(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, April 27, 2016

ராமநாதபுரம் அதிமுக பிரமுகர் வீட்டில் பணம் பதுக்கலா? : அதிகாரிகள் வீட்டை பூட்டி சீல்!!

No comments :

ராமநாதபுரத்தில் அதிமுக பிரமுகர் வீட்டில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணம் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், செவ்வாய்க்கிழமை அங்கு சென்ற வருமான வரித் துறை அதிகாரிகள், உரிமையாளர் வெளியூர் சென்றிருந்ததால், வீட்டைப் பூட்டி சீல் வைத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சிறுபான்மைப் பிரிவு துணைச் செயலர் எஸ்.எம். நூர்முகம்மது. இவர், சக்கரக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவராகவும் இருந்து வருகிறார். இவரது வீடு, ராமநாதபுரம் அருகே வாணி கிராமத்தில் உள்ளது. இங்கு, இவர் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணம் பதுக்கி வைத்திருப்பதாக, தேர்தல் அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில், மதுரை வருமான வரித் துறை துணை இயக்குநர் மைக்கேல் ஜெரால்டு தலைமையில் 9 பேர் அடங்கிய குழுவினர், எஸ்.எம். நூர்முகம்மது வீட்டில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தச் சென்றனர்.

அப்போது வீடு பூட்டியிருந்தது. வீட்டு வராந்தாவில் இருந்த பணியாளர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.


ராமநாதபுரம் மாவட்டத்துக்கென தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் செலவின சிறப்புப் பார்வையாளரான பிரதாப் நாராயண் சர்மா, ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், வங்கி மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் ஆகியோர், காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

வீட்டின் உரிமையாளரான எஸ்.எம். நூர்முகம்மது வெளியூரில் இருப்பதாகவும், புதன்கிழமை வருவதாகவும் அதிகாரிகளுக்கு தகவல் வந்ததையடுத்து, அந்த வீட்டைப் பூட்டி அதிகாரிகள் சீல் வைத்து விட்டுச் சென்றனர்.

இது குறித்து விசாரணை அதிகாரி ஒருவர் கூறியது: தற்போது வீட்டைப் பூட்டி சீல் வைத்து, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புதன்கிழமை காலையில் எஸ்.எம். நூர்முகம்மது வந்தால், அவர் முன்பாக வீட்டைத் திறந்து சோதனையிடப்படும். இல்லையெனில், சீல் வைக்கப்பட்டுள்ள பூட்டை உடைத்து வீட்டுக்குள் சென்று சோதனையிட முடிவு செய்துள்ளோம்.

வீட்டில் சோதனை நடத்திய பின்னரே வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் வைத்திருக்கிறாரா, இல்லையா என்பது குறித்து தெரியவரும் என்றார்.

ராமநாதபுரம் ஏ.எஸ்.பி. எஸ். சர்வேஷ்ராஜ் தலைமையிலும், கேணிக்கரை காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாசகன் மேற்பார்வையிலும், எஸ்.எம். நூர்முகம்மது வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment