(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, June 27, 2015

இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவருக்கும் தலைக்கவசம் கட்டாயம் - ராமநாதபுரம் வட்டாரப் போக்குவரத்து கழகம் அறிவிப்பு!!

No comments :
இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் தலைக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என, ராமநாதபுரம் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி எஸ். ஷேக்முகம்மது வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் வட்டாரப் போக்குவரத்துத் துறை சார்பில், தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்பட்டது. வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலிருந்து தொடங்கிய இப்பேரணியை, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் எஸ். சேக் முகம்மது கொடியசைத்து தொடக்கி வைத்தார்.


பின்னர் அவர் பேசுகையில், வாகனம் ஓட்டுபவர்கள் தங்களது உயிரைக் காக்க கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும். மேலும், இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவருமே தலைக்கவசம் அணிந்து செல்லவேண்டும். தலைக்கவசம் அணியவில்லையென்றால், வாகனத்தின் அனைத்து ஆவணங்களும், ஓட்டுநர் உரிமமும் பறிமுதல் செய்யப்படும். ஐ.எஸ்.ஐ. முத்திரையிட்ட புதிய தலைக்கவசம் வாங்கியதற்கான ரசீதை காண்பித்தால் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை விடுவிப்போம் என்றார்.

பேரணி தொடக்க விழாவுக்கு, ராமநாதபுரம் டி.எஸ்.பி. அண்ணாமலை ஆழ்வார் முன்னிலை வகித்தார். இயக்கூர்தி ஆய்வாளர் சரவணக்குமார் வரவேற்றுப் பேசினார். இதில், இயக்கூர்தி ஆய்வாளர்கள் மாணிக்கம், அசோக்குமார் உள்பட காவல் துறையினர், இரு சக்கர வாகன விற்பனை நிறுவனப் பணியாளர்கள், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் பயில்வோர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பேரணியானது, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தொடங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் புறப்பட்ட இடத்துக்கு வந்து சேர்ந்தது.
காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி: காவல்துறை சார்பில், ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்திலிருந்து வெள்ளிக்கிழமை தொடங்கிய விழிப்புணர்வுப் பேரணியை, ஏ.எஸ்.பி. சுகுணாசிங் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், டி.எஸ்.பி. அண்ணாமலை ஆழ்வார், போக்குவரத்து ஆய்வாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் ஆயுதப்படை மைதானத்தை அடைந்தது.
No comments :

Post a Comment