(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, May 4, 2016

கீழக்கரை அருகே இறந்து கரை ஒதுங்கிய குட்டி திமிங்கலம்!!

No comments :
கீழக்கரை அருகே கடற்கரை பகுதியில் இறந்து அழுகிய நிலையில் ஒரு குட்டி திமிங்கலம் கரை ஒதுங்கியது.

கீழக்கரை அருகே உள்ள மாயாகுளம் ஊராட்சிக்குட்பட்ட பாரதிநகர் கடற்கரை பகுதியில் நேற்று அதிகாலை இறந்து அழுகிய நிலையில் ஒரு குட்டி திமிங்கலம் கரை ஒதுங்கியது. உடல் முழுவதும் அழுகி சிதைந்து கிடந்ததால் அந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசியது. தகவல் அறிந்த வனச்சரகர் கணேசலிங்கம் தலைமையில் வனக்காப்பாளர்கள் சடையாண்டி, காதர் மஸ்தான், கருப்பணன் மற்றும் வேட்டைதடுப்பு காவலர்கள் அங்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆழ்கடலில் வசிக்க கூடிய அபூர்வ வகையான பலீன் என்ற இனத்தை சேர்ந்த திமிங்கலம் என்பது தெரியவந்தது. சுமார் 2 வயதுள்ள இந்த திமிங்கலம் 10 மீட்டர் நீளமுடையது. குட்டி திமிங்கலத்தின் பெரும்பாலான உடல்பகுதி அழுகி சிதைந்து விட்டது. மீதம் உள்ள உடல்பகுதி மட்டுமே கரை ஒதுங்கியுள்ளது. ஆழ்கடல் பகுதியில் பாறைகளிலோ, படகுகளிலோ மோதி காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும், பெரிய ராட்சத மீன்கள் கடித்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.



திமிங்கலம் இறந்து கடல் தண்ணீருக்குள் மூழ்கி சில நாட்கள் கழித்து உடல் அழுகி, பெரிதாகி கடலின் மேற்பரப்பிற்கு வந்து காற்றின்வேகத்தில் கரைப்பகுதிக்கு அடித்து கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. அப்பா தீவுக்கும் வாளிமுனை தீவிற்கும் இடைப்பட்ட பகுதியில் இந்த திமிங்கலம் அடிபட்டு இறந்திருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.


உடற்கூறு பரிசோதனை செய்ய முடியாததால் மத்திய கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி நிலைய டாக்டர் சக்திவேல் தலைமையிலான குழுவினர் கடற்கரைக்கு வந்து ஆய்வு செய்தனர். மேலும் இறந்த குட்டிதிமிங்கலத்தின் உடல்பகுதியை ஆய்விற்காக மாதிரியை எடுத்து சென்றனர். பின்னர் கடற்கரையிலேயே இறந்த திமிங்கலத்தை புதைத்தனர். கடந்த மாதம் இதே போன்று ஒரு திமிங்கலம் இறந்து உடல் அழுகி கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment