முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, March 31, 2016

இராமநாதபுரம் அருகே 5 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானவர் கொல்லப்பட்டது கண்டுபிடிப்பு!!

No comments :
5 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானவர் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கொன்று புதைக்கப்பட்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. கீழக்கரை டிஎஸ்பி மஹேஸ்வரி தலைமையிலான போலீஸ் விசாரணையில் துப்பு துலங்கியது. 


ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருகே களரிகண்மாய் பகுதியில் ஆலங்குளம் ஊராட்சியின் சார்பில் நீர்வள நிலவளத்திட்டத்தின்கீழ் கண்மாய் வரத்துகால்வாய் சீரமைக்கும் பணி நடைபெற்றது. இந்த கால்வாயில் மண் அள்ளியபோது கரைபகுதியில் என்ஜின் இல்லா பதிவு செய்யப்படாத புத்தம்புதிய மோட்டார்சைக்கிள் இருந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்த வழக்கில் எஸ்.பி. மணிவண்ணன் உத்தரவின் பேரில் கீழக்கரை டி.எஸ்.பி. மகேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

அந்த‌ இடத்தில் கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிளின் முக்கிய மையப்பகுதியில் பதிவாகி இருந்த தயாரிப்பு எண்ணின் அடிப்படையில் விசாரித்தபோது அது இதம்பாடல் பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவருடைய மகன் தர்மர்(வயது40) வாங்கிய மோட்டார்சைக்கிள் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் சென்று மீண்டும் தோண்டி பார்த்தபோது தர்மரின் கைப்பை கிடைத்தது. அதில் இருந்த தகவல்களின் அடிப்படையில் தர்மர் குறித்த முழு விவரங்கள் தெரியவந்தன. கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ந் தேதி புதிய மோட்டார்சைக்கிளில் வெளியில் சென்ற தர்மர் மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவருடைய தங்கை யசோதை அளித்த புகாரின் அடிப்படையில் ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். தர்மருக்கு திருமணமாகி பாண்டியம்மாள் என்ற மனைவியும், தர்மபார்த்தசாரதி என்ற மகனும், கார்த்தீஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.


பல ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த தர்மர் கடந்த 2010-ம் ஆண்டுதான் சொந்த ஊருக்கு வந்து குடும்பத்துடன் தங்கியுள்ளார். தர்மர் குறித்த விவரங்கள் போலீசாருக்கு தெரியவந்த நிலையில் மனைவி பாண்டியம்மாள் மற்றும் இதம்பாடல் பகுதியை சேர்ந்த பசுமலை என்பவருடைய மகன் அரசு பஸ் கண்டக்டர் முருகேசன்(45) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து  டிஎஸ்பி மஹேஸ்வரி தலைமையிலான போலீசார் தீவிர போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் முருகேசனுக்கும் பாண்டியம்மாளுக்கும் பழக்கம் உள்ள தகவல் தெரியவந்தது.  இந்த பழக்கம் குறித்து அறிந்த தர்மர் பலமுறை 2 பேரையும் கண்டித்துள்ளார். இதுதவிர, முருகேசன் தனது தம்பி அழகர்சாமியை பாண்டியம்மாளின் மகள் கார்த்தீஸ்வரிக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இதுவும் தர்மருக்கு

பிடிக்கவில்லையாம். இதன்காரணமாக தர்மருக்கும் முருகேசனுக்கும் விரோதம் முற்றியது. தனது கள்ளக்காதல் உள்ளிட்டவற்றிற்கு இடையூறாக இருப்பதால் தர்மரை தீர்த்துக்கட்ட முருகேசன் திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக வெளியூரை சேர்ந்த தனது நண்பர்களுடன் சேர்ந்து தர்மரை தீர்த்துக்கட்ட சமயம் பார்த்து காத்திருந்துள்ளார்.

இந்தநிலையில் தர்மர் புதிய மோட்டார்சைக்கிளில் செல்வதை அறிந்து தனது கூட்டாளிகளுடன் சென்று மடக்கி ஆலங்குளம் கண்மாய் பகுதிக்குள் கொண்டு சென்று தாக்கி கொலை செய்துள்ளனர். இதன்பின்னர் மோட்டார்சைக்கிள் மட்டும் தனியாக கிடந்தால் தர்மரை கொலை செய்தது தெரிந்துவிடும் என்பதால் அதனை என்ஜின் இல்லாமல் மண்ணை தோண்டி புதைத்து வைத்துள்ளனர். இதன்பின்னர் தர்மரின் உடலை கொண்டு சென்று இதம்பாடல் அருகே உள்ள பெரியஇழை பஸ்நிறுத்தம் பகுதியில் பெரியகண்மாய் பகுதிக்குள் குழிதோண்டி புதைத்துள்ளனர். மோட்டார்சைக்கிளுடன் தர்மர் குடும்பத்தை விட்டு எங்கோ சென்றுவிட்டதாக ஊராரை நம்ப வைத்துள்ளனர்.

