Saturday, October 3, 2015
கீழக்கரையில் பழமையான கட்டிடத்தின் மாடி சுற்றுச்சுவர் இடிந்து விபத்து, ஒருவர் படுகாயம்!!
கீழக்கரையில் பழமையான கட்டிடத்தின் மாடி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் முதியவர் படுகாயமடைந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் கடந்த 1973-ல் கட்டப்பட்ட மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் கீழ்பகுதியில் 2 கடைகளும், மேல்பகுதியில் 2 மாடிகளில் 2 வீடுகளும் உள்ளன. இந்த கட்டிடம் பழுதடைந்து சுவர்கள் விரிசலடைந்து காணப்பட்டன.
இந்த நிலையில் நேற்று இந்த கட்டிடத்தின் மேல்மாடி சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. 3 புறமும் சுவர் அடிமட்டத்தோடும், மேற்கூரையின் ஒருபகுதியும் பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது.
இந்த சுவரின் ஒரு பகுதி அருகில் இருந்த ஓட்டு கட்டிடத்தின் மேல் விழுந்தது. இதில் ஓடுகள் உடைந்து அதில் இளநீர் வியாபாரம் செய்து கொண்டிருந்த நாகேந்திரன்(வயது 63) என்பவரின் மேல் விழுந்தது. இதில் படுகாயமடைந்த நாகேந்திரன் உடனடியாக சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். மாடிப்பகுதி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தபோது அதிர்ஷ்டவசமாக கீழ்பகுதியில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. சுவர் இடிந்து விழுந்ததால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கீழக்கரை போலீசார் அங்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். பட்டப்பகலில் முக்கியத்துவம் வாய்ந்த சாலையில் கட்டிட சுற்றுசுவர் இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து நகரசபை ஆணையாளர் மருது கூறியதாவது:- கீழக்கரையில் இதுபோன்று ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்கள் குறித்து கண்டறிந்து சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு நோட்டீசு வழங்கப்படும். மேலும், ஆபத்தான கட்டிட அமைப்புகளை கொண்ட உரிமையாளர்கள் உடனடியாக பேராபத்து ஏற்படும் முன்னர் தங்களின் கட்டிட பழுதுகளை சரிசெய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
செய்தி: தினத்தந்தி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment