(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, August 9, 2016

கைதி உயிரிழந்த சம்பவம் - நீதிபதி விசாரணை!!

No comments :
ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது தப்ப முயன்ற விசாரணைக் கைதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஏ.கண்ணன் திங்கள்கிழமை விசாரணை நடத்தினார்.

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே நடந்த வழிப்பறி வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்பட்ட ஷேக்அலாவுதீனை மருத்துவ சான்று வாங்குதற்காக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வழியில் தப்பிச்செல்ல முயன்றபோது ஷேக்அலாவுதீனுக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் அவர் உயிரிழந்தார். அவரது சடலம் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ஏர்வாடி காவல்நிலைய சார்பு- ஆய்வாளர் காமராஜ் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



ஷேக் அலாவுதீனை கடந்த 3 நாள்களாக காணவில்லை என்றும் அவரை 3நாள்களாக சட்டவிரோத காவலில் வைத்திருந்து காவல்துறையினர் அடித்து கொலை செய்துவிட்டதாகவும் அவரது பெற்றோர் தரப்பில் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து ராமநாதபுரம் 2-ஆவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஏ.கண்ணன், அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஷேக் அலாவுதீன் சடலத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். பின்னர் அவரது உறவினர்களிடமும் விசாரணை நடத்தினார்.

பின்னர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசுத் தரப்பில் தெரிவித்தபடி இரண்டு மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். மேலும், பிரேத பரிசோதனை முழுவதும் விடியோவில் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து ராமநாதபுரம் ஏ.எஸ்.பி.எஸ். சர்வேஷ்ராஜ் கேட்டுக்கொண்டபடி ஷேக்அலாவுதீன் சடலத்தை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.

சம்பவம் குறித்து நீதிவிசாரணை நடத்த வேண்டும் என பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில செயலாளர் முகம்மது ரசீன் தெரிவித்தார்.

இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் கூறியது: ஷேக்அலாவுதீன் மீது மீது 23 குற்ற வழக்குகளும், ஒரு கொலை வழக்கும் உள்ளன. குண்டர் சட்டத்தில் இருமுறை கைது செய்யப்பட்டவர்.

இறந்தது கைதி என்பதால் உடனடியாக அவரது மரணம் குறித்து நீதிபதி விசாரணைக்கு கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன்படி நீதிபதியும் நேரில் விசாரணை நடத்தியுள்ளார். மேலும், நீதிமன்ற உத்தரவின்படி மருத்துவர்கள் குழு பிரேத பரிசோதனை செய்துள்ளது.
நீதிபதி அறிக்கை கிடைத்தவுடன் தவறு யார் மீது இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment