முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, January 30, 2023

வக்பு வாரியத்தின் கீழ் பணி புரிபவர்களுக்கு மானிய விலையில் மோட்டார் சைக்கிள்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட 180 வக்பு நிறுவனங்களில் பணி புரிபவர்களுக்கு மானிய விலையில் மோட்டார் சைக்கிள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 

அதன்படி ஆலிம்கள், பேஷ்இமாம்கள், அரபி ஆசிரியர்கள், ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள், அடக்க தலங்கள், தைக்காக்கள், முஸ்லீம் அனாதை இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் முஜாவர் உள்ளிட்ட பணியாளர்கள் மானிய விலையில் 125 சி.சி. என்ஜின் திறன் கொண்ட இருசக்கர வாகனம் வாங்குவதற்கு வாகனத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25 ஆயிரம் இதில் எது குறைவோ, அந்த தொகை மானியமாக வழங்கப்படும்.

 


வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனங்களில் பணி புரியும் உலமா நலவாரிய உறுப்பி னர்கள் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். 18 வயதில் இருந்து 45 வயதுக்குள் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது இருசக்கர வாகனம் ஓட்டும் கற்றுணர்வுக்கான சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்ய கலெக்டர் தலைவராகவும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை உறுப்பினர் செயலர் கூட்டுநராகவும், முன்னோடி வங்கியின் மேலாளரை உறுப்பின ராகவும் மற்றும் மாவட்ட வக்பு வாரிய கண்காணிப்பாளர் உறுப்பினராகவும் கொண்ட தேர்வுக்குழு அமைக்கப்படும்.

 

மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற மனுதாரர் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வயது சான்றிதழ், வருமானச் சான்றிதழ், புகைப்படம், மாற்றுத்திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரி டம் பெற்ற சான்று, சாதிச்சான்று, ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி. குறியீடுடன் கூடிய வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் வைத்திருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் வக்பில் பணிபுரிகிறார் என்பதற்கு வக்பு கண்காணிப்பாளரின் சான்று மற்றும் வாகனம் வாங்குவதற்கான விலைப் பட்டியல், விலைப்புள்ளி ஆகியவற்றுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயன் பெறலாம்.

 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Monday, January 23, 2023

முகவை சங்கமம் புத்தக திருவிழா; "மனதில் நிற்கும் வாசகம்" போட்டி!!

No comments :

ராமநாதபுரத்தில் முகவை சங்கமம் புத்தக திருவிழா அடுத்த மாதம் 9-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.

 

அதற்கு முன்னோட்டமாக புத்தக திருவிழாவிற்கான லோகோ மற்றும் சின்னம் வெளியிடப்பட்டுள்ளது. தனுஷ்கோடி கலங்கரை விளக்கத்தை நினைவுபடுத்தும் வகையில் புத்தகங்களால் வடிவமைக்கப்பட்ட கலங்கரை விளக்கம் வடிவில் லோகோ அமைக்கப்பட்டுள்ளது. அதே போல புத்தக திருவிழா சின்னம் கடற்பசு வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

 


முகவை சங்கமம் புத்தக திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் மனதில் நிற்கும் வாசகம் போட்டி நடத்தப்படுகிறது. புத்தக திருவிழா முழுவதும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் எழுதிய வாசகங்கள் இடம் பெறும். இந்த வாய்ப்பை பெறுவதற்கு வாசகங்களை 04573-231610 என்ற தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அழைத்து தங்களது வாசகங்களை பதிவு செய்யலாம். மேலும் 70944 39999 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தியாகவும் mugavaisangamam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும் இந்த மாதம் 30-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

 

சிறப்பான வாசகங்களை அனுப்பியவர்களுக்கு புத்தக கூப்பன், சான்றிதழ் மற்றும் அனைத்து நிகழ்வுகளுக்கான நுழைவுச்சீட்டு வழங்கப்படும்.

 

முகவை சங்கமம் புத்தக திருவிழாவை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்தில் புத்தக சுவர் அமைப்பதற்கு புத்தக நன்கொடை பெறப்படுகிறது. இதில் தங்களது புத்தகங்கள் இடம்பெறுவதற்கு விருப்பமுள்ளவர்கள் புத்தகங்களை கலெக்டர், ஆர்.டி.ஓ., தாலுகா அலுவலகங்கள், அனைத்து அரசுத் துறை தலைமை அலுவலகங்கள், முக்கிய பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் புத்தக திருவிழா மைதானம் ஆகிய இடங்களில் வழங்கலாம். இந்த தகவலை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Saturday, January 21, 2023

மாவட்ட அளவிலான மகளிர்களுக்கான எறிபந்து போட்டி விழா!!

No comments :

கீழக்கரையில் V-team குழுஅறக்கட்டளையும் மற்றும்

தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியும் இணைந்து நடத்திய 

இராமநாதபுரம் மாவட்ட அளவிலான மகளிர்களுக்கான எறிபந்து போட்டிகளை ,(16.01.23 மற்றும் 17.01.23) இரண்டு நாட்கள் நடத்தினார்கள்.

 

இறைவணக்கத்துடன் இனிதே துவங்கிய இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ் சுமையா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். மாவட்ட  விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலர் திரு. தினேஷ் குமார் அவர்கள்  சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு விளையாட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இப்போட்டியில் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரி மற்றும் தனியார் விளையாட்டு மன்றத்தின் மாணவிகள் உள்பட மொத்தம் 22 குழுவினர் பங்கேற்றனர்.

 


அதில் வெற்றி பெற்றவர்கள்,

 

1.முதல் பரிசு ரூபாய் பத்தாயிரம் கேடயம் மற்றும் கோப்பையை

காமன்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் வென்றனர். 


2.இரண்டாம் பரிசு ரூபாய் 6,500 கேடயம் மற்றும் கோப்பையை கீழக்கரை பேர்ல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகளும். 
 

 

3.மூன்றாவது பரிசு ரூபாய் 4,500 கேடயம் மற்றும் கோப்பையை,

தாசிம்பீவி கல்லூரியின் முன்னாள் மாணவிகள் சங்கத்தின் Grippers குழுவினரும் வென்றனர். 
இந்நிகழ்ச்சியின் நிறைவு விழாவில்  தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் சுந்தர் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியதோடு  போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளையும்  வழங்கி சிறப்பித்தார்கள்,

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Monday, January 16, 2023

கீழக்கரையில் ஜன-16 & 17 தேதிகளில் மாவட்ட அளவிலான எறி பந்து போட்டிகள்!!

No comments :
ஜன-16 & 17 தேதிகளில் கீழக்கரை தாசிம் பீவி பெண்கள் கல்லூரியில் மாவட்ட அளவிலான எறி பந்து போட்டிகள் நடக்க விருக்கிறது.

பெண்கள் அனைவரும் கலந்து கொண்டு சிற்ப்பிக்குமாறு விளையாட்டு ஏற்பாட்டாளர்கள் (TBAKC & V-TEAM) கேட்டுக்கொள்கின்றனர்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Friday, January 13, 2023

ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் ரூ.90 கோடி நிதியில் மறுசீரமைப்பு பணிகள்!!

No comments :

ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் ரூ.90 கோடி நிதியில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளன. இந்த பணியை 18 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

 

ராமேசுவரம் கோவில் அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் தரிசனம் செய்ய இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அது போல் பல மாநிலங்களில் இருந்தும் ராமேசுவரத்திற்கு பல ரெயில்கள் இயக்கப்பட்டு வருவதால் சராசரியாக ஒரு நாளைக்கு 5 ஆயிரத்திற்கும் அதிகமான பேர் ரெயில் மூலமாக வருவதாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையில் ராமேசுவரம் ரெயில்வே நிலையத்தை ரூ.90 கோடி நிதியில் மறு சீரமைப்பு செய்ய ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த பணியானது மும்பையைச் சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனிடையே ராமேசுவரம் ரெயில்வே நிலையத்தில் ரெயில்வே நிலையத்தை மறுசீரமைக்கும் செய்யும் பணியை தனியார் கட்டுமான நிறுவனம் தொடங்கியுள்ளது.

 

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

 

ராமேசுவரம் ரெயில் நிலையம் மதுரை-ராமேசுவரம் ரெயில்வே பிரிவில் உள்ள ஒரு முக்கியமான ரெயில் நிலையம் ஆகும். இந்த ரெயில் நிலையம் புறநகர் இல்லா ரெயில் நிலையப் பிரிவுகளில் மூன்றாம் நிலையில் வருகிறது. இந்த ரெயில் நிலையத்தை தினந்தோறும் சராசரியாக 9 ஆயிரம் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிக்கான ஒப்பந்த ஆணை கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. ரூ.90.20 கோடி செலவில் 18 மாதங்களுக்குள் கட்டுமான பணிகளை நிறைவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளை மேற்பார்வையிட மும்பையைச் சேர்ந்த தனியார் திட்ட மேலாண்மை நிறுவனம் பணி அமர்த்தப்பட்டுள்ளது. நிலப்பரப்பு கணக்கெடுப்பு, மண் மாதிரி பரிசோதனை, மரங்கள் கணக்கெடுப்பு, அசையும், அசையா சொத்துக்கள் கணக்கெடுப்பு, பருந்து பார்வை ட்ரோன் ஆய்வு ஆகிய பணிகள் முடிவடைந்துள்ளன. கட்டுமான பணியிடங்களில் உள்ள பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன. ஒப்பந்ததாரர் அலுவலக கட்டிடப் பணி நிறைவு பெற உள்ளது. சிமெண்ட் கலவையை கடத்தும் கன்வெயர் தடம் அமைக்கப்பட்டுள்ளது. 11 இடங்களில் பணிகளை தொடக்க ஏதுவான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. 2 மாடி கட்டிடம் ரெயில் நிலையத்தின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் தலா ஒரு ரெயில் நிலைய கட்டிடம் உருவாகுகிறது. ராமேசுவரம் கோவில் கோபுர அமைப்புடன் நவீன கட்டிடக்கலை அம்சத்துடன் ரெயில் நிலைய கட்டிடம் அமைய இருக்கிறது. கிழக்குப் பகுதியில் 7158 சதுர மீட்டர் பரப்பில் 2 மாடி கட்டிடம் அமைய இருக்கிறது. இந்த கட்டிடத்தில் வருங்கால தேவைகளை கருத்தில் கொண்டு மேலும் 4 மாடிகள் கட்டும் வகையில் அடித்தளம் அமைக்கப்படுகிறது. இந்த கட்டிடத்தில் இருந்து நடைமேடை எண் 1, 2, 3 ஆகியவற்றிற்கு நேரடியாக செல்லும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. 4-வது நடைமேடைக்கு செல்வதற்கு மட்டும் அமையப் போகும் புதிய நடை மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டி இருக்கும். இருந்தாலும் கிழக்கு பகுதி கட்டிடத்தின் திறந்த வெளி வர்த்தக பயன்பாட்டு மாடி பகுதியில் இருந்து நேரடியாக நடைமேடை எண் 4 மற்றும் புதியதாக அமைய இருக்கும் நடைமேடை எண் 5-க்கும் செல்லும் வசதி அமைய இருக்கிறது.

இந்த கட்டிடத்தில் பயணிகளின் வசதிக்காக 2 எஸ்கலேட்டர்கள், 4 மின் தூக்கிகள் அமைக்கப்பட உள்ளன. ரெயில் நிலையத்திற்கு கூட்ட நெரிசல் ஏற்படாமல் வருகை மற்றும் புறப்பாடு பயணிகளுக்கு தனித்தனியாக பாதைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த கட்டிடத்தில் பயணச்சீட்டு பதிவு மையங்கள், காத்திருப்பு அரங்கு, கழிப்பறைகள், ரெயில்வே சேவை அலுவலகங்கள், உணவகங்கள் மற்றும் வர்த்தக மையங்கள் அமைய உள்ளன. வாகனங்கள் வந்து செல்ல தனிப்பகுதியும், இருபுறமும் தூண்களுடன் பாதசாரிகள் நடந்து செல்ல ராமேசுவரம் கோவில் பிரகார அமைப்பில் நடைபாதை அமைய இருக்கிறது. வாகன காப்பகங்கள் நடைமேடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க முன் பகுதியில் குழுவாக சுற்றுலா வரும் பயணிகள் காத்திருப்பு வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. வடக்குப்பகுதியில் அமைய இருக்கும் ஒரு மாடி கட்டிடத்தில் ரெயில்வே நிர்வாக அலுவலகங்கள் அமைய இருக்கின்றன. தற்போதைய நடைமேடைகள் புதுப்பிக்கப்பட்டு நவீனமயமாக இருக்கின்றன. மேலும் வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதியுடன் கூடிய காப்பகங்கள், ரெயில்வே பாதுகாப்பு படை அலுவலகம், ஓய்வு அறைகளுடன் கூடிய உப ரயில்நிலையை கட்டிடங்கள், ரயில்வே ஊழியர் குடியிருப்புகள், பயணிகள் பயன்பாட்டு பகுதியில் இடையூறு இல்லாமல் சென்று வரும் வகையில் பார்சல் அலுவலக கட்டிடம் ஆகியவை அமைய இருக்கின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி: தினத்தந்தி

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.