(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, March 29, 2015

1ஆம் வகுப்பில் தமிழ் பாடம் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு!

No comments :
வரும் கல்வியாண்டில் 1ஆம் வகுப்பில் தமிழ் பாடம் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து விடுவிக்கப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ''1 முதல் 10 வரையிலான வகுப்புகளில் கற்பிக்கப்படும் பாடங்களில் ஒன்றாக தமிழை கற்றுக் கொள்ளும் வகையில் '2006ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் கற்பதற்கான சட்டம்' ( தமிழ்நாடு சட்டம் எண்.13/2006) பிரிவு 2 (e) (iv)ன் கீழ் அறிவிக்கை செய்யப்பட்ட அனைத்து பள்ளிகளிலும் 2015-2016 ஆம் கல்வியாண்டிலிருந்து 1ஆம் வகுப்பில் தொடங்கி படிப்படியாக தமிழ் கற்பிக்கப்படுதல் வேண்டும் என அரசு ஆணையிட்டுள்ள்து. 

அதன்படி 2015-2016 ஆம் கல்வியாண்டில் பல்வேறு வாரியங்களை சார்ந்த அனைத்து பள்ளிகளும் கட்டாயமாக தமிழ் மொழி பாடம் கற்றலை 1 ஆம் வகுப்பில் நடைமுறைப்படுத்தவேண்டும். 

எனவே, 1ஆம் வகுப்பு தமிழ் பாடநூல்கள் அச்சடிக்கப்பட்டு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சென்னை மற்றும் மதுரை வட்டார அலுவலகத்தில் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன.
சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் சென்னை வட்டார அலுவலகத்திலும், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மதுரை வட்டார அலுவலகத்திலும் பாடநூல்களை பெற்றுக்கொள்ளலாம்'' எனக் கூறப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment