Wednesday, May 17, 2017
சுய தொழில் தொடங்க ரூ.25 லட்சம் வரை அரசு மானியத்துடன் கடனுதவி!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பினை அதிகரிக்கவும், சுயதொழில் செய்பவர்களது பொருளாதாரம் முன்னேற்றம் அடையவும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற கல்வித்தகுதி தேவையில்லை. வயது வரம்பு ஏதுமில்லை. வருமான உச்சவரம்பு இல்லை. உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் தொடங்க அரசு மானியத்துடன் வங்களின் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் உற்பத்தி தொழில்களுக்கு அதிகபட்ச திட்டத்தொகையாக ரூ.25 லட்சமும், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி தொடர்பான தொழில்களுக்கு திட்டத்தொகை ரூ.10 லட்சத்திற்கு மேலும் மற்றும் சேவை தொழில்களுக்கு திட்டத் தொகை ரூ.5 லட்சத்திற்கு மேலும் இருப்பின் அத்தகைய திட்டங்களுக்கு கடனுதவி பெறவிரும்புவர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். 18 வயது நிரம்பியவர்கள் இதில் பயன் பெறலாம்.
தனிநபர் தொழில் முனைவோர்கள், உற்பத்தி கூட்டுறவுசங்கங்கள், சுய உதவிக் குழுக்கள், அறக்கட்டளைகள் ஆகியோர் இத்திட்டத்தில் பயன் பெறலாம். பொதுப்பிரிவினர் நகர்ப்புறத்தில் தொழில் துவக்கும் பட்சத்தில் அவர்களுக்கு திட்டகடன் தொகையில் 15 சதவிகிதமும், ஊரக பகுதியில் தொழில் துவக்கும் பட்சத்தில் 25 சதவிகிதம் மானியமும் வழங்கப்படும். சிறப்பு பிரிவினர்களான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர், சிறுபான்மையினர், மகளிர், முன்னாள் படைவீரர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நகர்ப்புறத்தில் தொழில் துவக்கும் பட்சத்தில் அவர்களுக்கு திட்டமதிப்பீட்டு தொகையில் 25 சதவித மானியமும், ஊரக பகுதியில் தொழில் துவக்கும் பட்சத்தில் 35 சதவித மானியமும் வழங்கப்படும்.
தென்னை, நார், கயிறு மற்றும் கயிறு, துகள் கட்டிகள், முந்திரி பதப்படுத்துதல், சிறுதானியங்களிலிருந்து உணவுப்பொருட்கள் தயாரிப்பு, கேக் மற்றும் பிஸ்கட் தயாரிப்பு, உணவுப்பொருட்கள் தயாரிப்பு, அயோடின் உப்பு தயாரிப்பு, இரும்பு பர்னிச்சர் தயாரிப்பு, ஹலோபிளாக் தயாரித்தல், பிளே ஆஸ் செங்கல் தயாரித்தல், கருவேல மரத்தூள்கலிருந்து தயாரிக்கப்படும் எரிப்பொருள் கட்டி தயாரித்தல், பிவிசி பைப் தயாரித்தல்,நோட்டு புத்தங்கள் தயாரித்தல், அட்டைப்பெட்டிகள் தயாரித்தல், ஆயத்த ஆடைகள் தயாரித்தல், டிஜிட்டல் பிரிண்டிங், பிளக்ஸ் பேனர், அழகுநிலையம், உலர் சலவையகம், வீல் அலையன்மெண்ட் போன்ற தொழில்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெறலாம்.
ஆர்வமுள்ளவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்டதொழில் மையஅலுவலகத்தை தொடர்பு கொண்டு விபரங்களை பெறலாம். தொலைபேசிஎண்;. 04567 -230497. www.kviconline.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து, விண்ணப்ப நகலை மாவட்டதொழில் மைய அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment