வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே! ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே! நன்றென்று கொட்டு முரசே! இந்த நானில மாந்தருக் கெல்லாம்.

Thursday, June 23, 2016

ராமநாதபுர அரசு பள்ளி சாதனை, இது வரை 5 மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைத்துள்ளன!!

No comments :
ஒரே அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த 5 மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைத்துள்ளன. அவர்களில் 2 பேர் சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு சென்னையில் கடந்த 20-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், கலந்து கொள்ள 25,379 பேருக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. 3-ஆவது நாளான புதன்கிழமை, ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 5 மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இந்த மாணவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மருத்துவக் கல்லூரியில்: ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மனோஜ் குமார், பிளஸ் 2 தேர்வில் 1,175 மதிப்பெண் பெற்று, எம்.பி.பி.எஸ். படிப்புக்கு 199.75 கட்-ஆஃப் பெற்றுள்ளார். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவருக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இவரின் தந்தை ரங்கசாமி ஹோட்டலில் பணியாளராக உள்ளார். தாய் அமராவதி 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் கூலி வேலைக்குச் செல்கிறார்.அதே பள்ளியைச் சேர்ந்த ஆர்.செல்வபாண்டி பிளஸ் 2 தேர்வில் 1,157 மதிப்பெண் பெற்று, 197.50 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளார். தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த இவரும் சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம்பிடித்தார். இவரது தந்தை எஸ்.ரமேஷ் கூலிக்கு ஆடு மேய்ப்பதாகவும், தாயார் பாண்டியம்மாள் 100 நாள் வேலைத் திட்டத்தில் கூலி வேலைக்குச் செல்வதாகவும் தெரிவித்தார்.

தமிழ் வழியில் பயின்றவர்கள்: இதுதவிர, அதே பள்ளியைச் சேர்ந்த எஸ்.ஜெ.சூரியபிரகாஷ், டி.இலக்கிய எழிலரசி ஆகியோருக்கு மதுரை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. நஸ்ரின் என்ற மாணவிக்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இவர்கள் அனைவரும் தமிழ் வழியில் பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக பள்ளியின், பிளஸ் 2 உயிரியல் ஆசிரியர் சி. ஆறுமுகம் கூறியது:  தமிழக அரசின் எலைட் வகுப்புகள் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது. அதன் காரணமாக கடந்த ஆண்டும் இரு மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. மருத்துவம், பொறியியல் படிப்பதற்காக மனதளவிலும் மாணவர்களை பயிற்றுவிக்கிறோம். தமிழில் படித்த எங்கள் பள்ளி மாணவர்கள் பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்கல்வியிலும் சிறந்த மதிப்பெண் பெறுகின்றனர் என்றார் அவர்.

மேலும் இதே பள்ளியில் படித்த கார்த்திக், கட்-ஆஃப் - 196.70 (மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு), எம். சுஜித், கட்-ஆஃப் - 195.50 (தாழ்த்தப்பட்ட பிரிவு), பி.கோகிலா, கட்-ஆஃப்  195.75 (தாழ்த்தப்பட்ட பிரிவு) எம். மகேஷ்குமார், கட்-ஆஃப் - 195 (தாழ்த்தப்பட்ட பிரிவு) ஆகியோருக்கும் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment