(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, January 30, 2016

இறுதிச்சுற்று – தமிழ், சாலா கடூஸ் – ஹிந்தி, திரை விமர்சனம்!!

No comments :

தமிழில் வெளிவந்த 'ஸ்போர்ட்ஸ் சினிமா'க்களை நாக்-அவுட் செய்திருக்கும் இறுதிச் சுற்று!
குத்துச் சண்டை வெற்றியையே தன் வெறியாகக் கொண்டு அஸோசியேசன் அரசியலால் ஒலிம்பிக் கனவு தகர்ந்து போனாலும் ஒரு வெற்றிகரமான, முரட்டுக்  கோச்சாக இருக்கிறார் மாதவன். 

நேர்மையாக இருக்க நினைக்கும் எல்லோருக்குள்ளும் பொங்கி வழிகிற ரௌத்திரம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிற காரணத்தினால் மீண்டும் அஸோசியேஷ‌ன் தலைமையினால் டெல்லியிலிருந்து, ஒரு சவாலோடு சென்னைக்கு தூக்கி அடிக்கப்படுகிறார். அந்தச் சவால் "அங்கிருந்து ஒரு சாம்பியனைக் கொண்டு வா பார்கலாம்' என்பதே.

சென்னையில் ஜுனியர் கோச்சாராக இருக்கும் நாசரால் கைகாட்டப்படுகிற மும்தாஜ் சொர்க்காரை விட அவள் தங்கை ரித்தீகா சிங்கிடம்,  தன்னிடம் இருக்கும் வேகமும், வெறியும், பாக்ஸிங் ஆர்வமும் இருப்பதைக் காண்கிறார் மாதவன். அக்காவை போல் பாக்சிங் ஆர்வத்தினால் அல்லாமல் மாதவன் தரச் சம்மதித்த  பணத்துக்காக பயிற்சிக்கு செல்கிறார் ரித்திகா. 

கோபமும் திமிரும் தன்னைவிட இரண்டு மடங்கு இருக்கும் ரித்திகாவை கட்டுக்குள் கொண்டு வந்து அவருக்கு பயிற்சி அளிக்கிறார் மாதவன். ஆனால், அவரை சாம்பியன் பாக்ஸர் ஆக்கும் லட்சியத்துக்கு ரித்திகாவின் முரட்டுப் பிடிவாதம், அவள் அக்காவின் பொறாமை,  அஸோசியேஷன் அரசியல் எனப் பல தடைக் கற்கள்.  இதையெல்லாம் மீறி அவர் வென்றாரா இல்லையா என்பதே இறுதிசுற்று.

கலைந்த கேசம், இரும்பு தேகம், முரட்டு கோபம்... வாவ்... இது மேடி வெர்ஷன் 2.0. எள்ளலும் முரட்டுப் பிடிவாதமும் கொண்ட கோச்சாக. திடமான, தெளிவான, திமிரான வீரனாக அட்டகாசம். ரிங்கில் சண்டை நடக்கும்போது கீழேயிருந்து வெறியுடன் ஊக்கப்படுத்துவது, நடப்பதையெல்லாம் மிக அமைதியாகப் பார்த்துக்கொண்டே மூர்க்க ரியாக்ஷன் கொடுப்பது, ரித்திகாவின் வேகத்தைக் கண்டு அவர் செய்யும் சேட்டைகளை மிகஅலட்சியமாகப் புறந்தள்ளிவிட்டு அவருடைய திறமையை வெளியே கொண்டுவருவதற்காகப் போராடுவது என 'சக்தே' ஷாருக்கையே சமயங்களில் லெஃப்டில் அடித்து எகிறுகிறார். படம் முழுக்க அவ்வளவு எகிறிவிட்டு, க்ளைமாக்சில் சட்டென பணியும்போது வெளிப்படும் ஒரு இயலாமை... க்ளாஸிக். அப்போதும் '***** நீ அவ்ளோதான்டா' என்று அடக்கப்பட்ட கோபத்துடன் எகிறுவது..... ஆவ்ஸம்... ஹேண்ட்ஸம் மேடி!



பிரியாணி, தனுஷ் படம், அம்மாவுக்கு புது சேலை என‌ இவைகளில் திருப்திய‌டைகிற பெண்ணாக அறிமுகமாகும் ரித்திகா, க்ளைமாக்சில் சர்வதேச சாம்பியனாக பிரமாண்ட பிரமிப்பூட்டுவது... மெஸ்மரிச மேஜிக்! 'நீ கொடுத்த காசுக்கு ரெண்டு மணி நேரம் முடிஞ்சிருச்சு.. அவ்ளோதான்' என மாதவனை தெறிக்க விடுவதும், மாதவனை வெறுப்பேற்ற போட்டியில் வேண்டுமென்றே ஃபவுல் செய்துவிட்டு ரிங் கார்னரில் கெத்தாக நிற்பதாகட்டும், 'முதல் தடவை காதல் சொன்ன எனக்கே அந்தர் ஆகலை. உனக்கு என்ன?' என சேலையில் செமத்தி கெத்து காட்டுவதும், கடைசிப் போட்டி முடிந்ததும் குரங்குக் குட்டியாக மாதவன் இடுப்பில் தாவிக் கொள்வதும்... செல்லம் பின்னிட்டடா..! ஒவ்வொரு அரை மணி நேரங்களிலும் தன் கேரக்டரின் வெயிட் ஏற்றிக் கொண்டே செல்லும் ரித்திகா, இறுதியில் பன்ச் வெடிக்கும்போது... அதகளம். லவ் யூ ஆங்ரி ஏஞ்சல்! 

