(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, June 14, 2015

நவீன வசதிகளுடன் புதுப்பொலிவு பெற்று வரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனை!!

No comments :
ராமநாதபுரம் அரசு மருத்துவமனை, அனைத்து நவீன வசதிகளுடன் புதுப்பொலிவு பெற்று வருகிறது. 

நவீன வசதிகள்

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கடந்த 1965-ம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. தமிழக அரசின் சீரிய திட்டங்களால் கடந்த 4 ஆண்டுகளில் இந்த மருத்துவமனை பல்வேறு நவீன மருத்துவ உபகரணங்களை கொண்டும், சிறப்பு சிகிச்சை நிபுணர்களை கொண்டும், உயரிய சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனையாக விளங்குகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் மிகவும் பயனடைந்து வருகின்றனர். முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இந்த ஆஸ்பத்திரியில் இருதய சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக நோய் சிகிச்சை, பெண்களுக்கு கர்ப்பப்பை நோய் சிகிச்சை உள்பட பச்சிளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வகை நோய்களுக்கு சிறந்த சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த ஆஸ்பத்திரி, மருத்துவ கல்லூரி மருத்துவமனை தரத்திற்கு உயர்த்தப்பட்டு பல்வகை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனையில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் பலவகை நோய்களுக்கும் 3,594 நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு பயனடைந்துள்ளனர். இதன் மூலமாக மருத்துவமனைக்கு ரூ.4 கோடியே 97 லட்சம் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நிதி பெறப்பட்டு மருத்துவமனையில் தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக வசதிகளை பெறுகிற வகையில் பல்வேறு நவீன உபகரணங்கள், கருவிகள் வாங்கப்பட்டு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிறந்த சிகிச்சை

மருத்துவமனையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு சிறந்த மருத்துவ நிபுணர்களை கொண்டு சிகிச்சை அளிக்கும் வகையில் ரத்தக்குழாய்¢ தொடர்பான அறுவை சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சை, குடல் நோய் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை, பல் மருத்துவம், மூட்டு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை, மயக்க மருந்து நிபுணர், நரம்பியல் நோய் சிகிச்சை உள்ளிட்டவற்றிற்கு மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் பணிபுரியும் சிறப்பு மருத்துவ நிபுணர்களை கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இங்கு தினசரி சராசரியாக உள்நோயாளிகள் 550 பேர், புறநோயாளிகள் 1500 பேர் என சுமார் 2,000 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை, மதுரை போன்ற பெருநகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக சிறந்த மருத்தவ நிபுணர்களை கொண்டு மாதம் ஒன்றுக்கு 600 அறுவை சிகிச்சைகள் வரை செய்யப்பட்டு வருகிறது. மருத்துவமனை முற்றிலும் புதுப்பிக்கப்படுவதையொட்டி வரவேற்பறையில் நவீன கேமிரா பொருத்திய கண்காணிபபு வசதி, பார்வையற்றோருக்கான இருக்கைகள், மின் வசதி, நோயாளிகளுக்கான படுக்கை வசதி போன்றவை ஏற்படுத்தப்பட்டு சுகாதாரமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனை வளாகத்தில் 100 படுக்கைகள் கொண்ட புதிய கட்டிடம் ரூ.2.கோடி செலவில் அளவில் தரைத்தளம், முதல்தளம் மற்றும் 2-வது தளம் என 3 அடுக்குகளை கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. 30 படுக்கைகளை கொண்ட காப்பீட்டு திட்டத்திற்கான சிறப்பு பிரிவு 2-வது தளத்தில் இயங்குகிறது. இதேபோல ரூ.60 லட்சம் மதிப்பில் ராமநாதபுரம் மாவட்டத்திலேயே வேறு எங்கும் இல்லாத அளவிற்கு டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்டு உள்ளது. இதில் குறைந்த செலவில் தரமான எக்ஸ்ரே படம் எடுக்கப்படுகிறது.

சிறுநீரக நோய்கள்

சிறுநீரக நோயாளிகளின் நலன் கருதி டயாலிசிஸ் செய்யும் 5 கருவிகள் பொருத்தப்பட்டு தினசரி காலை 6 மணி முதல் 10 மணி வரை சுழற்சி முறையில் மருத்துவர் மற்றும் செவிலியர், தொழில்நுட்ப உதவியாளர் பணிபுரிந்து வருகின்றனர். இதன் காரணமாக ஏராளமான சிறுநீரக நோயாளிகள் பயனடைந்து வருகின்றனர். மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்காக ரூ.18 லட்சம் மதிப்பில் நவீன கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்பில் தலை முதல் கால் வரை உடல் உறுப்புகளை பரிசோதிக்க சி.டி. ஸ்கேன் கருவி பொருத்தப்பட்டு நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. கண் பார்வை குறித்த பரிசோதனை செய்ய ஸ்கேன் கருவி பொருத்தப்பட்டு உள்ளது. மூட்டு எலும்பை பரிசோதனை செய்ய ஆர்த்ரோஸ்கோபி பொருத்தப்பட்டு சிறந்த மருத்துவ நிபுணர்களை கொண்டு பரிசோதனை மற்றும் சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. மேலும் லேப்ரோஸ்கோபி மற்றும் எண்டோஸ்கோபி நவீன கருவிகள், பச்சிளம் குழந்தைகளுக்காக வெண்டிலேட்டர் உள்ளிட்ட வசதிகளுடன் தீவிர சிகிச்சை பிரிவு, போட்டோதெரபியுடன் கூடிய வார்மர் உள்ளிட்ட பல்வகை கருவிகளும் பொருத்தப்பட்டு சிறப்பான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செய்தி: தினத்தந்தி

No comments :

Post a Comment