முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, June 13, 2015

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் இயந்திர கோளாறு, 171 பேர் உயிர் தப்பினர்!!

No comments :
திருச்சியில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று (12-6-2015) அதிகாலை 5 மணிக்கு 165 பயணிகள், 6 சிப்பந்திகளுடன் துபாய்க்கு புறப்பட்டது.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். உடனே, அருகில் உள்ள சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் கொடுத்தார். அதிகாரிகள், உடனடியாக விமானம் தரையிறங்க அனுமதி அளித்தது மட்டுமின்றி, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்தனர்.


அதன்படி, காலை 6.15 மணிக்கு விமானம் சென்னையில் தரையிறங்கியது. இதையடுத்து விமான நிலைய பொறியாளர் குழுவினர், விமானத்தில் இயந்திர கோளாறை சரி செய்ய முயன்றனர். ஆனால், முடியவில்லை. இதனால், விமானம் நள்ளிரவில் புறப்படும் என கூறி, அதில் வந்த பயணிகளை கீழே இறக்கினர்.  

விமானம் சரி செய்யப்படும் வரை பயணிகள் ஓட்டலில் தங்கவும், உணவு அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனாலும் பயணிகள் திட்டமிட்டப்படி துபாய் போய் சேர முடியாததால் பலமணி நேரம் சென்னையில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.  கீழக்கரையில் ஆட்டோவில் ஆடு திருடிய 3 நபர்கள் கைது!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே ஆட்டோவில் ஆடு திருடிய 3 பேரை, போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

கீழக்கரை அருகே பழஞ்சிறைப் பகுதியைச் சேர்ந்தவர் பெரியகருப்பன் மகன் கருப்பையா (45). இவருக்குச் சொந்தமான ஆடுகள், பழஞ்சிறை அம்மன் கோயில் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது, அவ்வழியே ஆட்டோவில் வந்த 3 நபர்கள், கருப்பையாவின் 2 வெள்ளாடுகளை ஆட்டோவில் ஏற்றினர்.

அப்போது, ஆடுகள் கத்தியதைக் கண்ட கருப்பையா, ஆட்டோவில் வந்தவர்களை பார்த்து கூச்சலிட்டார். ஆனால், மர்ம நபர்கள் ஆடுகளுடன் தப்பிச் சென்றனர்.   இந்நிலையில், அக்கம் பக்கத்தினர் ஆட்டோவை விரட்டிச் சென்றனர். புல்லந்தை உள்ளிட்ட பல கிராமங்களுக்கு ஆட்டோவில் சென்ற மர்ம நபர்கள், கடைசியில் வழி தெரியாமல் பழஞ்சிறை பகுதிக்கே வந்தனர்.

அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் ஆட்டோவுடன் மர்மநபர்களையும் பிடித்து, கீழக்கரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். காவல் சார்பு-ஆய்வாளர் சிவசுப்பிரமணியன், ஆட்டோ மற்றும் ஆடுகளுடன் 3 பேரையும் கைது செய்தார்.


விசாரணையில், கீழக்கரை ஆடறுத்தான் தெரு கமாலுதீன் மகன் அக்ரம் மாலிக்(26), நாடார் கடை தெரு ஹைதர் அலி மகன் முஹம்மது அபுபக்கர் (44), புதுகிழக்குத் தெரு செய்யது இபுராகீம் மகன் சதாம் உசேன் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது.   பின்னர், கீழக்கரை போலீஸார் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

செய்தி: தினமணி

கீழக்கரையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர தட்டிகள் அகற்றப்பட்டன.

No comments :
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சிக்குள்பட்ட முக்கு ரோடு முதல் நகரின் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர தட்டிகள் அகற்றப்பட்டன.கீழக்கரை நகராட்சி மற்றும் காவல்துறை இணைந்து, நகரில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பிளக்ஸ் தட்டிகளை அப்புறப்படுத்தினர். 

இதில், காவல் சார்பு-ஆய்வாளர் சிவசுப்பிரமணியன், நகராட்சி ஆணையர் முருகேசன், சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

ராமநாதபுரத்தில் குரூப்-2 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.

ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேல்நிலை மற்றும் உயர்நிலை கல்வி   படிப்பினை முடித்தவர்கள் வேலைவாய்ப்பினை பெறுவதற்காக அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-1,குரூப்-2,குரூப்-4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணி, காவல்துறையில் சார்பு ஆய்வாளர் பணி உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்து வருகிறது.


ஜூலை மாதத்தில் நடைபெறவுள்ள குரூப்-2 தேர்விற்காக இலவசமாக அரசின் சார்பில் பயிற்சியளிக்கப்படுகிறது. இதில் 250 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இப்பயிற்சியினை பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஏற்கனவே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்தவர்கள் பல்வேறு பாடப்பிரிவுகளில் பயிற்சியினை வழங்கி வருகின்றனர்.

இப்பயிற்சி பெறுபவர்களுக்காக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் மற்றும் பல்வகை நூல்களைக் கொண்ட நூலகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக, ராமநாதபுரம் ஆட்சியர் க.நந்தகுமார் தெரிவித்தார்.

மேலும் அவர் புதன்கிழமை கூறியது: இப்பயிற்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த       போட்டித் தேர்வுகளுக்கு தகுதியுடைய ஆண்கள் மற்றும் பெண்கள் இப்பயிற்சியில் இணைந்து பயின்று வருகின்றனர்.

இதுவரை நடைபெற்ற பல்வேறு போட்டித் தேர்வுகளில் பலரும் இப்பயிற்சியினைப் பெற்று வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். எனவே இந்த அரிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.

செய்தி: தினசரிகள்