ஜூனியர் கோச் நாசர், மாதவனுக்கு எப்போதுமே ஆதரவளிக்கும் ராதாரவி (இவர் மாதவனுக்கு யார் என‌ வெளிப்படும் காட்சி... அள்ளு). 'தண்ணியடிச்சா லிவர் கெட்டுப் போயிரும்ல. அதான் தண்ணியடிக்கும்போது லிவர் சாப்பிடுறேன். அப்போ இந்த லிவர்தானே கெட்டுப் போகும்' என சலம்பும் நாசர், 'நான் சாமிக்கண்ணு இல்லை... சாமுவேல்... நீ மதி இல்லை.... மடோனா' என கிறுகிறுக்கும் காளி வெங்கட் என அனைவரும் நச் காஸ்டிங். 

இயக்குநர் சுதா கொங்க்ரா மணிரத்னம் பட்டறையிலிருந்து வந்தவர் என்பத‌ பளிச் விசுவல்களில் நிரூபிக்கிறார். 2011 செம்ப்டம்பரில் மாதவனிடம் சொல்லபட்ட இந்த கதைக்காக ஷீட்டிங், போஸ்ட் புரொடக்ஷ‌ன் போக இரண்டரை ஆண்டுகள் பெண்கள் குத்துசண்டை குறித்த விபரங்களுக்காக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுற்றி இருக்கிறார் என்பது படத்தின் டிடெய்லிங்கில் தெரிகிறது. க்யூடோஸ் சுதா!

ஒரே சமயத்தில் இந்தி, தமிழ் பேசும் சினிமாவில் அந்நியத்தன்மை வந்துவிடக் கூடாது, சென்னை குப்பத்துப் பெண் எப்படி இவ்வளவு பளிச்சென இருப்பார்.. இவற்றை சமாளிக்க  குப்பத்தில் சேட்டுப் பெண் என கோர்த்திருப்பது... குட்! 

ச‌ந்தோஷ் நாராயணனின் இசை விவேக் மற்றும் முத்தழிழின் பாடல் வரிகளை அழகாக படத்துடன் பொருத்துகிறது. கதைக்கு பொருந்தி அமைந்துள்ளது. 'வா மச்சானே...' பாடல் மெட்டு மட்டும் எங்கேயோ கேட்ட ரகம். 'பேன்ட் கழட்டிட்டு ஆள் செலக்ட் பண்ற ஆள் இல்லை நான்', 'அவ உன்ன மாதிரி இல்ல... உன்னையே தூக்கிச் சாப்டுருவா!', 
'
ஆயிரம் பேருக்கு என் அப்பன் வயசு. எல்லார்கிட்டயுமா லவ் யூ சொல்லிட்டு இருக்கேன்' பட்டாசு வெடிக்கின்றன அருண் மாதேஸ்வரனின் வசனங்கள். 

ஐந்தில் நான்கு பாடல்க‌ள் இடைவேளைக்கு முன்பே முடிந்து விட ஒரே ஒரு  பாடல் மட்டும் இடைவேளைக்கு பின். அதுமட்டுமின்றி இடைவேளைக்குப் பின் பட‌ம் சீரீயஸாகவே செல்வதால் முதல் பாதியிலிருந்த வேகம் இரண்டாம் பாதியில் இல்லை.  மற்றும் எளிதில் கணிக்கக்கூடிய திரைக்கதை. எப்போதும் விளையாட்டு பின்னணி சினிமாவில் எதிர்பார்க்கக் கூடிய முடிவுதான். ஆனால், அதிலும் செங்கிஸ்கான் ட்விஸ்ட் வைத்து, ரித்திகா எதிராளியை வீழ்த்துவாரா என்று எதிர்பார்க்க வைத்தது... சூப்பர்ப்!

பெண்கள் குத்துச்சண்டை உல‌கில் நடக்கும் அரசியலை, அதை முறியடிக்க பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை சுவாரஸ்யமாக திரைக்கதையின் பிணைத்து, அதை வெற்றிகரமாக படமாக்கியதற்காக இயக்குனர் சுதாவின் கைகளை உயர்த்தி "அண்ட்,   வின்னர் ஈஸ்...." என‌ அறிவிக்கலாம்!
டெயில்பீஸ்: 'அனைத்தும் கற்பனையே.. யாரையும் குறிப்பிடுவன அல்ல' எனப் போடாமல், 'உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது' என்று போட்ட இயக்குனரின் 'பெண்மை'க்கு சபாஷ்!

விகடன் விமர்சனம்



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment