Thursday, January 16, 2025
ராமநாதபுரம் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் -ல் பணியாற்ற 18ம் தேதி ஆள் தேர்வு!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் 108 அவசர ஊர்தியில் பணியாற்ற மருத்துவ
உதவியாளர், ஓட்டுநர் பணியிடங்களுக்கு வருகிற 18-ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது.
இது குறித்து 108 அவசர ஊர்தி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
த.தமிழ்செல்வன் புதன்கிழமை கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் இயக்கப்படும் 108 அவசர ஊர்திகளில் அவசரகால
மருத்துவ உதவியாளர் பணிக்கான முதல்கட்ட நேர்முகத் தேர்வு பார்திபனுர் ஆரம்ப சுகாதார
வளாகத்தில் செயல்படும் 108 அவசர ஊர்தி அலுவலகத்தில் வருகிற 18-ஆம் தேதி காலை 10 மணி
முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெற இருக்கிறது.
தகுதி:
வயது 19-லிருந்து 30-க்குள் இருக்க வேண்டும். பிஎஸ்சி நர்சிங்,
ஜிஎன்எம், டிஎம்எல்டி, ஏஎன்எம் (12 ஆம் வகுப்புக்குப் பிறகு 2
ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைஃப் சயின்ஸ் படிப்புகளான பிஎஸ்சி விலங்கியல்,
தாவரவியல், பயோ டெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி ஆகியவற்றில் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை:
முதலில் எழுத்துத் தேர்வு. மருத்துவம் சார்ந்த அடிப்படை முதலுதவி,
செவிலியர் தொடர்பான அடிப்படை அறிவு பரிசோதிக்கப்படும். இறுதியாக மனிதவளத் துறையின்
நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
மாத ஊதியமாக ரூ.15,635 வழங்கப்படும்.
ஊர்தி ஓட்டுநருக்கான கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, ஓட்டுநர்
உரிமம் பெற்று மூன்று ஆண்டுகள், பேட்ஜ் எடுத்து ஓராண்டு நிறைவடைந்து இருக்க வேண்டும்.
வயது 24 முதல் 35 -க்குள் இருக்க வேண்டும்.
மாத ஊதியம் ரூ.15,450.
நேர்முகத் தேர்வுக்கு வருபவர்கள் அசல் சான்றிதழுடன் கலந்து கொள்ள
வேண்டும்.
மருத்துவ உதவியாளர் பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்கள் 12 மணி
நேர இரவு, பகல் ஷிப்ட் முறைகளில் தமிழ்நாடு முழுவதும் பணியமர்த்தப்படுவர்.
நேர்முகத் தேர்வுக்கு கல்வித் தகுதி, ஓட்டுநர் உரிமம், முகவரிச்
சான்று. அடையாளச் சான்று ஆகியவற்றின் அசல் சான்றிதழ்களைக் கொண்டு வர வேண்டும்.
மேலும், இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு 8754439544.
7397444156,7397724828 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.
Wednesday, January 8, 2025
ராமநாதபுரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு பொருட்களை ரேசன் கடைகளுக்கு இறக்கும் பணி தீவிரம்!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு
பொருட்களை ரேசன் கடைகளுக்கு இறக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
தமிழக அரசு சார்பில் தைத் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு ரேசன்
கார்டுதாரர்கள் அனைவருக்கும்
முழுகரும்பு,
ஒரு கிலோ பச்சரிசி,
ஒரு கிலோ சர்க்கரை
வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவை 9ம் தேதி முதல் வழங்கப்படுவதையொட்டி ரேசன் கடை பணியாளர்கள்
கார்டுதாரர்களுக்கு வீடு வீடாக சென்று டோக்கன்களை விநியோகம் வருகின்றனர்.
நாளை மறுநாள் முதல் 13ம் தேதி வரை பொங்கல் பொருள் வழங்கப்படுவதையொட்டி
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம், ராமநாதபுரம், கீழக்கரை, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம்,
பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர் மற்றும் கடலாடி ஆகிய தாலுகாக்களில் உள்ள 554 முழுநேர
கடைகளுக்கும், 775 பகுதிநேர கடைகளுக்கும் கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு
பொருட்கள் இறக்கும் பணி நேற்று முதல் துவங்கியுள்ளது.
மேலும் ரேசன் கடைகளில் விலையில்லா வேட்டி, சேலையும் வழங்கப்படுவதால்,
வழக்கமான உணவு பொருட்கள் ஒரே தவணையாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போதே ரேசன்
கடைகள் களைகட்டி காணப்படுகிறது. மாவட்டத்தில் முழுநேர ரேசன் கடை 556, பகுதி நேர ரேசன்
கடை 228 என 784 கடை உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 4 லட்சத்து 2 ஆயிரத்து 107 ரேசன்
கார்டு தாரர்கள் பொங்கல் தொகுப்பை பெற்று பயனடைவார்கள்.