(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, January 29, 2022

ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மனுத்தாக்கல் தொடங்கியது!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தலையொட்டி 4 நகராட்சி, 7 பேரூராட்சிகளில் மனுத்தாக்கல் தொடங்கியது. 

 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெற உள்ளதையொட்டி நேற்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. இதனையொட்டி மாவட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ள 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளில் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்வதற்காக தேர்தல் அலுவலர், உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளனர். அந்தந்த அலுவலக நுழைவு வாயில் பகுதியில் பணியாளர்கள் கிருமிநாசினி கொடுத்து கைகளை கழுவிய பின்னர், முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டனர். 

 

 


ராமநாதபுரம் நகராட்சி அலுவலக வளாக பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

 

இதுகுறித்து நகரசபை ஆணையாளர் சந்திரா கூறியதாவது:-

 

ராமநாதபுரம் நகராட்சியில் தேர்தலை நடத்துவதற்கு நிர்வாகம் முழு அளவில் தயார் நிலையில் உள்ளது. வேட்பு மனுத்தாக்கல் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள கொரோனா வழிமுறைகளை பின்பற்றி வேட்பு மனுத்தாக்கல் மற்றும் அனைத்து தேர்தல் பணிகளும் நடைபெறும்.

இவ்வாறு கூறினார். 

 

வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கு முதல்நாள் என்பதால் ஏராளமானோர் நேரில் வந்து மனுக்களை பெற்று சென்றனர். இன்னும் பலர் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொண்டு தங்களின் மனுக்களை பூர்த்தி செய்யும் பணியில் ஆர்வமுடன் ஈடுபட்டனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடங்கியதை தொடர்ந்து ராமநாதபுரத்தில் தேர்தல் பணிகள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன. 

இதற்கிடையே ராமநாதபுரம், கீழக்கரை பரமக்குடி, ராமேசுவரம் ஆகிய 4 நகராட்சிகளிலும், மண்டபம், தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், அபிராமம், கமுதி, முதுகுளத்தூர், சாயல்குடி ஆகிய 7 பேரூராட்சிகளிலும் நேற்று முதல்நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment