(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, January 5, 2017

மாவட்ட தொழில் மையம் சார்பில் 88 பயனாளிகளுக்கு ரூ.375.85 லட்சம் வங்கி கடனுதவி பெற பரிந்துரை!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் புதன்கிழமை மாவட்ட தொழில் மையம் சார்பில் நடைபெற்ற புதிதாக சுயதொழில் செய்வோருக்கான பயனாளிகளை தேர்வு செய்யும் நேர்காணலில் 88 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதற்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் தலைமை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் எஸ்.எஸ்.தனபதி, மாவட்டத் தொழில் மைய மேலாளர் ப.மாரியம்மாள், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கே.எஸ்.சுரேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 118 பேர் பங்கேற்ற இந்த நேர்முகத் தேர்வில் தொழில் முனைவோரின் கல்வித் தகுதி, தொழில்களின் சாத்தியக் கூறுகள், சந்தை வாய்ப்புகள் ஆகியவை பரிசீலிக்கப்பட்டன. புதிய தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் புதிதாக சுயதொழில் தொடங்க 88 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

ஹாலோ பிளாக் தயாரித்தல், ஆயத்த ஆடைகள் தயாரித்தல், உணவுப் பொருள் உற்பத்தி, பெயிண்ட் தயாரித்தல், கயிறு தயாரித்தல் உள்பட பல்வேறு தொழில்களை புதிதாக செய்ய பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த 88 பயனாளிகளுக்கும் ரூ.97.51 லட்சம் மதிப்பிலான அரசு மானியத்துடன் ரூ.375.85 லட்சம் வங்கி கடனுதவி பெற பரிந்துரை செய்யப்பட்டது.

நேர்காணலின் போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் ஆர்.சியாமளாநாதன், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத் உதவி இயக்குநர் பாரதி ஆகியோர் உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment