Saturday, April 6, 2019
சிறப்பு நிலை நகராட்சியான ராமநாதபுரம்!!
ராமநாதபுரம் நகராட்சிக்கு கடந்த 60 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் சிறப்பு நிலை நகராட்சி அந்தஸ்து வழங்கி
தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சேது மண்டலம் என அழைக்கப்படும் இந்த பகுதிக்கு தலைநகராகத்
திகழும் ராமநாதபுரம் நகர் சேதுபதி மன்னர்களின் அரண்மனை உள்ள இடமாகும்.
இந்த ராமநாதபுரம் கடந்த 1959 ஆம்
ஆண்டு நகராட்சி அந்தஸ்தைப் பெற்றது. அப்போது அதற்கு மூன்றாம் நிலை நகராட்சி
அந்தஸ்தே வழங்கப்பட்டது. பின்னர் அதே ஆண்டில் இரண்டாம் நிலை நகராட்சியாக தரம்
உயர்த்தப்பட்டது. கடந்த 1984
ஆம் ஆண்டிலிருந்துதான் ராமநாதபுரத்துக்கு முதல்நிலை
நகராட்சி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
முதல் நிலை அந்தஸ்து பெற்ற ராமநாதபுரம் நகராட்சியில்
தற்போது 33
வார்டுகள் உள்ளன. அதில் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்தநிலையில், ராமநாதபுரத்தில்
கடந்த 2017
ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடந்தது. அந்த
விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ராமநாதபுரம் நகராட்சியுடன் அதை
ஒட்டியுள்ள ஊராட்சிகளான சக்கரக்கோட்டை, பட்டணம்காத்தான், அச்சுந்தன்வயல், சூரக்கோட்டை
ஆகியவை இணைக்கப்படும் என்றும், அதனடிப்படையில் சிறப்பு நிலை
நகராட்சியாக மாற்றப்படும் என்றும் அறிவித்தார்.
முதலமைச்சர் அறிவித்து ஓராண்டுக்கும் மேலான நிலையில், தற்போது
ராமநாதபுரம் நகராட்சிக்கு சிறப்பு நிலை நகராட்சி அந்தஸ்தை வழங்கி தமிழ்நாடு
நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நகராட்சி அந்தஸ்து என்பது ஆண்டு வருவாய் ரூ.10 கோடிக்கு மேலிருக்கும் நகராட்சிக்கு வழங்கப்பட்டு வருகிறது. சிறப்பு நிலை
நகராட்சி அந்தஸ்தை ராமநாதபுரம் நகராட்சி பெறுவதால் தற்போதைய நகராட்சி பணியாளர்கள்
எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், சாலை மற்றும் பாதாளச் சாக்கடை உள்ளிட்ட
மேம்பாட்டுப் பணிகள் விரிவுபடுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது மக்களவைத் தேர்தல் நடந்துவருவதால், சிறப்பு
நிலை நகராட்சிக்கான பணிகளைத் தொடங்க முடியவில்லை என்றும் தேர்தல் முடிந்ததும்
அதற்கான முறையான அறிவிப்போடு பணிகள் தொடங்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள்
தெரிவித்தனர்.
(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment