முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, February 28, 2017

ராமநாதபுரம் நகருக்குள் பகல் வேளையில் சரக்கு வாகனங்கள் நுழைய மார்ச் 1ம் தேதி முதல் தடை!!

No comments :
சரக்கு வாகனங்கள் ராமநாதபுரம் நகருக்குள் பகல் வேளையில் நாளை (மார்ச் 1) முதல் நுழைய தடை விதிக்கப்படுகிறது.

ராமநாதபுரம் பழைய, புதிய, அரசு மருத்துவமனை ரோடு, சாலை தெரு, அக்ரஹாரம் ரோடு, அரண்மனை, மணிக்கூண்டு, சிகில்ராஜ வீதி, வண்டிக்காரத்தெரு, கேணிக்கரை சந்திப்பு உள்ளிட்ட நகர் பகுதிகளில் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.

இதனால் காலை வேளையில் பள்ளி, கல்லுாரி வாகனங்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாத நிலை உள்ளது. வெளியூர்களில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள் கடைகள் முன் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டு சாமான்கள் இறக்கப்படுவதால் இடையூறுகள் ஏற்படுகிறது.
வண்டிக்காரத் தெருவில் நகராட்சி, தாலுகா, பத்திரப்பதிவு அலுவலகங்கள், வங்கிகள், ஏ.டி.எம்., மையங்கள், பல்பொருள் அங்காடிகள் உள்ளன. இப்பகுதியில் காலை 8:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இத்தகைய சிரமங்களை தவிர்க்க பல மாதங்களுக்கு முன் ஒரு வழிப்பாதை அமல்படுத்தப்பட்டது.

இதனால் தொலைதுார அரசு பஸ்கள், கனரக வாகனங்கள் வண்டிக்கார தெரு வழியாக சென்றதால் உயர் மின் கம்பிகளில் உரசி விபத்து அபாயம் ஏற்பட்டது. மேலும் வர்த்தக சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஒரு வழிப்பாதை திட்டத்தை விலக்கி கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தியது. இதையடுத்து இத்திட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

நகருக்குள் நுழையும் சரக்கு வாகனங்களால் ஏற்படும் இடையூறுகளை தவிர்க்க மாற்றுத்திட்டம் அமல்படுத்த எஸ்.பி., மணிவண்ணன் அறிவுறுத்தினார். இது தொடர்பாக உதவி எஸ்.பி., சர்வேஸ்ராஜ், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றம் போலீசாரிடம் ஆலோசனை நடத்தினர்.

இதன்படி ராமநாதபுரம் நகருக்குள் சரக்கு வாகனங்கள் நாளை (மார்ச் 1) முதல் பகலில் நுழைய தடை விதிப்பது, மதியம் 2: 00மணி முதல் மாலை 4:00 மணி வரை வந்து செல்ல அனுமதிப்பது, தடையை மீறும் சரக்கு வாகனங்கள் மீது நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, February 26, 2017

ராமநாதபுரத்தில் நகை அடகு நிறுவனத்தில் ரூ.11லட்சம் மோசடி!!

No comments :
ராமநாதபுரத்தில் நகை அடகு நிறுவனத்தில் ரூ.11லட்சம் மோசடி செய்தது தொடர்பாக அந்நிறுவனத்தின் மேலாளரை காவல்துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.

ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவில் உள்ள நகை அடகு நிறுவனத்தின் மேலாளர் காசி(38), நகை மதிப்பீட்டாளர் சரவணக்குமார் மற்றும் ஊழியர் குமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து நிறுவனத்திலிருந்த 148 கிராம் தங்கம் மற்றும் ரொக்கம் ரூ.7.37 லட்சம் உள்பட மொத்தம் ரூ.11,17,943 மோசடி செய்தனராம்.இந்த விபரம் தணிக்கையில் தெரிய வந்ததையடுத்து அந்நிறுவனத்தின் மண்டல மேலாளர் சுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரில் ராமநாதபுரம் பஜார் போலீஸார் வழக்குப்பதிவு செய்து நிறுவனத்தின் மேலாளரான காசியை கைது செய்துள்ளனர்.

வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரையும் தேடி வருகின்றனர்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Saturday, February 25, 2017

மாதம் 2–ந்தேதி பிளஸ்2 தேர்வுகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் 9,471 பேர் தேர்வு எழுதுகின்றனர்!!

No comments :
தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டிற்கான பிளஸ்2 தேர்வுகள் வருகிற மார்ச் மாதம் 2–ந்தேதி தொடங்கி 31–ந்தேதி வரை நடைபெறுகின்றன.
இந்த தேர்வை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் 4,236 மாணவர்களும், 5,235 மாணவிகளுமாக 9,471 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதேபோல, பரமக்குடி கல்வி மாவட்டத்தில் 3,122 மாணவர்களும், 3,341 மாணவிகளுமாக மொத்தம் 6,463 பேர் தேர்வு எழுதுகின்றனர்.


இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு 7,358 மாணவர்களும், 8,576 மாணவிகளுமாக மொத்தம் 15,934 பேர் பிளஸ்2 தேர்வு எழுதுகின்றனர். இதற்காக ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் 25 தேர்வு மையங்களும், பரமக்குடி கல்வி மாவட்டத்தில் 20 கல்வி மையங்களும் அமைக்கப்பட்டு உள்ளன.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Thursday, February 23, 2017

பரமக்குடியில் புதிதாக போடப்பட்ட தார்சாலையில் பள்ளம்!!

No comments :
பரமக்குடியில் புதிதாக போடப்பட்ட தார்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பரமக்குடி நகராட்சிக்குள்பட்ட 36ஆவது வார்டு திருவள்ளுவர் நகர் தெற்கு பள்ளிவாசல் செல்லும் சாலையில் கடந்த ஜனவரி மாதம் புதிதாக தார்சாலை போடப்பட்டது. அப்போது சாலையின் இருபுறமும் உள்ள வாருகால் மற்றும் கழிவுநீரை கடத்துவதற்கான கல்வெட்டையும் சீரமைக்க வில்லை என கூறப்படுகிறது.இந்நிலையில் அவ்வழியாக கட்டுமான பொருள்கள் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனங்களால் சாலை முற்றிலும் சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கனரக வாகனஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர். 

ஆகவே, இச்சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

தனுஷ்கொடியில் மீண்டும் தபால் நிலையம்!!

No comments :
ராமேசுவரத்தில் இருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தனுஷ்கோடி. கடந்த 1964-ம் ஏற்பட்ட புயலால் தனுஷ்கொடி நகரமே முழுமையாக அழிந்து போனது. இந்த புயலில் அங்கிருந்த தபால் நிலைய கட்டிடமும் முழுமையாக இடிந்து மண்ணோடு மண்ணாக காட்சியளித்து வருகிறது.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்குமுன் தனுஷ்கோடி பகுதியை தபால் துறை அதிகாரிகளுடன் பார்வையிட்ட முதன்மை தலைவர் சார்லஸ் நிக்கோலஸ் மீனவ மக்களின் வசதிக்காக தனுஷ்கோடியில் கிளை தபால்நிலையம் புதிதாக திறக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையடுத்து தனுஷ்கோடி கம்பிப்பாடு பகுதியில் உள்ள மண்டபம் ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகத்தில் நேற்று புதிய கிளை தபால் நிலையம் திறக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவிற்கு தபால் துறை மாவட்ட உதவி கண்காணிப்பாளர்கள் துளசிதாஸ், விஜயகோமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய கிளை தபால் நிலையத்தை மாவட்ட தலைமை கோட்ட கண்காணிப்பாளர் உதய்சிங், தனுஷ்கோடி கிராம தலைவர் செல்லத்துரை, ரோட்டரி முன்னாள் தலைவர் சுடலை, ஓய்வு பெற்ற தபால்காரர் குருசாமி ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். 


விழாவில் ரோட்டரி நிர்வாகிகள் கிருஷ்ணன், ராமேசுவரம் தபால் நிலையஅதிகாரி நாகராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த புதிய கிளை தபால் நிலையத்தில் மீனவ பெண்கள் பலர் புதிதாக சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கான விண்ணப்ப படிவத்தை பெற்று சேமிப்புகணக்கு தொடங்கினர்.


பின்னர் தலைமை கோட்ட கண்காணிப்பாளர் உதய்சிங் நிருபர்களிடம் கூறியதாவது:- புயலால் அழிந்துபோன தனுஷ்கோடியில் மீனவ மக்கள் வசதிக்காக புதிய கிளை தபால் நிலையம் திறக்கப்பட்டுஉள்ளது. இங்கு தபால் சேவை, மணியார்டர், சேமிப்பு வங்கி சேவை, காப்பீடு சேவை உள்ளிட்ட அனைத்து தபால் சேவைகளும் வழங்கப்படும். ராமநாதபுரம் கோட்டத்தில் தனுஷ்கோடியில் திறக்கப்பட்டுள்ள தபால் நிலையம் 247-வது கிளையாகும். ராமநாதபுரம் கோட்டத்தில் உள்ள 57 தபால் நிலையங்களில் 53 ஒருங்கிணைந்த வங்கி சேவை மையங்களாக மாற்றப்பட்டு உள்ளன. இதன் மூலம் எந்த ஒரு தபால் நிலையத்திலும் நடப்பில் உள்ள கணக்கில் வாடிக்கையாளர் பணப் பரிவர்த்தனை செய்யலாம். ஏ.டி.எம். வசதி ராமநாதபுரம், ராமேசுவரம் தபால் நிலையங் களில் தொடங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
 (ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Wednesday, February 22, 2017

கோயிலை சுற்றியுள்ள மதுபான கடைகளால் பக்தர்களுக்கு சிரமம்!!

No comments :
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலை சுற்றியுள்ள மதுபான கடைகளால் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பரிதவிக்கின்றனர்.

ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்துசெல்கின்றனர். இந்நிலையில் கோயிலை சுற்றி நகரின் முக்கிய பகுதிகளான பஸ் ஸ்டாண்ட், தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை, ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 11 டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கிவருகிறது.


பார் வசதி உள்ளதால் இந்த கடைகளில் பின்வாசல் வழியான மதுபான வியாபாரம் 24 மணி நேரமும் தங்குதடையின்றி நடக்கிறது.
பார் மற்றும் பொதுஇடங்களில் அமர்ந்து மது அருந்தும் குடிமகன்கள் போதை தலைக்கேறிய நிலையில் அவ்வப்போது ரகளையில் ஈடுபடுவது, அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசுவது அன்றாட நிகழ்வாகி வருகிறது.


போதை ஆசாமிகள் சிலர் பெண் பயணிகள், பக்தர்களை குறிவைத்து தள்ளாடியவாறு அவர்கள் மீது இடிக்கின்ற சம்பவங்களும் நடக்கிறது. இவை கோயிலுக்கு வரும் பக்தர்களையும், சுற்றுலா பயணிகளையும் பரிதவிக்க வைக்கிறது. மேலும் புனித நகர் என்ற பெருமைக்கு பங்கம் விளைவிப்பதாகவும் உள்ளது. விதிமுறைகளை மீறி கோயிலை சுற்றி திறக்கப்பட்டுள்ள மதுபான கடைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுர மாவட்டத்தில் நிலவிய மூடுபனியால் வாகன ஓட்டிகள் அவதி!!

No comments :
ராமநாதபுரத்தில் நேற்று காலை நிலவிய மூடுபனியால் வாகன ஓட்டிகள் தடுமாறினர். ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவமழை பொய்த்துவிட்ட நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக பனிப்பொழிவு அதிகமாக உள்ளது.

இரவு 8:00 மணி முதல் மறுநாள் காலை 7:00 மணி வரை நிலவும் பனிப்பொழிவால் குளிர் வாட்டி வதைக்கிறது. பனிப்பொழிவுக்கு பயந்து காலை 8:00 மணிவரை வெளியே நடமாட அஞ்சி மக்கள் வீடுகளுக்குள் முடங்கிவிடுகின்றனர். வேலைக்கும், கடைவீதிகளுக்கும் செல்வோர் ஸ்வெட்டர், பனிக்குல்லா அணிந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், நேற்று காலை மூடுபனி நிலவியது. இதன்காரணமாக எங்கு பார்த்தாலும் புகை மண்டலம் போல் காட்சியளித்தது. எதிரே வரும் வாகனங்களை அடையாளம் காண முடியாமல் வாகன ஓட்டிகள் தடுமாறினனர். முகப்பு விளக்கு மற்றும் மஞ்சள் விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்கள் சென்றதை காணமுடிந்தது. அதிகாலை 3:00 மணி முதல் காலை 8:00 மணிவரை மூடுபனி நீடித்தது.

இதே பனிப்பொழிவு ராமேஸ்வரம், ஆர்.எஸ்.மங்கலம், கீழக்கரை, சாயல்குடி, கமுதி, பரமக்குடி உள்பட மாவட்டம் முழுவதும் நிலவியது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

சிவராத்திரி - மாவட்டம் முழுதும் சிறப்பு ஏற்பாடு!!

No comments :
மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட கோயில்களில் சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடக்கிறது.

முருகனுக்கு தைப்பூசம், பங்குனி உத்திரம், விநாயகருக்கு ஆவணி சதுர்த்தி, அம்மனுக்கு ஆடிப்பூரம், சிவனுக்கு மாசி களரி எனும் மகா சிவராத்திரி விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான சிவராத்திரி விழா பிப்., 24ல் நடக்கிறது.கிராமங்களில் குல தெய்வ வழிபாட்டுக்கு பின் சிவராத்திரி விழா களைகட்டுவது வழக்கம்.

கலை நிகழ்ச்சிகளும் நடக்கும். ராமநாதபுரம் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட கோயில்களில் சிவராத்திரி விழா நடக்கிறது.


இதற்காக விரதம் துவக்கியுள்ள பக்தர்கள் கோயில்களில் உழவாரப்பணிகளை துவக்கியுள்ளனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Monday, February 20, 2017

வறட்சி நிவாரணம் பெற விவசாயிகள் ஆவணங்கள் சமர்ப்பிக்க உத்தரவு!!

No comments :
தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டதன் காரணமாக, அனைத்து மாவட்டங்களும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுஉள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டதன் காரணமாக, அனைத்து மாவட்டங்களும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


இந்த நிவாரண தொகை சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட உள்ளதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக்கணக்கு எண், வங்கி விவரம் மற்றும் ஆதார் எண் போன்ற விவரங்களை கிராம நிர்வாக அலுவலர் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்னும் சில விவசாயிகள் இதுவரை போதிய விவரங்களை அளிக்காமல் உள்ளனர்.


எனவே, இதுவரை விவரங்களை அளிக்காத விவசாயிகள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் ஏதேனும் ஒரு கிளையில் உடனடியாக வங்கி கணக்கு தொடங்கி அதன் விவரத்தினையும் ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் ஆகிய விவரங்களையும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடம் 2 நாட்களுக்குள் அளிக்க வேண்டும். வங்கி கணக்கு விவரங்கள் அளிக்காத விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண தொகை உடனடியாக வழங்கப்படமாட்டாது என்று கலெக்டர் நடராஜன் உத்தரவிட்டுள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்ட நடன, ஓவிய போட்டிகள்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றத்தில் 5 முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கலை ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் பரதநாட்டியம், கிராமிய நடனம், குரலிசை, ஓவியம் ஆகிய கலைகளில் மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.இப்போட்டிகள் வருகிற 23ம் தேதி காலை 10 மணி அளவில் மாவட்ட அரசு இசை பள்ளியில் வளாகத்தில் நடைபெற உள்ளது.

இதில் கலந்து கொண்டு மாநில அளவில் போட்டிகளுக்கு சென்று வெற்றிபெற்றால்
முதல் பரிசாக ரூ.10 ஆயிரம்,
2ம் பரிசாக ரூ.7 ஆயிரத்து 500,
3ம் பரிசாக ரூ.5 ஆயிரம்


மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என திட்ட அலுவலர் லோக சுப்பிரமணியன் தெரிவித்தார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

நாளை பிப்-21ம் தேதி ராமநாதபுரம் மாவட்ட காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட காஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பிப்.,21 மாலை 4 மணிக்கு நடக்கிறது.

மாவட்ட வருவாய் அலுவலர் அலிஅக்பர் தலைமை வகிக்கிறார். காஸ் விநியோகம் தொடர்பான குறைகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் காஸ் ஏஜென்ஜிகள் சார்பில் விளக்கம் அளிக்கப்படும்,


என கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, February 19, 2017

ஒளி பெற்றது எமனேஸ்வரம் தரைப்பாலம், முகவை முரசு செய்தியின் எதிரொலி!!

No comments :
நம் முகவை முரசு செய்தியின் எதிரொலி, ஒளி பெற்றது எமனேஸ்வரம் தரைப்பாலம்.

முயற்சி எடுத்த திரு. சேக் அப்துல்லாஹ் அவர்களுக்கும், நகர நிர்வாக்த்திற்கும் நெஞ்சான்ற நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.


எமனேஸ்வரம் வைகையாற்று சர்வீஸ் சாலைகளிலும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் முன்பாக தர்னா போராட்டத்தில் ஈடுபட்டவர் கைது!!

No comments :
ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் முன்பாக முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் வெள்ளிக்கிழமை திடீர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார்.

எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் வணிகவரித்துறை அமைச்சராக இருந்தவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த டி.ராமசாமி. இவரது மகன் டி.ஆர்.சீனிவாசன் . ராமநாதபுரம் நகர் ஜெயலலிதா பேரவையின் செயலாளரான இவர் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஆவார்.


இவர் வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் டி.பிளாக் பேருந்து நிறுத்ததில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்துக்கு வந்தார். ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினரான அமைச்சர் மணிகண்டன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கே ஆதரவளிக்க வேண்டும் எனக்கூறி திடீரென தர்னாவில் ஈடுபட்டார்.

தகவலறிந்து வந்த கேணிக்கரை காவல்துறையினர் டி.ஆர்.சீனிவாசனையும் கட்சித் தொண்டர்கள் இருவரையும் கைது செய்தனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

பாம்பன் கடற்கரையில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்!!

No comments :
பாம்பன் கடற்கரையில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகளை சுங்கத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

ராமேசுவரம் பகுதியிலிருந்து இலங்கைக்கு போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதன் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பாம்பன் முந்தல் முனை கடற்கரையில் ரூ.1 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்ததை கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர். 

இந்த மாத்திரைகளை கொண்டு வந்தவர்கள் யார், இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்டதா என சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

இ–சேவை மையம் மூலம் வழங்கப்படும் இலவச வண்ண வாக்காளர் அடையாள அட்டை!!

No comments :
புதிய வாக்காளர்களுக்கு இசேவை மையம் மூலம் புகைப்பட அடையாள அட்டை இலவசமாக வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.
  
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், இடமாற்றம் செய்ய விண்ணப்பங்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1–ந்தேதி முதல் 30–ந்தேதி வரை பெறப்பட்டன. இதில் மொத்தம் 27,065 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 25,275 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. அவர்கள், கடந்த ஜனவரி மாதம் 5–ந்தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.மேலும், இடப்பெயர்ச்சி, இறப்பு மற்றும் இரட்டை பதிவு ஆகியவற்றின் காரணமாக 1,554 பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன.

புதிய வாக்காளர்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இசேவை மையங்கள் மூலம் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பத்தில் தங்களின் கைப்பேசி எண்ணை அளித்துள்ள புதிய வாக்காளர்களுக்கு ஒரு தனிப்பட்ட அடையாள எண், குறுஞ்செய்தி தேர்தல் ஆணையத்தால் அனுப்பப்படும்.


இந்த அடையாள எண்ணை தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள இசேவை மையத்தில் காண்பித்து வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

தங்களுடைய கைபேசி எண்ணை அளிக்காத புதிய வாக்காளர்கள், தேர்தல் துறையின் கட்டணமில்லா உதவி எண் 1950–ஜ தொடர்புகொண்டு கைப்பேசி எண்ணை பதிவுசெய்ய வேண்டும். அவர்களுக்கும் அடையாள எண் அனுப்பப்படும். அவர்களும் தங்களுடைய ஏதேனும் ஒரு புகைப்பட அடையாள சான்றை காண்பித்து இசேவை மையங்களில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.


இந்த தகவலை மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் பஸ் மீது கல்வீசி தாக்கிய தி.மு.க.வினர் கைது!!

No comments :
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டு பஸ் மீது கல்வீசி தாக்கிய தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

தமிழக சட்டசபையில் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரத்தில் உயர் நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் சுப.தங்கவேலன், மாவட்ட செயலாளர் சுப.த.திவாகரன் தலைமையில் அக்கட்சியினர் புதிய பஸ் நிலையம் பகுதியில் திடீரென்று பஸ் மறியலில் ஈடுபட்டனர்.இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் அகமதுதம்பி, நகர் செயலாளர் கார்மேகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பாரகு, மாணவரணி அமைப்பாளர் துரைச்சாமி, முன்னாள் கவுன்சிலர் அய்யனார், இலக்கிய அணி கிருபானந்தம், பசூல்சாதிக், மணிமுத்தரசி கோவிந்தராஜ், மாணவரணி துணை அமைப்பாளர் கூரிதாஸ் உள்பட ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினரை கைது செய்தனர்.

ராமேசுவரத்தில் நகர் தி.மு.க. செயலாளர் நாசர்கான் தலைமையில் ஏராளமானோர் திட்டக்குடி சந்திப்பில் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் மீது கல்வீசி தாக்கியதில் முன்புற கண்ணாடி உடைந்தது. பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று சாலைமறியல் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

இதேபோல, கமுதி பஸ் நிலையம் பகுதியில் தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தூர்பாண்டியன் தலைமையில் பஸ் மறியலில் ஈடுபட்டனர். சாயல்குடியில் ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் தலைமையில் பஸ் மறியலில் ஈடுபட்ட 16 பேரை போலீசார் கைது செய்தனர். பரமக்குடியில் ஐந்து முனை பகுதியில் நகர் செயலாளர் சேதுகருணாநிதி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 37 பேர் கைது செய்யப்பட்டனர். பெருநாழி விளாத்திகுளம் விலக்கு ரோட்டில் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மனோகரன் தலைமையில் பஸ் மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருவாடானை ஓரியூர் விலக்கு ரோட்டில் ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 41 பேர் கைது செய்யப்பட்டனர். ஆர்.எஸ்.மங்கலம் பஸ் நிலையம் அருகே ஒன்றிய செயலாளர் மதிவாணன் தலைமையில் பஸ் மறியலில் ஈடுபட்ட 40 பேர் கைது செய்யப்பட்டனர். முதுகுளத்தூர் பஸ் நிலையம் முன்பு மேற்கு ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைதுசெய்தனர். தேரிருவேலி கிராமத்தில் மறியலில் ஈடுபட்ட கிழக்கு ஒன்றிய செயலாளர் பூபதி மணி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலாடி தேவர் சிலை அருகே தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜசேகர் தலைமையில் முன்னாள் அமைச்சர் சந்தியமூர்த்தி, முன்னாள் ஊராட்சி தலைவர் அரண்மனை சாமி, வக்கீல் அசன் உள்ளிட்ட தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று 31 பேரை கைது செய்தனர்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Tuesday, February 14, 2017

ராமநாதபுரத்தில் வரும் பிப்-17ம் தேதி விவசாயிகள் குறை தீர் கூட்டம்!!

No comments :


ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊராட்சி மன்ற கூட்ட அரங்கில் ஆட்சியர் எஸ்.நடராஜன் தலைமையில் வரும் 17-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் விவசாயிகளும், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த பொருள்கள் பற்றி மட்டுமே விவாதிக்க அனுமதிக்கப்படும் என ஆட்சியர் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் பிப்-22 ஆம் தேதி செயற்கை ஆபரணத் தயாரிப்பு இலவச பயிற்சி!!

No comments :

ராமநாதபுரத்தில் செயற்கை ஆபரணத் தயாரிப்பு இலவச பயிற்சி முகாம் வரும் 22 ஆம் தேதி தொடங்க இருப்பதாக பயிற்சி மைய இயக்குநர் திங்கள்கிழமை தெரிவித்தார்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 23 பேருக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பயிற்சி மைய இயக்குநர் ஆர்.சியாமளாநாதன் பேசியது:

இம்மையத்தின் சார்பில் செல்லிடப்பேசி பழுது பார்த்தல், இன்வர்ட்டர் மற்றும் யு.பி.எஸ். தயாரிக்கும் பயிற்சி உள்ளிட்டவை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

வரும் 22 ஆம் தேதி முதல் செயற்கை ஆபரணத் தயாரிப்பு பயிற்சி தொடங்கவுள்ளது. 10 நாள்கள் பயிற்சி நடைபெறும். இப்பயிற்சியில் சேர விரும்புவோர் 8 ஆம் வகுப்பு வரை படித்திருந்தாலே போதுமானது.

பயிற்சி உள்பட மதிய உணவு, பயிற்சிக் கையேடுகள் மற்றும் பயிற்சிக்கான சான்றிதழ்  அனைத்தும் இலவசமாகவே வழங்கப்படும். தினசரி காலை 10 மணிக்கு பயிற்சி தொடங்கி மதியம் 6 மணி வரை நடைபெறும். பெயரைப் பதிவு செய்யவும்,

மேலும் விபரங்களுக்கும் 04567-221612 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்றார்.

நிறைவு நாள் விழாவுக்கு ஆதிதிராவிடர் வீட்டு வளர்ச்சிக் கழக அலுவலர் கண்ணன் முன்னிலை வகித்தார். பயிற்சி மைய மேலாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Monday, February 13, 2017

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து, இருவர் உயிரிழப்பு!!

No comments :
ராமநாதபுரம் அருகே அரசு நகர்ப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் காயமடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பொட்டகவயல் பகுதியிலிருந்து பரமக்குடிக்கு சென்ற அரசு நகர்ப் பேருந்து நயினார்கோயில் அருகே பாப்பார் கூட்டம் கிராமப் பகுதியில் திடீரென ஸ்டேரிங் பழுதாகி சாலையின் இடது புறத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காடர்ந்தகுடி கிராமத்தைச் சேர்ந்த சிதம்பரம் மகன் ஆறுமுகம்(55), பி.கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சன் மனைவி பர்வதம்(60) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும், பலத்த காயமடைந்த பொட்டக வயலைச் சேர்ந்த தங்கம்(32)வாசுகி(44) ஆகிய இருவரும் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

லேசான காயமடைந்த கொட்டகுடி பத்மினி(51), காச்சானி கிராமத்தைச் சேர்ந்த இந்திரா(50), பி.கொடிக்குளம் பஞ்சவர்ணம்(60), லெட்சுமி(35), வெள்ளையம்மாள் (46)ஆகிய 5 பேரும் ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இது தொடர்பாக நயினார்கோயில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பேருந்து ஓட்டுநர் கிருபாகரன், நடத்துநர் அர்ச்சுணன் ஆகிய இருவரிடம் விசாரித்து வருகின்றனர்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, February 12, 2017

முன்னாள் அமைச்சர் வ.சத்தியமூர்த்தியிடம் ரூ.1.70 லட்சம் மோசடி!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் முன்னாள் அமைச்சர் வ.சத்தியமூர்த்தியிடம் ரூ.1.70 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கடலாடி தாலுகா மேலச்செல்வனூர் கிராமத்தில் வசித்து வருபவர் முன்னாள் அமைச்சர் வ.சத்தியமூர்த்தி. இவர் தற்போது திமுக தீர்மானக் குழு மாநில துணைச் செயலராக உள்ளார். இவரது செல்லிடப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் இருவர், தங்களை வங்கி ஊழியர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர். பின்னர் அவர்கள், அவரது ஏ.டி.எம். கார்டுக்குரிய நாள்கள் காலாவதி ஆகிவிட்டதாகவும், அதை புதுப்பிக்க அதன் எண்ணைத் தெரிவிக்குமாறும் கூறினர். 

.

இதை நம்பிய அவர் அந்த எண்ணைத் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவரது கணக்கில் இருந்த ரூ.1,70,285 இணையம் மூலமாக திருடப்பட்டது

இதுகுறித்து தெரியவந்ததும் கடலாடி காவல் நிலையத்தில் சத்தியமூர்த்தி புகார் அளித்தார். அப்புகாரில் 7255807163 என்ற செல்லிடப்பேசி எண்ணிலிருந்து தான் வங்கி ஊழியர்கள் பேசியது போல அந்த மர்ம நபர்கள் ஏ.டி.எம். எண்ணைக் கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

புகாரின் பேரில் கடலாடி காவல் ஆய்வாளர் முத்துராஜ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,53,340 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் பாதிப்பு - கலெக்டர்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவு பருவமழை பெய்யாததால் 1,53,340 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் அருகே தொருவளூர் கிராமத்தில் பெரியகண்மாய் உள்புற நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகளை சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர் கூறியது:

இம்மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையை எதிர்பார்த்து 1,55,305 ஹெக்டேர் பரப்பளவில் நெல், சிறுதானியம் மற்றும் இதர பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன. ஆனால் பருவமழை பெய்யாததால் 1,53,340 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டன. பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் மொத்தம் 1,26,049 விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்துள்ளனர்.

வறட்சியினால் ஏற்பட்டுள்ள பயிர்ப் பாதிப்புகளை மத்தியக் குழு அலுவலர்கள் ஆய்வு செய்தனர். விவசாயிகளுக்கு உரிய பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்க ஏதுவாக மாவட்டத்தில் வருவாய் கிராமம் வாரியாக அடிப்படை மகசூல் அளவுக் கணக்கீடு செய்வதற்காக புள்ளியியல் துறையின் மூலம் ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் தலா 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.


இவ்விடங்களில் பயிர் அறுவடை பரிசோதனைகள் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்டத்தில் நெல் மற்றும் பயிர் வகைகளில் மொத்தம் 1,796 எண்ணிக்கையிலான பயிர் அறுவடை பரிசோதனைகள் மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அவற்றில் இதுவரை 1,736 பரிசோதனைகள் நடந்து முடிந்துள்ளன. இதன் முடிவுகள் மத்திய, மாநில அரசுகளுக்கு செல்லிடப்பேசி மற்றும் இணையதளம் மூலமாகவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இலக்கு நிர்ணயிக்கப்பட்டபடி பயிர் அறுவடைப் பரிசோதனைகள் அனைத்தும் விரைந்து மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றார்.

அப்போது, வேளாண்மை இணை இயக்குநர் அரிவாசன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெள்ளைச்சாமி, வேளாண்மை அலுவலர் அம்பேத்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)