Tuesday, June 27, 2017
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்!!
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று ரம்ஜான் பண்டிகை
கொண்டாடப்பட்டது. இதையொட்டி ராமநாதபுரத்தில் மதுரை ரோட்டில் உள்ள ஈதுகா
கோரித்தோப்பு மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
நகரில் உள்ள அனைத்து ஜமாத்தார்கள் சார்பில் நடைபெற்ற இந்த
சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் புத்தாடை அணிந்து மகிழ்ச்சியுடன் கலந்து
கொண்டனர். இதில் உலக நன்மைக்காகவும், மழைவேண்டியும், அமைதி
நிலவவும் வேண்டி சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. சிறப்பு தொழுகையின் முடிவில்
சிறியவர் முதல் பெரியவர் வரை ஒருவரையொருவர் கட்டித்தழுவி பெருநாள் வாழ்த்துக்களை
பரிமாறிக்கொண்டனர்.
ராமநாதபுரம் சின்னமுகல்லம் அம்பலகாரத்தெரு முஸ்லிம் ஜமாத்
சின்ன பள்ளிவாசலில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் பல்லாயிரக்கணக்கான
முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து திரளாக கலந்து கொண்டனர். தொழுகையின் முடிவில் உலக
அமைதிக்காக சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடத்தினர். இந்த தொழுகைக்கான ஏற்பாடுகளை
ராமநாதபுரம் பெரிய முகல்லம் மற்றும் சின்ன முகல்லம் பாசிப்பட்டறை ஜமாத் மற்றும்
காதர் பள்ளிவாசல் ஆகிய ஜமாத்களின் சார்பில் செய்திருந்தனர்.
நோன்பு பெருநாளை ஈகை திருநாளாக கொண்டாட வேண்டும் என
இஸ்லாமிய மார்க்கத்தில் அறிவுறுத்தப்பட்டுஉள்ளதால் ஏராளமான ஏழைகளுக்கு
தானதர்மங்களை முஸ்லிம்கள் வழங்கினர். சிறப்பு தொழுகைக்கு முன்னதாக பித்ரா
எனப்படும் ஏழை வரியை நலிந்தவர்களுக்கு வழங்கினர்.
இதேபோல, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மதரசா
மற்றும் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் ஏராளமான பெண்கள் திரண்டு சிறப்பு
தொழுகையில் கலந்து கொண்டனர்.
இதேபோல கீழக்கரையில் உள்ள பெரிய குத்பா பள்ளிவாசல் உள்பட
அனைத்து தொழுகை பள்ளிவாசல்களிலும் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில்
பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு தொழுகையின் முடிவில்
உலக அமைதிக்காக சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
இதேபோல, ஏர்வாடி, பெரியபட்டிணம், காஞ்சிரங்குடி
உள்பட அனைத்து பகுதிகளிலும் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில்
ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை நடத்தினர்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment