(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, June 17, 2015

குற்றால சீசன் தொடங்கியது!!

No comments :
தென்றல் காற்றும் இதமான சாரலுமாய் குற்றால சீசன் தொடங்கியுள்ளது. அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால் அங்கு சென்றுள்ள சுற்றுலா பயணிகளும், சிறு கடை வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தென்னகத்தின் ஸ்பா என்று அழைக்கப்படும் பெருமையுடையது குற்றாலம். இங்குள்ள அருவிகளில் விழும் தண்ணீர் மூலிகை குணம் நிறைந்தது.


மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழையானது அங்குள்ள அடர்ந்த வனப்பகுதிகளைக் கடந்து, பல்வேறு வகையான மூலிகைகளின் வழியாக பாய்ந்தோடி வந்து குற்றாலத்தில் அருவியாக கொட்டுகிறது. எனவே இந்த அருவி நீரில் குளிப்பது உடலுக்கு ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது.



தென்மேற்குப் பருவ மழைக் காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் குற்றாலத்தில் இதமான தென்றலும் ரம்மியமாய் பொழியும் சாரல் மழையிலும் நனைந்து கொண்டே கொட்டும் அருவிகளில் நீராடுவது அனைவருக்கும் பிடித்தமான விசயம். இதற்காகவே ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தில் குவிகின்றனர்.


இங்குள்ள பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம், புலியருவி, தேனருவி, செண்பகாதேவி அருவி என அனைத்து அருவிகளிலும் சீசன் காலங்களில் தண்ணீர் கொட்டும்.


ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்குப் பருவக்காற்று வீசத் தொடங்கியதுமே சீசன் ஆரம்பமாகிவிடுகிறது. இந்த ஆண்டு கடந்த 2 வாரகாலமாகவே சீசன் தொடங்காமல் போக்கு காட்டியது. இதனால் சுற்றுலா பயணிகளும், வியாபாரிகளும் ஏமாற்றமடைந்தனர். 17 நாட்களுக்குப் பின்னர் தற்போது முதன் முறையாக சாரல் மழையுடன் சீசன் தொடங்கியுள்ளது.

குற்றாலத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து தென்மேற்குப் பருவக்காற்று வீசுகிறது. நேற்று காலையில் அருவிப் பகுதிகளில் லேசான சாரல் விழுந்தது. பேரருவியில் குளிக்கும் அளவுக்கு தண்ணீர் விழுந்தது. மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்தால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என்று வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


No comments :

Post a Comment