(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, June 9, 2015

இணையவழி படிப்புகள் வழங்க எந்த பல்கலைகழகத்திற்கும் அனுமதியில்லை, யுஜிசி அறிவிப்பு!!

No comments :
இணையவழி (ஆன்-லைன்) முறையில் பட்டப் படிப்புகளையோ, பட்ட மேற்படிப்புகளையோ வழங்க இதுவரை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில் எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லை என்ற அறிவிப்பு பல்கலைக்கழகங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த அறிவிப்பு காரணமாக,  பல்வேறு பல்கலைக்கழகங்கள் சார்பில் வழங்கப்படும் இணையவழி முறையிலான படிப்புகளில் சேர்ந்துள்ள ஆயிரக் கணக்கானவர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
தொலைநிலைக் கல்வி தொடர்பான பொது அறிவிப்பு ஒன்றை யு.ஜி.சி. வியாழக்கிழமை (ஜூன் 4) வெளியிட்டது. அதில், பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், கல்வி நிறுவனங்களுக்கு ஏற்கெனவே உள்ள நடைமுறைகளை நினைவூட்டும் வகையிலும் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன.


 அதிலுள்ள சில முக்கிய அம்சங்கள்:

 * மாநில பல்கலைக்கழகங்கள் (அரசு, தனியார்) அந்தந்த மாநிலங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மட்டுமே கல்வி மையத்தையோ அல்லது விரிவாக்க மையத்தையோ அமைக்க முடியும். மாநிலத்துக்கு வெளியே இதுபோன்ற கல்வி மையங்களைத் தொடங்க அனுமதி கிடையாது. அதிலும், தனியார் பல்கலைக்கழகங்களைப் பொருத்தவரை அந்தந்த மாநில எல்லைக்குள் விரிவாக்க கல்வி மையத்தைத் தொடங்க முன் அனுமதி பெறுவது அவசியம்.

 * பொறியியல், தொழில்நுட்பக் கல்வியில் பட்டயப் படிப்புகளையோ, பட்டப் படிப்புகளையோ, முதுநிலை பட்டப் படிப்புகளையோ தொலைநிலைக் கல்வியில் எந்தவொரு கல்வி நிறுவனமும் வழங்க அனுமதி கிடையாது.

 * இணையவழி முறையில் பட்டப் படிப்புகளையோ, பட்ட மேற்படிப்புகளையோ வழங்க எந்தவொரு பல்கலைக்கழகத்துக்கோ அல்லது கல்வி நிறுவனத்துக்கோ இதுவரை யு.ஜி.சி. அனுமதி வழங்கவில்லை. எனவே, இணையவழி படிப்புகளுக்கு அங்கீகாரம் கிடையாது.

 * தொலைநிலைக் கல்வி முறையில் எந்தெந்த கல்வி நிறுவனங்கள் என்னென்ன படிப்புகளை வழங்க யு.ஜி.சி. அனுமதி அளித்துள்ளது என்ற விவரம் பொதுமக்கள் பார்வைக்காக www.ugc.ac.inஎன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த அறிவிப்பு பல்கலைக்கழகங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில பல்கலைக்கழகங்கள் இணையவழி படிப்புகளை அறிமுகம் செய்துள்ளன. அதைப் பின்பற்றி தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அண்மையில் இணையவழி பட்டப் படிப்புகளை அறிமுகம் செய்தது.

இந்த முறையில், ஒரு நாள்கூட படிப்பு மையங்களுக்குச் செல்லாமல், மூன்று ஆண்டு படிப்பையும் வீட்டிலிருந்தபடியே இணையப் புத்தகங்களில் படிக்கலாம் என்பதால் நூற்றுக் கணக்கானோர் சேர்ந்துள்ளனர். இவர்களின் நிலை இப்போது கேள்விக்குறியாகியிருப்பதாக கல்வியாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

 இதுகுறித்து தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறியது:
மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தைப் பின்பற்றியே, எங்களுடைய பல்கலைக்கழகத்திலும் இணையவழி படிப்பு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தப் படிப்பு முறைக்கு அங்கீகாரம் அளிக்கக் கோரி இப்போது யு.ஜி.சி.யின் கீழ் இயங்கிவரும் தொலைநிலைக் கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். விரைவில் அனுமதி கிடைத்துவிடும் என நம்புகிறோம் என்றார்.

அனுமதி பெறுவது கடினம்:

இணையவழி படிப்புகளுக்கு அனுமதி பெறுவது கடினம் என்று யு.ஜி.சி. துணைத் தலைவர் ஹெச்.தேவராஜ் கூறினார். இதுகுறித்து அவர் தொலைபேசி மூலம் அளித்த பேட்டி:

இணையவழி முறையில் பட்டப் படிப்புகளையோ, பட்ட மேற்படிப்புகளையோ வழங்க இதுவரை எந்தவொரு பல்கலைக்கழகத்துக்கும் யு.ஜி.சி. அனுமதி வழங்கவில்லை. அதன்படி, இணையவழி படிப்புகளுக்கு அங்கீகாரம் இல்லை.
எனவே, இந்த முறையில் படிப்பவர்கள் அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பைப் பெறவோ, பதவி உயர்வு பெறவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதுடன், முதுநிலை பட்டப் படிப்புகளை மேற்கொள்ளவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், இந்த இணையவழி படிப்புகளை ஏற்கெனவே அறிமுகம் செய்துள்ள பல்கலைக்கழகங்கள், அதற்கான அனுமதியை யு.ஜி.சி.யிடம் இப்போது பெறுவதும் கடினம் என்றார்.


No comments :

Post a Comment