தல், பள்ளிக்கூட கட்டிடம் சீர் செய்தல் போன்ற பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளலாம்.  

அதனைத் தொடர்ந்து, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டதற்காக கமுதி வட்டம், செங்கப்படை கிராமத்தைச் சார்ந்த இராமகிருஷ்ணன் என்பவருக்கு தமிழ்நாடு நோயாளர் நிவாரண நிதியிலிருந்து ரூ.25ஆயிரம் காசோலையினையும், கிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்து இறந்த ராமேஸ்வரத்தைச் சார்ந்த லட்சுமணன் என்பவரது குடும்பத்தாருக்கு நிவாரண நிதி உதவியாக தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.15ஆயிரத்திற்கான  காசோலையினையும் மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன் வழங்கினார்.

மேலும் மின்னாளுமை திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் இ-சேவை மையம் மூலமாக வருவாய்த்துறையின் சார்பாக வழங்கப்படும் பல்வேறு  அடிப்படை சான்றிதழ்களான விவசாய வருமான திட்ட சான்றிதழ், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ்  உள்ளிட்ட 15 வகையான அடிப்படை சான்றிதழ்கள் பெறும் வசதி செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இத்திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு  அடிப்படை சான்றிதழ்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஹென்;சி லீமா அமாலினி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் என்.சுஜிபிரமிளா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் காளிமுத்து, மாவட்ட மின்னாளுமை மேலாளர் கா.பிரியதர்ஷன் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி: தினபூமி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)