(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, July 15, 2018

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு தடை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு தடை குறித்து மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடந்தது.

ராமநாதபுரம் செய்யதம்மாள் மேல்நிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் பயன்பாடு தடை குறித்து மாணவ, மாணவியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.

அப்போது அவர் பேசியதாவது:-

பிளாஸ்டிக் பொருட்களானது எளிதில் மக்காத தன்மை கொண்டவை. சுற்றுச்சூழலுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி,  மண்வளத்தையும் அதிகளவில் மாசுபடுத்தக் கூடியவை. இத்தகைய பிளாஸ்டிக் பொருட்கள் நிலத்தில் தேங்குவதனால் மழைநீர் நிலத்தடிக்குள் செல்வது தடைப்பட்டு நிலத்தடி நீர்; மட்டம் அதிகளவில் பாதிக்கப்படுகிறது. அதேவேளையில் சுற்றுப்புறத்தில் குப்பையாக  கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்களில் தேங்கும் மழைநீர், டெங்கு, மலேரியா போன்ற நோய்களை பரப்பும் கொசுக்களின் உற்பத்திக்கு காரணமாக அமைகின்றது. 

எனவே தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்கள் நலன்கருதி சட்டமன்ற பேரவையில், இவ்வாறான பாதிப்புகளை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு 01.01.2019 முதல் தடை விதிக்கப்படுகிறது  என அறிவித்துள்ளார்.  இந்த அறிவிப்பிற்கு கூடுதல் வலு சேர்த்திடும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 01.07.2018 முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு தடை விதித்து அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.  இந்த அறிவிப்பை மீறி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் ஆகியவற்றிற்கு அபராதம் விதிக்கப்படும் எனவும், அதனையும் மீறி தொடர்ந்து பயன்படுத்துவோரின் நிறுவன உரிமை ரத்து செய்யப்படும் எனவும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.  



மேலும் பொதுமக்களும் இதுபோன்ற பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை தவிர்த்திட வேண்டும்.  கடைகளுக்கு செல்லுதல், உணவுப் பொருட்கள் வாங்குதல் போன்ற அன்றாட நேர்வுகளில் பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்திட வேண்டும்.  நமது மாவட்டத்தில் ஏறத்தாழ 3.50 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன.  அதேபோல ஏறத்தாழ 2.50 லட்சம் பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்கள்  உள்ளனர்.  அந்தவகையில் மாணவ, மாணவியர்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும் எந்தவொரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் முழுமையாக வெற்றி பெறும். அதனடிப்படையில் மாணவ, மாணவியர்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாடு தடை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

மாணவ, மாணவியர்கள் நூறு சதவீதம் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டைத் தவிர்த்து தங்களது குடும்பத்தார் மற்றும் சுற்றத்தாரிடத்திலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்த்திட ஊக்குவித்திட வேண்டும். இவ்வாறு பேசினார். அதன்பிறகு மாவட்ட கலெக்டர் தலைமையில் மாணவ, மாணவியர்கள் அனைவரும் பிளாஸ்டிக் பயன்பாடு தடை குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஆ.செல்லத்துரை, ராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பி.ராஜா, ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர் டி.பிரேம், செய்யதம்மாள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முகம்மது உள்பட அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.


செய்தி: தினபூமி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment