(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, April 30, 2017

பாகுபலி-2 - திரை விமர்சனம்!!

No comments :
அர்கா மீடியா வொர்க்ஸ் சார்பில் சோபு எர்லகட்டாபிரசாத் தேவிநேனி ஆகியோரின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகியிருக்கிறது இந்தப் படம்.

பிரபாஸ்ராணா இருவரும் ஹீரோக்களாக நடிக்க அனுஷ்காதமன்னா இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். மேலும் சத்யராஜ்நாசர்ரம்யா கிருஷ்ணன்ரோகிணி மற்றும் பல கலைஞர்களும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – கே.கே.செந்தில்குமார்படத் தொகுப்பு – கோடகிரி வெங்கடேஸ்வர ராவ்இசை – மரகதமணிவி.எஃப்.எக்ஸ் – ஆர்.சி.கமலக்கண்ணன்ஒலிக்கலவை – பி.எம்.சதீஷ்சண்டை பயிற்சி – கிங் சாலமன்லீ விட்டாக்கர்கேச்சா கம்பாக்டீநடன இயக்கம் – பிரேம் ரக்சித்ஷங்கர்உடைகள் – ரமா ராஜமெளலிபிரசாந்தி பிடிபைர்நேனிவசனம் – கார்க்கிகதை – வி.விஜேயந்திர பிரசாத்தயாரிப்பு – ஷோபு எர்லகட்டாபிரசாத் தேவிநேனிவிநியோகஸ்தர் – எஸ்.என்.ராஜராஜன்திரைக்கதைஇயக்கம் – எஸ்.எஸ்.ராஜமெளலி.

முதல் பாகத்தில் தேவசேனாவை மீட்டுச் சென்ற மகன் பிரபாஸை கொல்ல வந்த ராணாவின் மகனை பிரபாஸ் கொலை செய்ய.. அவனுடன் வந்திருந்த கட்டப்பா பிரபாஸை பார்த்தவுடன் பாகுபலி என்று அதிர்ந்துஅவரது பிறந்த கதையைச் சொல்கிறார். இதன் பிற்பகுதியில்தான் இந்த இரண்டாம் பாகத்தின் கதையும் துவங்குகிறது.

ராஜாமாதா சிவகாமி தேவி வாக்களித்தபடி காக்கதீயர்களின் அரசனான காலகேயனை வீழ்த்தியதற்கு பரிசாக அமரேந்திர பாகுபலியை மகிழ்மதியின் மன்னனாக ஆக்குவதாக அறிவித்திருக்கிறாள். இதற்கான பட்டாபிஷேக நாள் மிக நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த நேரத்தில் ராணா என்னும் பல்வாள் தேவனின் தந்தையான நாசர் அமரேந்திர பாகுபலி அரசனாவது குறித்து தனது அதிருப்தியை தெரிவிக்கிறார். சிவகாமி இருக்கும்வரையிலும் ராணா அரசனாக முடியாது என்பதால் சிவகாமியை கொலை செய்துவிடலாம் என்றுகூட கோபப்படுகிறார். ஆனால் ராணா அதை மறுக்கிறார். பொறுத்திருந்துதான் காரியத்தைச் சாதிக்க வேண்டும்…” என்கிறார்.

இந்த நேரத்தில் பாகுபலியை அழைக்கும் சிவகாமி, அவரை நாடு முழுவதும் திக்விஜயம் செய்து வரும்படி பணிக்கிறாள். துணைக்குக் கட்டப்பாவையும் அழைத்துச் செல்ல ஆணையிடுகிறாள்.

இருவரும் இப்படி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும்போது எல்லை தாண்டிய நிலையில் குந்தள தேசத்தின் ஒரு பகுதிக்குள் நுழைகிறார்கள். அங்கே திருடர்கள் தொல்லை அதிகமாகியிருக்கிறது. திருடர்களை பிடிக்க தனது படை வீர்ர்களுடன் வருகிறார் குந்தள தேசத்தின் யுவராணியும், பட்டத்து இளவரசியுமான தேவசேனா என்னும் அனுஷ்கா.

அனுஷ்காவுக்கு துணையாக பாகுபலியும், சத்யராஜும் சேர்ந்து சண்டையிட்டு அந்தத் திருடர்களை பிடிக்கின்றனர். சிலரை கொல்கின்றனர். ஆனால் இது எதுவுமே அனுஷ்காவுக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்கிறார் பாகுபலி. ஆண் வீரர்களையும் மிஞ்சும்வகையில் சண்டையிடும் அனுஷ்காவின் வாள் வீச்சு வித்தையிலும், அழகில் மயங்கும் பாகுபலி, அனுஷ்காவுடன் செல்ல விருப்பப்படுகிறார்.

அரசனின் ஆணைப்படியே கட்டப்பாவும் துணைக்கு செல்ல.. இருவரும் குந்தள தேசத்திற்குள் காலடி எடுத்து வைக்கிறார்கள். அங்கே அனுஷ்காவின் அரண்மனையில் தாங்கள் யார் என்பதை சொல்லாமலேயே ஏதாவது வேலை கொடுத்து காப்பாற்றும்படி வேண்டிக் கொள்கிறார்கள்.

இதே சமயம் இவர்கள் இருவரும் குந்தள தேசத்தில் இருப்பதையறியும் ராணாவின் ஒற்றன் ராணாவிடம் விஷயத்தைச் சொல்கிறான். கூடவே அனுஷ்காவின் அழகை பற்றிச் சொல்லி அவரது கோட்டோவியத்தையும் காட்டுகிறான். அனுஷ்காவின் ஓவியத்தைப் பார்த்த உடனேயே சொக்கிப் போகும் ராணா தான் மணந்தால் அனுஷ்காவைத்தான் என்பதை தனது தாயிடம் சொல்கிறார்.

பாகுபலியும், கட்டப்பாவும் குந்தள தேசத்தில் இருப்பதையும் பாகுபலி அனுஷ்காவை காதலித்து வருவதையும் அறியாத ராஜமாதா சிவகாமி, அனுஷ்காவை தனது மகன் ராணாவுக்கு பெண் கேட்டு பொன்னும், பொருளும் கொடுத்து செய்தி அனுப்புகிறாள்.

இதனை பார்த்து கோபப்படும் அனுஷ்கா பதில் மடலில் கோபமாகவும், அவமானகரமாகவும் எழுதி வந்தவர்களை திருப்பியனுப்புகிறாள். இதனால் வெகுண்டெழும் சிவகாமி, அனுஷ்காவை சிறை பிடித்து வருமாறு பாகுபலிக்கு செய்தியனுப்பச் சொல்கிறாள்.

இந்த சம்பவங்களுக்கிடையில் குந்தள தேசத்தின் பெரும் தலைவலியாய் இருக்கும் திருடர்கள் கூட்டம் அரண்மனையை முற்றுகையிட பாகுபலியும், கட்டப்பாவும் கூட்டணி வைத்து சண்டையிட்டு அனைவரையும் தீர்த்துக்கட்டிவிட்டு குந்தள தேசத்து அரச குடும்பத்தினரை காப்பாற்றுகிறார்கள்.

இப்போது மகிழ்மதியின் அரசன் பாகுபலிதான் பிரபாஸ் என்பதையறியும் அனுஷ்கா நிஜமாகவே அவரை காதலிக்கிறார். அந்த நேரத்தில்தான் சிவகாமியின் செய்தி புறா மூலமாக அவருக்குத் தெரிய வருகிறது. தனது தாயின் பேச்சை மறுக்காத பாகுபலி அனுஷ்காவை மகிழ்நதி தேசத்திற்கு தன்னுடன் வரும்படி அழைக்கிறார். அனுஷ்கா தயங்குகிறார்.

ஆனால் அனுஷ்காவின் கவுரவத்திற்கும், பெருமைக்கும் எந்தத் தீங்கும் ஏற்படாமல் தான் காப்பதாகச் சொல்கிறார் பாகுபலி. இதனை நம்பும் அனுஷ்கா அவருடன் மகிழ்மதிக்கு வருகிறாள்.

தன்னை தேடி வரும் மருமகளை ஏற்கும் சிவகாமி தனது மகன் ராணாவுக்குத்தான் அவளை பேசியிருப்பதாகச் சொல்ல பாகுபலி, அனுஷ்கா இருவருமே அதிர்ச்சியாகிறார்கள். அனுஷ்கா இதனை ஏற்க மறுத்து தான் பாகுபலியைத்தான் விரும்பியதாகச் சொல்ல.. சிவகாமியும், ராணாவும் ஏமாற்றமடைகிறார்கள்.

இந்தக் குழப்பத்தினால் மகிழ்மதியின் அரியணையா, அல்லது தேவசேனாவா என்று இரண்டில் ஒன்றை தேர்வு செய்யும் நிலைமைக்கு தள்ளப்படுகிறார் பாகுபலி. அவர் தேவசேனாவை மணப்பதில் உறுதியாக இருக்க.. சிவகாமி சட்டென்று தனது முடிவையும் மாற்றிக் கொண்டு ராணாவை மகிழ்மதியின் அரசனாக்குவதாக அறிவிக்கிறார். சேனாதிபதியாக பாகுபலியை நியமிக்கிறார்.

பட்டாபிஷேகமும் நடைபெறுகிறது. ராணா அரசனாகவும், பாகுபலி சேனாதிபதியாகவும் பதவியேற்கிறார்கள். ஆனால் பெருவாரியான மக்களின் ஆதரவு பாகுபலிக்கே இருக்கிறது. இதனை நேரிலேயே பார்த்து சிவகாமியும், ராணாவும், நாசரும் அதிர்ச்சியடைகிறார்கள்.

தொடர்ந்து பாகுபலி-அனுஷ்கா திருமணமும் நடந்தேறுகிறது. அனுஷ்கா கர்ப்பமுற.. அவளது சீமந்த விழாவுக்கு வந்த அரசர் ராணா, அன்றைய தினமே.. அப்பொழுதே பாகுபலியை சேனாதிபதி பதவியில் இருந்து நீக்குவதாகச் சொல்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியாகிறார் அனுஷ்கா. இதற்காக சிவகாமியிடம் நியாயம் கேட்கிறாள். ஆனால் சிவகாமி பதில் எதுவும் சொல்லாமல் போகிறார்.

இதையடுத்து கோவிலுக்கு வரும் அனுஷ்காவிடம் புதிய சேனாதிபதி அத்துமீறி நடந்து கொள்ள முயல அவனது கைகளை கத்தியால் வெட்டுகிறார் அனுஷ்கா. அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு அவைக்கு இழுத்து வரப்படுகிறார். அங்கே ஓடி வரும் பாகுபலி தனது மனைவியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்த சேனாதிபதியை தனது வாளால் வெட்டி படுகொலை செய்கிறார்.

இதனால் அரச விதிப்படி பாகுபலியையும், அனுஷ்காவையும் அரண்மனையைவிட்டு வெளியேறும்படி உத்தரவிடுகிறார் சிவகாமி. இதனை ஏற்றுக் கொண்டு பாகுபலியும், அனுஷ்காவும் அரண்மனையைவிட்டு வெளியேறி ஊருக்குள் ஒதுக்கப்புறமாக மக்களோடு மக்களாக வாழ்கிறார்கள்.

இருந்தும் பாகுபலிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு குறையாமல் இருப்பதை பார்க்கும் நாசர், ராணாவுக்கு தூபம் மேல் தூபம் போட.. எப்படியாவது பாகுபலியை கொலை செய்ய திட்டம் தீட்டுகிறார்கள்.

இதற்கு அடிமை வம்சத்தின் தலைவனான கட்டப்பாவை பயன்படுத்துகிறார்கள். ஒரு நாடகத்தை நடத்தி சிவகாமியின் வாயாலேயே பாகுபலியை கொலை செய்யும்படி கட்டப்பாவை தூண்டுகிறார்கள்.  இதன் பின் விளைவால் பாகுபலியை கட்டப்பா கொலை செய்கிறார்.

இதன் பின்னர் என்ன நடந்தது..? அமரேந்திர பாகுபலியின் மரணத்திற்காக மகன் மகேந்திர பாகுபலி பழி வாங்கினாரா..? அது எப்படி நடந்தது என்பதுதான் இரண்டாம் பாதியின் கதை..!

அமரேந்திர பாகுபலியாகவும், மகேந்திர பாகுபலியாகவும் நடித்திருக்கும் பிரபாஸ் தனது கட்டழகிலும், கம்பீரத்திலும், சண்டை பயிற்சியிலும் திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்திருக்கிறார். ஒரு அரசனுக்குரிய தோற்றமும், செயலும், வேகமும், விவேகமும், ஈர்ப்பும் அவரிடத்தில் இருப்பதே இந்தப் படத்தின் முதல் வெற்றி எனலாம்.

தாய்க்கு அடங்கிய பிள்ளையாக ஒரு பார்வை, பேச்சு.. தேவசேனாவின் காதலில் விழுந்த பின்பு அதே தாய் கற்றுக் கொடுத்த வாய்மை, நேர்மை, சத்ரியனின் கடமை ஆகியவைகளை நினைத்துப் பார்த்து பேசும் பாங்கு.. தனது மனைவியைத் தொட்டுவிட்ட சேனாதிபதியை வாள் வீசி கொல்லும் கோபம்.. மகேந்திர பாகுபலியாக தனது தாயின் சபதத்தை முடித்துக் கொடுக்க அவர் நடித்திருக்கும் சண்டை காட்சிகள் என்று எதை சொல்வது.. எதை விடுவது என்றே தெரியவில்லை.

பிரபாஸ் என்ற மாபெரும் கலைஞனின் நடிப்பை இந்திய திரையுலக ரசிகர்கள் இன்றைக்கு பார்த்தார்கள். கொண்டாடுகிறார்கள் என்பதுதான் உண்மை.  தெலுங்கு மட்டுமில்லாமல் பாகுபலிபடம் எந்தெந்த மொழிகளிலெல்லாம் வெளியானதோ அனைத்து மொழி ரசிகர்களாலும் பிரபாஸ் இனிமேல் கொண்டாடப்படுவார் என்பதில் சந்தேகமில்லை.

முதல் பாகத்தில் அழுக்கு உடையில், முதிய தோற்றத்தில் பார்க்கவே விருப்பமில்லாத தோரணையில் இருந்த தேவசேனா என்னும் அனுஷ்கா இந்தப் பாகத்தில் வட்டிக்கும், முதுலுக்குமாக சேர்த்து வைத்து நடித்திருக்கிறார்.

இத்தனை அழகா இந்த யுவராணி என்று ராணாவும், பாகுபலியும் மட்டும் கேட்கவில்லை.. ரசிகர்களும்தான் கேட்டிருக்கிறார்கள். அறிமுக்ககாட்சியிலேயே வாள் வீச்சு வீராங்கனையாக தோன்றி, சண்டையிட்டு தான் வேற மாதிரியான ஹீரோயின் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார் அனுஷ்கா.

பாடல் காட்சிகளில் இயற்கையை அள்ளிக் கொடுத்த கேமிராவின் துணையோடு இவரது அழகை பிரதானமாக்கி ஸ்கிரீனை அழகும், அற்புதமுமான ஓவியத்தை போலாக்கியிருக்கிறார்கள். பெண் கேட்டு செய்தியனுப்பிய விதம் கண்டு கோபப்படும் அனுஷ்கா.. தனது கணவரை சேனாதிபதி பதவியிலிருந்து நீக்கியதாக ராணா சொன்னவுடன் வெகுண்டெழும் அனுஷ்கா.. தனது மகனிடம் பல்வாழ் தேவனை தான் இதுவரையில் பொறுக்கி வைத்திருக்கும் விறகடுப்பில் எரிக்க வேண்டும் என்ற தனது சபத்த்தை நிறைவேற்றச் சொல்வது என்று தனது பங்களிப்பை இந்த பாகத்தில் குறைவில்லாமல் செய்திருக்கிறார்.

ராஜாமாதா சிவகாமியான ரம்யா கிருஷ்ணனுக்கு முதல் பாகத்தைவிடவும் இதில் அதிகமான காட்சிகள். நிரம்ப அழகுற நடித்திருக்கிறார். தனது மகன்களுக்கிடையேயான போட்டியை உணரும் தருணம்.. கணவர் இடித்துரைப்பதை ஏற்க முடியாத கவலை.. கோபத்தில் அரசனை மாற்றியதாகச் சொல்லி இதுவே சாசனம்என்று ஆங்காரமாக சொல்லும்விதம்.. எல்லாவற்றிலும் ராஜமாதா சிவகாமியாகவே நம் கண்களுக்குத் தெரிந்திருக்கிறார்.

தமன்னாவுக்கு இந்தப் பாகத்தில் சில காட்சிகள்தான்.. சில சீக்வென்ஸ்களில் மட்டுமே தென்படுகிறார். இறுதியில் அவரே ராணியாகவும் காட்சி தருகிறார். அவ்வளவுதான். முதல் பாகத்தில்தான் அத்தனையையும் காட்டிவிட்டாரே.. பின்பு வேறென்ன இருக்கு…? இதில் காட்டுவதற்கு என்று நினைத்துக் கொள்வோம்..!

நாசரின் பண்பட்ட நடிப்பும் குறிப்பிடத்தக்கது. எகத்தாளம், ஆணவம், அகம்பாவம் மூன்றையும கலந்து கட்டி அவர் ராணாவிடம் பேசும் பேச்சே இதற்கு சாட்சி. நாய் வருது…” என்று அலட்சியமாக கட்டப்பாவை வரவேற்பதும், “நான் நாய்ல்ல.. அதான் மோப்பம் பிடித்தேன்…” என்று கட்டப்பாவின் அலட்சிய வசனத்தை எதிர்கொள்ளும்விதமும், திட்டம் போட்டு தேவசேனாவின் மாமனை அரண்மணைக்குள் அழைத்து கொலை செய்யும் குரூரத்தையும் பக்கவாக செய்து காண்பித்திருக்கிறார் நாசர்.

கட்டப்பா என்னும் சத்யராஜால்தான் இன்றைக்கு இந்தப் படம் கர்நாடகாவில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அத்தனை உணர்ச்சிக் குவியல் நடிப்புக்கு மத்தியில் ஒரு பெண் செய்திருக்க வேண்டிய மனதைத் தொடும் ஈர்ப்பையும், கண் கலங்க வைக்கும் நெகிழ்ச்சியையும் கட்டப்பாவே செய்து காண்பித்திருக்கிறார்.

பாகுபலியை தப்பித்துப் போக பல முறை செய்தும் போகாமல் விடுவதால், வேறு வழியில்லாமல் ராஜமாதா உத்தரவால் பாகுபலியை கொலை செய்துவிட்டு அதற்காக கண்ணீர்விட்டு அழும் கட்டப்பாவால்தான், அந்தக் காட்சியே உணர்ச்சிப்பூர்வமானது என்பதில் சந்தேகமில்லை.

இவர்களுக்கு பின்பு படத்தில் நடித்திருக்கும் அனைத்து துணை கதாபாத்திரங்களில் ஒருவர்கூட சோடை போகவில்லை. அத்தனை பேரும் மிக அழுத்தமாக நடித்திருக்கிறார்கள். அல்லது நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். அத்தனை புகழும் இந்தியாவின் இமாலய இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலிக்கே..!

இந்த அம்புலிமாமா கதைக்கேற்றவாறு உணர்ச்சிகரமான வசனங்களும் சேர்ந்தே படத்திற்கு ஒரு மிகப் பெரிய பங்களிப்பை செய்திருக்கின்றன.

இன்றைய அரசியல்வியாதிகளுக்கும் பொருந்தக் கூடிய திக் விஜயத்தினால் அரசர்களுக்கு என்ன நன்மை..?” என்ற கேள்விக்கு ராஜாமாதா சொல்லும் மக்களின் சுக துக்கங்களை மன்னனும், கடவுளும் கண்டுணர வேண்டும், கண்கூட கண்டால்தான் அவர்கள் குறை தீர்க்க முடியும்..என்ற வசனம் அது அரசர்களின் கடமை என்பதையும் சேர்த்தே உணர்த்தியிருக்கிறது.

கதைக்குள் ஒரு உள் கதையாக அனுஷ்காவுக்காக காத்திருக்கும் தாய் மாமனுக்குள் பொதிந்திருக்கும் வீரத்தனத்தை பிரபாஸ் வெளிக்கொணரும் திரைக்கதையும் பாராட்டுக்குரியது. அவருக்காகவே சொல்லப்பட்ட வசனமான ஒரு கோழை வீரனாககாலம் அவனுக்கு ஒரு முறையாவது வாய்ப்பளிக்கும்..என்பது நிதர்சனமானது.

பாகுபலியை கொல்வது அப்படியொன்றும் எளிதல்ல..என்ற நாசரின் எச்சரிக்கைக்கு ராணா சொல்லும் பதிலே சூரியன் என்றும் மேற்கில் உதிப்பதில்லை. ஆனால் கிழக்கில் சூரியனை புதைக்கலாம்..என்பது..  

ஒரு தீயவனின் சத்தத்தைவிட ஒரு நல்லவனின் மவுனம் நாட்டுக்கு தீமை..என்பது ராஜாமாதா சிவகாமியை நோக்கி தேவசேனா வீசும் அம்பு..

இப்படி பல வசனங்களாலேயே படத்தின் கதையை நகர்த்தியிருக்கிறார்கள். வசனகர்த்தாவான மதன் கார்க்கிக்கு இந்தப் படம் ஒரு மைல் கல் என்றே சொல்லலாம்.

ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு திறனை எழுத வார்த்தைகளில்லை. அரண்மனை, ஆறு, அருவி, பள்ளம், மேடு, போர்க்களம், கொத்தளம் என்று அத்தனை பிரம்மாண்டத்தையும் தனது கேமிராவில் முழுங்கிவிட்டு எதையெல்லாம் காட்டினால், எப்படியெல்லாம் காட்டினால் ரசிகர்கள்  பிரமிப்பார்களோ அப்படியெல்லாம் செய்து காட்டியிருக்கிறார் செந்தில்குமார்.

நரகாசுரன் விழாவுக்காக சிவகாமி தீச்சட்டி ஏந்திச் செல்வது, ராணா அரசனாக பதவியேற்கும் விழா, குந்தள தேசத்தின் அரண்மனை, அங்கே நடக்கும் சண்டை காட்சிகள், அனுஷ்காவை அழைத்து வரும் நதி பயணம், அந்த பிரம்மாண்டமான யானை சிலை, இறுதியான போர்க்களக் காட்சிகள், மகிழ்மதி அரசவை காட்சிகள், இறுதியான போர்க்களக் காட்சிகள், ராணாவின் சிலை உடைவது.. மாடுகளின் கொம்பில் தீ பிடித்துள்ள நிலையில் அவைகள் ஓடி வருவது.. திருடர்களை கொல்ல அணையை உடைப்பது.. என்று காட்சிக்கு காட்சி கேமிரா காட்டியிருக்கும் பிரம்மாண்டத்தை எடுத்துச் சொன்னால் நேரம் போதாது..

கலை இயக்குநருக்கு நிச்சயமாக அடுத்த வருட தேசிய விருது கிடைக்கும் என்று உறுதியாய் நம்பலாம். அந்த அளவுக்கு தத்ரூபமாக அரண்மனை, சிலைகள், கட்டிடங்கள் என்று அனைத்தையும் தத்ரூபமாக படைத்திருக்கிறார். ராணாவின் சிலை, விநாயகர் சிலை, தேர், யானைகளின் வடிவமைப்பு, போர்க்கள தளவாடங்கள், போர்த் தந்திர பயிற்சிகள் என்று அத்தனையிலும் கலை இயக்குநரின் பங்களிப்பு பெரியது. பாராட்டுக்கள் ஸார்..

சண்டை பயிற்சியாளர்களான கிங் சாலமன், லீ விட்டகர், கேச்சே கம்பேக்டி என்ற மூவரின் அர்ப்பணிப்பில் சண்டை காட்சிகளில் தெறிக்கும் ரத்தமும், ஆக்ரோஷமும், புதிய தொழில் நுட்பமும் ரசிகர்களை சீட்டு நுனிக்கே வரவழைத்திருக்கிறது. அதிகப்படியான ரத்தம் சிந்தியிருக்கிறது என்றாலும் அந்தக் கால போர்க்களத்தை நேரடியாக இருப்பதுபோல் காட்ட வேண்டுமெனில் இது தவிர்க்க முடியாத செயல்தான்..!

எந்தக் காட்சி கிராபிக்ஸ், எது நிஜம் என்பதே கண்டறிய முடியாதவகையிலேயே கிராபிக்ஸ் வல்லுநர்கள் படத்திற்காக உழைப்பைக் கொட்டியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. சண்டை காட்சிகளில் அந்த வலுவான ஆயுதங்களின் உதவியால் ராணாவும், பாகுபலியும் மோதிக் கொள்ளும் காட்சிகளில் இருக்கும் வேகம் பிரமிப்பூட்டுகிறது. 

உடை வடிவமைப்பாளர்களான ரமா ராஜமெளலியும், பிரசாந்தியும் இன்னொரு பக்கம் இந்தப் படத்தின் கலர்புல் தோற்றத்திற்குக் காரணமாகியிருக்கிறார்கள். ஆள் பாதி ஆடை பாதி என்பார்களே அது போலவே அனுஷ்காவின் அழகை இன்னமும் பேரழகாக கூட்டியிருக்கிறது அவர் அணிந்திருந்த ஆடை, அணிகலன்கள்.. பாடல் காட்சிகளில் பிரபாஸ்-அனுஷ்கா ஜோடியின் பொருத்தமே உடைகளில்தான் பொதிந்திருக்கிறது.

இத்தனை பேரின் ஆடைகளை கச்சிதமாக வடிவமைத்து, அந்தக் கால எபெக்ட்டை கொண்டு வர தீவிரமாக உழைத்திருக்கும் இரண்டு பெண் கலைஞர்களுக்கும் நமது வாழ்த்துகள்..!

மரகதமணியின் இசையில் பாடல்களைவிடவும் அதை படமாக்கியவிதம்தான் அழகு. தேவசேனா பாகுபலிக்காக பாடும் பாடல் அழகு. பின்னணி இசையும் கதைக்கு பொருத்தமாக அமைந்து, கதையை அழகாக நகர்த்தி செல்ல பலமாக அமைந்திருக்கிறது. கட்டப்பா பாகுபலியை கொலை செய்யும் காட்சியின் பின்னணி இசை வழக்கமான சோக இசையோ அல்லது டிவி இசையோ இல்லாமல் புதுமையான இசையை கொடுத்திருக்கிறார் மரகதமணி.

படத் தொகுப்பாளரான கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவின் பணிச் சுமை எத்தகையதாக இருந்திருக்கும் என்று யூகிக்க முடிகிறது. கிட்டத்தட்ட மூன்றரை மணி நேர தொகுப்பாக இருந்த படத்தை படத்தின் தன்மை கெடாமலும், கதை, திரைக்கதை சுவாரஸ்யத்துடனும் சுருக்கி தொகுத்தளித்திருக்கிறார்.

படத்தின் பிரதான அம்சமான போர்க்களக் காட்சிகளையும், சண்டை காட்சிகளையும் அதன் ஆவேசம் குறையாமலும், பிரமிப்பு மாறாமலும் இருக்கும்வகையில் தொகுத்துள்ளார். இவரது சிறப்பான சேவைக்கு நமது பாராட்டுக்கள்..!

படத்தை அத்தனை நுணுக்கமாக கவனித்து, கவனித்து படமாக்கியிருக்கிறார் ராஜமெளலி. நாசர், ராணா பேச்சில் இருக்கும் தந்திரம்.. அரசவையில் பாகுபலியை மென்மேலும் பேசவிட்டு சிவகாமிக்கு கோபத்தை வரவழைக்கும்வரையில் நாசரை பேசவிடாமல் தடுக்கும் ராணா, சமயம் கிடைத்து அவரை பேச வைப்பது.. இதனாலேயே அரச பதவி தனக்குக் கிடைக்கும்படியாக ராணா பார்த்துக் கொள்வது.. ராணாவின் பட்டாபிஷேகம் அன்று பாகுபலிஎன்ற பெயர் ஒலித்தவுடன் மக்களிடையே எழும் கரகோஷமும், கூச்சலும், கொண்டாட்டமும், இதைப் பார்த்து ராணாவின் காதோரம் வழியும் குபீர் வியர்வை.. அவருடைய குடை சாயப் போவதை போன்ற அர்த்தத்தில் குடை சாயப் போக.. அதை பாகுபலி தன் கையால் பிடித்து நிறுத்தி வைப்பது.. அரசருக்குரிய அரியணையில் அமர்ந்தவுடன் தன்னுடைய நீண்ட நாள் ஆசை என்கிறவகையில் அந்த சிம்மாசனத்தை கண் விரியும் ஆச்சரியத்துடன் தடவிக் கொடுக்கும் ராணாவின் அந்த சிங்கிள் ஷாட்.. பாகுபலி, அனுஷ்காவை குந்தள தேசத்தில் இருந்து அழைத்து வருகையில் நதிக்கரையோரம் இருக்கும் மிக பிரமாண்டமான யானையின் சிலையில் அரச கொடிகள் உடைபட்டு இரண்டாக உடைவது.. இப்படி பல குறியீடுகளையும் உள்ளடக்கி எதிலும் சோடை போகவில்லை இந்த இயக்குநர் என்பதை நிரூபித்திருக்கிறது இந்தப் படம்.

இந்திய சினிமாவில் இனிமேல் இதுபோல் ஒரு படத்தை எடுக்க முடியுமா என்பது நிச்சயமாக சந்தேகம்தான். அரசர்கள் காலத்து கதை, அதில் பேண்டசி இருக்கிறது.. காதலும் இருக்கிறது.. போர்களும் இருக்கின்றன. ஆனால் இவைகளை இணைக்கும் சுவாரஸ்யமான திரைக்கதையும் இருக்கிறது. உணர்வைத் தூண்டும் வல்லமை படைத்த வசனங்களும் இருக்கின்றன. கண்ணுக்குக் குளிர்ச்சியான வகையில் படமாக்கப்பட்டிருக்கிறது. அதிரடியான சண்டை காட்சிகள்.. மெய்சிலிர்க்கவைக்கும் வகையில் படமாக்கப்பட்டிருக்கிறது.

சிற்சில லாஜிக் எல்லை மீறல்கள், கதாபாத்திரங்களின் குணாதிசய மாற்றங்கள், கால மாற்றத்திற்குள் வராத சில வசனங்கள்.. என்று மிகச் சில குறைகள் இருப்பினும் இதையெல்லாம் தேடிப் பார்த்து, மிகவும் யோசித்துதான் அறிய முடிகிறது. அந்த அளவுக்கு ரசிகனை மெஸ்மரிஸம் செய்திருக்கும் இயக்குநரின் இயக்கத் திறமைக்கு ஒரு ஜேபோடுவோம்..!

சிறுவர் முதல் பெரியவர்வரையிலும் அனைத்துத் தரப்பு மக்களையும் ஒரு சேர திருப்திபடுத்தி வெளியில் அனுப்பும் ஒரு திரைப்படமாக இது வந்திருப்பதில்தான் இயக்குநர் ராஜமெளலி பெரும் வெற்றியடைந்திருக்கிறார்.

சரித்திர கதையென்றாலும் அதிலும் கமர்ஷியலுக்குண்டான அம்சங்களையும் பொருத்தி அனைவரும் ரசிக்கும்படியான ஒரு படத்தை கொடுத்த இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.

ஒரு படத்தின் அனைத்து விஷயங்களையும் இயக்குநரே முடிவு செய்கிறார் என்பதால் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இந்தியாவின் தலை சிறந்த இயக்குநர் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

இந்தப் படம் உலக சினிமா ரசிகர்கள் உட்பட அனைத்து வகையான திரைப்பட ரசிகர்களும் பார்த்து மகிழ வேண்டிய, கற்க வேண்டிய ஒரு திரைப்பாடம் என்பதில் நமக்கு சந்தேகமில்லை..!

பாகுபலி – 2 – பிரம்மாண்டத்தின் உச்சம்..!

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment