(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, April 3, 2017

மே 14ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தோ்தலை நடத்த இயலாது - தேர்தல் ஆணையம்!!

No comments :
வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி காரணமாக வரும் மே 14ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தோ்தலை நடத்த இயலாது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.


தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை கடந்த செப்டம்பர் மாதம் மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில், சரியாக இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று தி.மு.க ராஜ்யசபா உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். நீதிபதி உத்தரவில், கடந்த டிசம்பர்30ஆம் தேதிக்குள் புதிய அரசாணை வெளியிட்டு உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் உயர் நீதி மன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் நூட்டி ராம்மோகன ராவ், எஸ்.எம். சுப்பிரமணியம் ஆகியோர் கடந்த மாதம் விசாரித்து, மே 14ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் தன்னையும் இணைத்துக் கொள்ள அனுமதி கோரி, மாற்றம் இந்தியா அமைப்பின் பாடம் நாராயணன் ஒரு இணைப்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த அக்டோபர் 24ம் தேதி முடிவடைந்துவிட்டது. புதிய பிரதிநிதிகள் அடுத்த 6 மாதத்தில் பொறுப்பேற்க வேண்டுமென பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் உள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 24ம் தேதி கடைசி நாளாகும். எனவே, உள்ளாட்சி தேர்தலை அந்த தேதிக்குள்ளாக நடத்தி புதிய பிரதிநிதிகள் பொறுப்பேற்க உத்தரவிடவேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி எச்.ஜி.ரமேஷ், நீதிபதி டீக்காராமன் ஆகியோர் முன்பு கடந்த மாதம் 18ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.குமார் ஆஜராகி, உள்ளாட்சி தேர்தலை இப்போது நடத்தவே முடியாது; நீதிமன்றம் ஏற்கனவே போட்ட உத்தரவின்படி மே 14ம் தேதிக்குள் நடத்துவதே சிரமம். இந்நிலையில் ஏப்ரல் 24ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்பது நடைமுறை சாத்தியமில்லாதது என்று கூறினார்.

பின்னர், திமுக சார்பாக மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, தேர்தலை வேண்டும் என்றே தள்ளிவைக்கிறார்கள், இதற்கான ஏற்பாடுகளை செய்யாமல் தேர்தல் ஆணையம் உள்ளது. இது தன்னிச்சையான அமைப்பாகும். அப்படி இருந்தும் சரியாக பணியை செய்யவில்லை என்றார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ஏற்கனவே மே மாதம் 14ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம்தான் உத்தரவாதம் அளித்தது. தற்போது, அது முடியாது. ஏப்ரல் 24ம் தேதிக்குள்ளும் நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. இந்த தாமதத்திற்கு நடைமுறை காரணம் என்ன என்றும், எப்போதுதான் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது அப்போது வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டியது இருப்பதால், உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மே 14ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தோ்தலை நடத்த இயலாது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.


மெகா சீரியலானது தமிழக உள்ளாட்சி தேர்தல் கதை……………


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment