முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, September 30, 2019

ராமநாதபுரத்தில் அக்-3ம் தேதி வங்கி கடன் சிறப்பு முகாம் - கலெக்டர்!!

No comments :
ராமநாதபுரத்தில் வரும் அக்டோபர் 3 ஆம் தேதி (வியாழக்கிழமை) வங்கிகள் மூலம் கடன் வழங்கவும், வாங்கிய கடனை ஒரே தவணையில் செலுத்தவும் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

வங்கியாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் கடன் வழங்குதல் மற்றும் ஒரே தவணையில் கடனை அடைத்தல் விழா வரும் அக்டோபர் 3 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.மத்திய அரசின் பரிந்துரைப்படி, வீட்டுக் கடன், வாகனக் கடன், விவசாயக் கடன், சிறு, குறு தொழில் மற்றும் வணிகர்க க்கு வழங்கப்படும் முத்ரா கடன் மற்றும் மகளிர் திட்டம் மூலமாக தகுதியுள்ள மற்றும் புதிய மகளிர் குழுக்களுக்கும் கடன் வழங்கப்படவுள்ளது.

மேலும் என்கெனவே வங்கியில் கடன் வழங்கப்பட்டு வராக்கடனில் உள்ள வங்கிக் கடன்கள் ஒரே தவணையால் கடனை அடைத்தல், வங்கிகளின் பிற சேவைகள் மற்றும் விவரங்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்படவுள்ளது.

முகாமில் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து வங்கி அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். வங்கி சாரா நிதி நிறுவனங்களும் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளன. ஆகவே ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் முகாமில் கலந்து கொண்டு தங்கள் தொழிலுக்கு ஏற்ற கடன்களை பெறலாம்


என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;

Thursday, September 26, 2019

ராமேசுவரம் கோவிலில் ரூ. 80 லட்சம் கையாடல்!!

No comments :


ராமேசுவரம் கோவிலில் பணியாற்றி வந்த தற்காலிக கணினி ஆபரேட்டர் சிவன் அருள்குமரன் கோவிலின் வருங்கால வைப்பு நிதி தொகையில் இருந்து ரூ.80 லட்சம் கையாடல் செய்து விட்டதாக கோவிலின் இணை ஆணையர் கல்யாணி கடந்த 3 மாதத்திற்கு முன்பு ராமநாதபுரத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.


அந்த புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு போலீசார் ராமேசுவரம் கோவிலில் பலரிடம் விசாரணை செய்தனர். வருங்கால வைப்புநிதி பணத்தில் கையாடல் செய்ததில் சிவன் அருள்குமரனுக்கு உடந்தையாக இருந்ததாக கோவிலில் பணியாற்றிய ரவீந்திரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். சிவன்அருள் குமரன் தலைமறைவாக உள்ளார்.

இதுபற்றி ராமேசுவரம் முதுநிலை திருக்கோவில் பணியாளர்கள் சங்கத்தின் செயலாளர் முனியசாமி கூறியதாவது:-

ராமேசுவரம் கோவிலில் பணியாற்றும் நிரந்தர பணியாளர்களின் வருங்கால வைப்புநிதி தொகையில் இருந்து ரூ.80 லட்சம் பணத்தை தற்காலிக பணியாளர் சிவன்அருள் குமரன் கையாடல் செய்துவிட்டு தப்பி ஓடி விட்டார்.இது குறித்து இணை ஆணையர் புகார் கொடுத்து 3 மாதத்திற்கு மேலாகியும் சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்படவில்லை.

எனவே இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் திருக்கோவில் பணியாளர்களின் பணத்தை கையாடல் செய்து தலை மறைவாக உள்ள சிவன்அருள்குமரனை உடனடியாக கைது செய்யவும்,இதோடு தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் திருக்கோவில் பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி பணத்தை மீட்டுதர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து விரைவில் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டையும் சந்தித்து திருக்கோவில் பணியாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மனு கொடுக்க முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


செய்தி: தினத்தந்தி

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;

விவசாயிகளுக்கு முதல்கட்டமாக ரூ.175 கோடி பயிர் இழப்பீடு ஒதுக்கீடு - கலெக்டர்!!

No comments :


ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி, விவசாய இணை இயக்குனர் சொர்ணலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் விவசாயிகளும், விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டு பேசியதாவது:–

மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கடந்த ஆண்டிற்கான காப்பீடு தொகை பெற்றுத்தர வேண்டும். மாவட்டத்தில் தடுப்பணைகள் கட்டுவதில் பெரும் முறைகேடு நடந்து வருகிறது. அவற்றை முறையாக கட்டுவதில்லை.

பொதுப்பணித்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்வதில்லை. விவசாய நிலங்களில் காட்டுமாடுகள் நுழைந்து பயிர்களை அழித்து வருகின்றன. இதுதவிர வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகளை கட்டிவைக்காமல் அவிழ்த்து விடுவதால் விவசாய பாதிப்பு ஏற்படுகிறது. இதுபோன்ற மாடுகளை பிடித்து அபராதம் வசூலிக்க வேண்டும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வரத்துக்கால்களில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளதால் தண்ணீர் வரமுடியாத நிலை உள்ளது. காவிரி–குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்து கலெக்டர் வீரராகவ ராவ் பேசியதாவது:–

இந்த மாதம் சராசரி மழை அளவைவிட அதிகமாக பெய்துள்ளது. இதனால் அக்டோபர் மாதம் தொடங்கி வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் பயிர்காப்பீடு விடுபட்டவர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2018–19–ம் ஆண்டில் பயிர் காப்பீடு செய்தவர்களில் 171 கிராமங்களுக்கு முதல்கட்டமாக ரூ.175 கோடி இழப்பீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு ஓரிரு வாரத்தில் வந்துவிடும். இந்த முறையும் காப்பீடு தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். கடன் உள்ளிட்டவைகளுக்கு இதில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படமாட்டாது.

வங்கியில் வரவு வைக்காமல் ரொக்கமாகவோ, காசோலையாகவோ காப்பீடு தொகை வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வைகை அணையில் இருந்து விவசாயிகளின் தேவைக்கு ஏற்றபடி அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிடப்படும். காட்டுமாடுகளை பிடித்து காடுகளில்விட நடவடிக்கை எடுக்கப்படும். மாடுகளை அந்தந்த பகுதிகளில் பிடித்து அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக தாலுகா வாரியாக இடம் தேர்வு செய்து மாவட்ட வருவாய் அதிகாரி அறிக்கை அளிக்க வேண்டும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறையினர், வருவாய்த்துறையினர் அகற்றி மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வெளிப்படை தன்மையாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மாதந்தோறும் 2 பட்டா சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.


இவ்வாறு அவர் கூறினார்.

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;

Thursday, September 19, 2019

ராமநாதபுரத்தில் ஊட்டச்சத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி!!

No comments :

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் ஊட்டசத்து மாத மாவட்ட அளவிலான ஊட்டச்சத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கையெழுத்து இயக்கத்தினை கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் துவக்கி வைத்தார்.

கர்ப்பிணிப் பெண்கள், பிரசவித்த தாய்மார்கள், வளர் இளம் பெண்கள், குழந்தைகள் மற்றும் அனைவருக்கும் ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  ஆரோக்கியமான மக்களால் ஆனதே வலிமையான தேசமாகும்.  எனவே, ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்காக ஊட்டச்சத்து நிறைந்த சத்தான உணவு வகைகளை உட்கொள்வதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே தேசிய ஊட்டச்சத்து மாதம் கடைபிடிக்கப்பட்டு வருவதன் முக்கிய நோக்கமாகும்.


பொதுமக்கள் அதிக அளவில் கூடும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மக்களுக்கு ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஊட்டச்சத்து கண்காட்சி மற்றும் கையெழுத்து இயக்கம் துவக்கி வைக்கப்பட்டது.  ஊட்டச்சத்து கண்காட்சியில் 1000 நாட்களின் முக்கியத்துவம் (கருத்தரிப்பு முதல் குழந்தையின் இரண்டு வயது வரை), வயிற்றுப்போக்கை தடுக்கும் முறைகள், ஊட்டச்சத்து உணவின் முக்கியத்துவம், இரத்தசோகையை தடுக்கும் வழிகள், சுத்தம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை விளக்கும் வண்ணம் அமைந்திருந்தது.  மிகவும் பயனுள்ள வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊட்டச்சத்தின் அவசியம் குறித்த கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.  அங்கன்வாடி பணியாளர்களின் மூலம் உரிய விளக்கமும் அளிக்கப்பட்டது.

முன்னதாக, மாவட்ட கலெக்டர் ஊட்டச்சத்தின் அவசியம் குறித்த கையெழுத்து இயக்கத்தில்  கையொப்பமிட்டு துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் த.கெட்சி லீமா அமலினி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வ.ஜெயந்தி உள்ளிட்ட அரசு அலுவலர்களும், திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


செய்தி: தினசரிகள்

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;

ராமநாதபுரத்தில் கோ-ஆப்டெக்ஸ்-ல் சிறப்பு தள்ளுபடி !!

No comments :

ராமநாதபுரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனையை கலெக்டர் வீரராகவராவ் துவக்கி வைத்து, விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள ஆடை ரகங்களை பார்வையிட்டார்.

அதன்பின்னர் அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசு, கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க ஆண்டு தோறும் பண்டிகை காலங்களில் 30மூ சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது.  அதனடிப்படையில் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தின் மூலம் பட்டு, பருத்தி, கைத்தறி ரகங்களுக்கு 30மூ சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.  வாடிக்கையாளர்களைக் கவரும் வைகயில் பலவித வண்ணம் மற்றும் வடிவமைப்புகளில் பருத்தி, பட்டு சேலைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

மேலும் உடல்நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்ப இரசாயன உரங்கள் இல்லாமல், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பருத்தியைக் கொண்டு இயற்கை சாயமிட்ட ஆர்கானிக் புடவை இரகங்கள் விற்பனைக்கு உள்ளது.  மேலும் பாரம்பரிய ரகங்களைப் புதுப்பிக்கும் விதமாக கண்டாங்கி சேலைகள், செட்டிநாடு சேலைகள், கைத்தறி சுங்கிடி சேலைகள், மதுரை,தஞ்சாவூர் ஸ்லப் காட்டன் சேலைகள், ஈரோடு காதா டிசைனர் போர்வைகள், பருத்தி மற்றும் பட்டு பரமக்குடி 1000 புட்டாச் சேலைகள் பண்டிகைக்காக தருவிக்கப்பட்டுள்ளன.  மேலும் ஆடவர்களைக் கவரும் விதமாக லினன் சட்டைகள், லினன் ஃ பருத்தி சட்டைகள், பாலி விஸ்கோஸ் பேண்ட் கிளாத்கள் கண்ணை கவரும் வண்ணங்களில்  விற்பனைக்கு உள்ளன.ராமநாதபுரம் மாவட்டத்தில் கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தின் மூலம் ராமநாதபுரம், பரமக்குடி என இரு நகரங்களிலும் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு தீபாவளி விற்பனையின் மூலம் இராமநாதபுரம் விற்பனை நிலையத்தில்  ரூ.64.07 லட்சம் மதிப்பில் கைத்தறி ஆடைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

இவ்வாண்டில் ரூ.80 லட்சம் அளவில் கைத்தறி ஆடைகள்  விற்பனை செய்திட வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  மேலும் கோ-ஆப்டெக்ஸ் ஆடைகளை  மின் வணிக வலைதளமான www.cooptex.com  என்ற இணையதளத்தின் மூலம் பெற்று கொள்ளலாம்.  எனவே பொதுமக்கள்  கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தரமான கைத்தறி ஆடை ரகங்களை பெற்று பயனடைவதன் மூலம் கைத்தறி நெசவாளர்களை ஊக்குவித்திடவும் வாய்;ப்பாக அமையும். இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில்  கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ஜெ.நாகராஜன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் வி.ஜி.அய்யான், கே.கே.சங்கீதா, இரக மேலாளர் எஸ்.பாடலிங்கம், ராமநாதபுரம் விற்பனை நிலைய மேலாளர் (பொ) கே.பாண்டியம்மாள், மேலாளர் (ஓய்வு) கே.மணிவண்ணன் உள்பட அரசு அலுவலர்கள், கோ-ஆப்டெக்ஸ் பணியாளர்கள்   கலந்து கொண்டனர். 


செய்தி: தினசரிகள்

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;

Saturday, September 14, 2019

சவூதி அரேபியாவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி, ஏராளமான தமிழர்கள் பங்கேற்பு!!

No comments :
சவூதி அரேபியா ஜித்தா மாநகரில் நடைபெற்ற க்ளப் களுக்கிடையான கிரிக்கெட் போட்டியில் கோப்பையை கைப்பற்றியது FRC MNR க்ளப்.

இரண்டாம் இடத்தை பிடித்தது TUSKERS க்ளப்.

இந்த போட்டியை நடத்திய ப்ரெண்ட்ஸ் ரிபப்ளிக் க்ளப் நம் தமிழர்கள் நடத்தும் க்ளப் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏராளமான தமிழர்கள் மற்றும் கேரளைட்கள் பங்கு கொண்ட இந்த போட்டியின் பரிசளிப்பு படங்களை கீழே காணலாம்.MAN OF THE MATCH FINALS - NISHAD LATEEF
MAN OF THE MATCH SEMI FINAL - ASHRAF ADHOOR

BEST BOWLER OF THE TOURNAMENT - ANAZCHE
தகவல்: ஹமீது ராஜா, ப்ரெண்ட்ஸ் ரிபப்ளிக் க்ளப்.

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;

Thursday, September 12, 2019

ராமநாதபுரத்தில் செப்- 13 ஆம் தேதி மீனவர்கள் குறை தீர் கூட்டம்!!

No comments :

ராமநாதபுரத்தில் வரும் 13 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மீனவர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் கொ.வீரராகராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

ராமநாதபுரத்தில் வரும் 13 ஆம் தேதி மாலை 4 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைகேட்பு கூட்ட அரங்கில் மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.


மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், மாவட்ட அரசுத் துறை சார்ந்த அனைத்து அலுவலர்களும் கலந்து கொள்கின்றனர்.

ஆகவே, ராமநாதபுரம் மாவட்டத்திற்குள்பட்ட அனைத்து மீனவர்களும் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து அதற்கான தீர்வினை பெறலாம்.


மேலும், மீனவர்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் அளிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;

ராமநாதபுரத்தில் செப்-13ம் தேதி வேலை வாய்ப்பு முகாம் - கலெக்டர்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தனியார் துறையினரின் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை (செப். 13) நடைபெறும் தனியார் துறை வேலைவ. "ப்பு முகாமில் பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வித் தகுதிக்கேற்ப தங்களுக்கான பணியாளர்களைத் தேர்வுசெய்ய உள்ளனர்.முகாமில் தாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்தவர்களும், தொழில் கல்வி மற்றும் டிப்ளமோ படித்தவர்களும் கலந்துகொண்டு, கல்வித் தகுதிக்கேற்ப தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுக் கொள்ளலாம்.

ஆகவே முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் சுய விவரங்களடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன், வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வரவேண்டும்.


எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;

அரசு ஐ.டி.ஐ.,ல் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!!

No comments :
முதுகுளத்துார் அரசு ஐ.டி.ஐ.,ல் வெல்டர், இயந்திர வேலையாள் பிரிவு படிப்புகளுக்கு நேரடி மாணவர் சேர்க்கை செப்.,16 வரை நடக்கிறது.

இப்பிரிவுகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆண்கள் 14 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. ஐ.டி.ஐ.,யில் படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி, பாடப்புத்தகம், வரைப்படக்கருவி, காலணிகள், பஸ்பாஸ் உள்பட அரசு வழக்கும் அனைத்து சலுகைகளும் வழங்கப்படும்.

தினமும் வேலைநாட்களில் காலை 9:00முதல் மாலை 5 வரை பெறப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்,என்று முதல்வர் பொறுப்பு அசோகன் கூறினார்.

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;

பச்சை நிறத்தில் காட்சியளித்த பாம்பன் கடற்கரை!!

No comments :
ராமேசுவரத்தில் பாம்பன் குந்துகால் மற்றும் சிங்கிலி தீவு முதல் குருசடை தீவு வரையிலான கடல் பகுதி மிகவும் முக்கியமானது. ஆனால் அங்கு நேற்று வழக்கமான நிறத்தில் இருந்து கடல்நீரானது நிறம் மாறி, பச்சை நிறத்தில் காட்சி அளித்தது. காலையில் லேசான பச்சை நிறத்தில் இருந்த கடல்நீர், பகல் நேரத்தில் கரும் பச்சையாக மாறியதுடன், பாசி படர்ந்த நீர் போன்றும் தோற்றம் அளித்தது.

கிளி, ஒரா, காரல், விலாங்கு உள்ளிட்ட பல வகை மீன்களும் இறந்து கரை ஒதுங்கிய வண்ணம் இருந்தன. இது பற்றி அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள், மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து அந்த ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் குழுவினர், பாம்பன் குந்துகாலுக்கு சென்று பச்சை நிறமாக மாறியிருந்த கடல் நீரை சோதனையிட்டனர். பின்னர் ஆராயச்சிக்காக அந்த நீரை பெரிய டப்பாக்களில் சேகரித்ததுடன், இறந்து கிடந்த மீன்களையும் எடுத்து சென்றனர். பச்சை நிறத்தில் காட்சியளித்த கடல்நீரை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

கடல்நீர் பச்சை நிறமாக மாறியதற்கான காரணம் குறித்து மண்டபம் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் கூறியதாவது:-


பாம்பன் குந்துகால் முதல் குருசடை தீவு பகுதியில் கடல் நீர் திடீரென பச்சை நிறத்தில் காட்சி அளிக்கிறது. அதற்கான காரணத்தை ஆராய, கடல் நீரையும், இறந்து கிடந்த மீன்களையும் எடுத்து வந்துள்ளோம். ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர் வரை தென்கடல் பகுதியில் குறிப்பிட்ட சில நாட்கள் கடலில் உள்ள ‘நாட்டிலூகா‘ என்ற அறிவியல் பெயர் கொண்ட கண்ணுக்கு தெரியாத பாசி, தனது மகரந்த சேர்க்கைக்காக கடலில் படரும். அந்த சமயத்தில்தான் கடல்நீர் திடீரென பச்சை நிறத்தில் காட்சியளிக்கும். கடல் நீரோட்டம் வேகமாக இருக்கும்போது, கடல்நீர் பச்சை நிறமாக மாறுவது தெரியாது. ஆனால் தற்போது கடல் நீரோட்டம் குறைவாக இருப்பதால்தான் பாம்பன் கடல்தண்ணீர் பச்சை நிறத்தில் தெளிவாக தெரிகிறது.

அந்த வகை பாசியானது கடல்நீரின் மேற்பரப்பில் படர்ந்து காணப்படுவதால் மீன்களின் செதில்கள் அடைக்கப்பட்டு சுவாசிக்க முடியாமல் திணறி, இறக்கின்றன. இந்த மாற்றமானது, ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர் மாதங்களில் அவ்வப்போது நடப்பது வழக்கம் தான். சில நாட்களில் கடல் நீர் மீண்டும் இயற்கையான நிறத்தை அடையும். கடல் நீர் பச்சையாக இருப்பது 3 நாட்களுக்கு மேல் இருந்தால் கடலில் வாழும் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்.

கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது கடலானது அதிகமாக பச்சை நிறமாக மாறியுள்ளது. பாம்பனில் கடல்நீர் பச்சை நிறமாக மாறியுள்ளதால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. ஓரிரு நாட்களில் இயல்பு நிலைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கிறோம். இதனால் மீனவர்கள் பயப்பட தேவையில்லை. இறந்து கரை ஒதுங்கிய மீன்களில் ஒரா வகையை சேர்ந்த மீன்கள் தான் அதிகம். இதுபற்றியும் தீவிரமாக ஆய்வு செய்தால்தான் காரணத்தை அறிய முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

பாம்பன் கடல் பகுதியை போல, மண்டபம் தெற்கு துறைமுகத்தை ஒட்டிய பகுதியிலும் கடல்நீர் லேசான பச்சை நிறத்தில் காட்சி அளித்தது குறிப்பிடத்தக்கது. 

செய்தி: தினத்தந்தி

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;

Tuesday, September 10, 2019

ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள்; உதவிகள் வழ்ங்கினார் கலெக்டர்!!

No comments :
ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
  இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் கோரிக்கை மனுக்கள் பெற்று, அம்மனுக்களை ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 5 பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களையும், 5 பயனாளிகளுக்கு காதுக்குப் பின் அணியும் காதொலிக்கருவிகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பாக 1 பயனாளிக்கு விலையில்லா தையல் இயந்திரத்தினையும் வழங்கினார்.இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை வழங்குவதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த மாற்றுத்திறனாளிகள் சிரமப்படாத வகையில் அவர்களுக்கு சிறப்பு அமர்விடம் ஏற்படுத்தப்பட்டு, அவர்களிடத்தில் மாவட்ட கலெக்டர் நேரடியாகச் சென்று கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.  மேலும், இக்கூட்டத்தில் கோரிக்கை மனுக்களை வழங்கிய அனைத்து நபர்களுக்கும் மாவட்ட கலெக்டர் உணவு பொட்டலங்களை வழங்கினார்.


இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி உள்பட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;

Wednesday, September 4, 2019

ராமநாதபுரம் நகராட்சியில் 13,460 வீடுகளில் மழைநீர் சேகரிப்பு இல்லை!!

No comments :
ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சி பகுதிகளில் 13 ஆயிரத்து 460 வீடுகளில் மழைநீர் சேகரிப்பு இல்லை. அவர்களுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கமிஷனர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

நகராட்சி 33 வார்டுகளில் 65 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை உள்ள நிலையில் மழைநீர் சேகரிப்பை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து ராமநாதபுரம் நகராட்சி கமிஷனர் விஸ்வநாதன் கூறியதாவது:

வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், நகராட்சி சார்பில் கொசுத்தடுப்பு, நகராட்சி பணியாளர்கள், துாய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் 40 பேர் கொண்ட 8 குழுக்கள் அமைக்கப்பட்டு மழைநீர் சேகரிப்பு அமைப்பு கண்காணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. நகராட்சியில் 18,675 வீடுகள் உள்ளன. இதில் 5,215 வீடுகளில் மட்டும் மழைநீர் சேகரிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 13,460 வீடுகளில் மழைநீர் சேகரிப்பு இல்லை.


நகர் பகுதியில் 2,500 சதுர அடியில் 36 வணிக கட்டடங்கள் உள்ளன. இதில் 24 கட்டடங்களில் மட்டும் மழைநீர் சேகரிப்பு உள்ளது. அரசு சார்ந்த கட்டடங்கள் 144ல் 56 கட்டடங்களில் மட்டும் உள்ளது. பல கட்டடங்களில் பராமரிப்பின்றி காணப்படுகிறது. அந்த கட்டடங்களையும் நகராட்சி சார்பில் கணக்கெடுத்து அவற்றை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.மழைநீர் சேகரிப்பை ஏற்படுத்தாத வீடுகள், கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்களுக்கு நகராட்சி சார்பில் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.


செப்., 30க்குள் அந்தந்த வீடுகள், வணிக நிறுவனங்களில் மழை நீர் சேகரிப்பை ஏற்படுத்தவேண்டும். மழைநீர் சேகரிப்பை ஏற்படுத்தாத வீடுகளுக்கும், நிறுவனங்களுக்கும் குடிநீர், பாதாளசாக்கடை இணைப்புகளை துண்டித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;