இதன்பின்னர் முருகேசன் தனது கள்ளத்தொடர்பை எந்தவித இடையூறும் இல்லாமல் தொடர்ந்து வந்துள்ளார். இதுகுறித்த தகவல்களை போலீசாரிடம் முருகேசன் தெரிவித்ததை தொடர்ந்து கீழக்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரி, ஏர்வாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்பாண்டி உள்ளிட்ட போலீசார் முருகேசன் மற்றும் பாண்டியம்மாளை அழைத்து கொண்டு தர்மர் புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்றனர். அங்கு தாசில்தார் கோவிந்தன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் முன்னிலையில் தர்மரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. முற்றிலும் மட்கிய நிலையில் ஒருசில சிறிய எலும்பு துண்டுகள் மற்றும் நைலான் கயிறு மட்டும் கிடைத்தது. இதன்படி தர்மரின் கழுத்தை இறுக்கி கொலை செய்திருக்கலாம் என்றும், அல்லது கொலை செய்து கை,கால்களை கட்டி  புதைத்திருக்கலாம் என்றும் போலீசார் விசாரணையில் தெரிய வந்ததது.


இதனை தொடர்ந்து அரசு டாக்டர்கள் மூலம் அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.  இதனை தொடர்ந்து இக்கொலை தொடர்பாக முருகேசன் கைது செய்யப்பட்டார். மாயமானதாக கூறப்பட்டவர் கொலை செய்யப்பட்ட விவரம் 5 ஆண்டுகளுக்கு பின்னர் தெரியவந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கண்மாய் வரத்துக்கால்வாயை மராமத்து செய்தபோது மோட்டார்சைக்கிள் கிடைத்ததாலும் எஸ்பி உத்தரவில் டிஎஸ்பி மஹேஸ்வரி தலைமயிலான போலீசாரின் தொடர் விசாரணையினால‌ இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இல்லாவிட்டால் 5 ஆண்டுகளாக மாயமானதாக கூறப்பட்ட தர்மர் கடைசிவரை மாயமாகியே இருந்திருப்பார்.


செய்தி: தினகரன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்களுக்காக புதிய எப்.எம்.!!

No comments :

ராமேசுவரம் பகுதி மீனவர்கள் கடலில் ஏற்படும் மாற்றங்களை தெரிந்துகொள்ளும் வகையில் கடல் ஒசை எப்.எம் புதிய வானொலி நிலையம் விரைவில் திறக்கப்படவுள்ளது என தனியார் அறக்கட்டளை நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

இது குறித்து கடல் ஒசை எப்.எம் வானொலி நிலைய இயக்குநர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ கூறியது: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் நேசக்கரங்கள் தனியார் அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த அறக்கட்டளை சார்பில், கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழச்சிகளை நடத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் பயன் பெறும் வகையில் பாம்பன் பகுதியில் கடல் ஒசை எப்,எம் வானொலி நிலையம் விரைவில் திறக்கப்படவுள்ளது.



இந்த வானொலி மூலம் கடலில் ஏற்படும் சுனாமி, புயல், நீரோட்டம், கடல் சீற்றம் கடலில் மீனவர்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை சந்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தல், அரசு அறிவிப்புகளையும் பொதுமக்களிடம் பகிர்ந்து கொள்ளவும்,வேலைவாய்ப்பு செய்திகளை பற்றி தெரிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வானொலியின் தொலை தொடர்பை 15 கடல் மைல் தொலைவு வரை பயன்படுத்தலாம். இந்த வானொலி நிலையம் ஏப்ரல் மாதம் திறக்கப்படவுள்ளது என அவர் தெரிவித்தார்.

பேட்டியின் போது அறக்கட்டளையின் செயலாளர் குணசேகரன், பொருளாளர் அப்துல்காதர் மற்றும் நம்புசேகரன் ராமநாதன், அருள்ரோச் ஆகியோர் கலந்துகொண்டனர்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமேசுவரம் கோயில் உண்டியல் வசூல் ரூ.68 லட்சம்!!

No comments :

ராமேசுவரம் கோயில் உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் ரொக்கமாக ரூ.68 லட்சத்துக்கு மேல் கிடைத்திருந்தது.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள உண்டியல்களை திறந்து எண்ணும் பணி திருக்கல்யாண மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் செல்வராஜ் முன்னிலையிலும், இந்து அறநிலையத் துறையின் பரமக்குடி உதவி ஆணையர் ரோசாலிசுமைதா, ஆய்வர் சுந்தரேஸ்வரி ஆகியோர் மேற்பார்வையிலும்  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பக்தர்களால் உண்டியலில் செலுத்தப்பட்ட வெளிநாட்டுப் பணம் உள்பட ரொக்கமாக 68 லட்சத்து 30 ஆயிரத்து 124 ரூபாயும், 95 கிராம் தங்கமும், 4 கிலோ 110 கிராம் வெள்ளியும் கிடைத்திருந்தது.



இப்பணியில், கோயில் உதவிக் கோட்டப் பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர்கள் ராஜாங்கம், ககாரீன்ராஜ், பாலசுப்பிரமணியன், காசாளர் ராமநாதன், இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கமலநாதன் மற்றும் பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், ஆசிரியைகள், இந்தியன் வங்கி ஊழியர்கள் மற்றும் கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் ஈடுபட்டனர்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)