(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, September 20, 2017

ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நுழைவு கட்டணம் வசூலை நிறுத்த கோரிக்கை!!

No comments :
ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் வாகன நுழைவு கட்டணம் வசூலை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ராமேஸ்வரத்திற்கு வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் வாகனங்களுக்கு பாம்பன் பாலத்தில் செல்வதற்காக தேசிய நெடுஞ்சாலை துறையினரால் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. கடந்த 28 ஆண்டுகளாக கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதத்துடன் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்வதை தேசிய நெடுஞ்சாலை நிறுத்தி விட்டது.

ஆனால் தேசிய நெடுஞ்சாலை வழியாக ராமேஸ்வரத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கு நகராட்சி நிர்வாகத்தினால் நுழைவுக் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையில் ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகம் வாகன நுழைவு கட்டணம் வசூல் செய்வதை நிறுத்திடவும்சாலையோரத்தில் உள்ள கட்டண வசூல் மையத்தை அகற்றவும் பலமுறை தேசிய நெடுஞ்சாலை உத்தரவிட்டும் நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து வசூல் செய்து வருகிறது.


ராமேஸ்வரம் நகராட்சி பேருந்து நிலையத்திற்குள் செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யும் உரிமம் என்று டெண்டர் விட்டு தேசிய நெடுஞ்சாலையில் வரும் அனைத்து வாகனங்களுக்கும் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி நிர்வாகத்தினால் வாகன நுழைவு கட்டணம் வசூலிக்க தனியாருக்கு டெண்டர் விடப்பட்டபோது, டெண்டர் எடுத்தவர்கள் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதலாக பணம் கேட்டு வாகனங்களில் வருபவர்களை மிரட்டி பணம் பறித்ததால் மாவட்ட நிர்வாகம் டெண்டரை ரத்து செய்தது. தொடர்ந்து நகராட்சி நிர்வாகமே ஊழியர்களை நியமித்து நுழைவு கட்டணம் வசூல் செய்து வந்தது. சில ஆண்டுகள் கழித்து நுழைவு கட்டணம் வசூலிப்பதில் ஊழியர்கள் தவறு செய்வதாக கூறிய நகராட்சி மீண்டும் தனியாருக்கு டெண்டர் விட்டது.

பொதுமக்களிடம் இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியும் நகராட்சி நிர்வாகம் இதனை அலட்சிய படுத்தி விட்டு தனியாருக்கு டெண்டர் விட்டது. அடுத்தடுத்து டெண்டர் எடுத்தவர்கள் மீண்டும் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக புகார் எழுந்ததால் வாகனங்களுக்கு வசூல் செய்யப்பட்டு வந்த கட்டண தொகையை இருமடங்காக்கி நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. இதன் மூலம் டெண்டர் எடுத்தவர்கள் கோடிக்கணக்கில் பணம் பார்ப்பதற்கு வழிவகை செய்யப்பட்டது. மேலும் நாட்டிலேயே எந்த டோல்கேட்டிலும் இல்லாத வகையில் கார், வேன்களுக்கு ரூ.100ம், லாரி உள்ளிட்ட ஆறுசக்கர வாகனங்களுக்கு 150ம் கட்டணமாக வசூல் செய்யப்பட்டு வருகிறது. 

பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவது ஒருபுறம் என்றால் மற்றொருபுறம் கட்டண உயர்வால் நகராட்சி நிர்வாகத்திற்கு எவ்வித ஆதாயமும் இல்லை என்பதும் நகராட்சி நிர்வாக அதிகாரிகளுக்கு நன்கு தெரியும். தனியார் பணம் சம்பாதிக்க ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் நகராட்சி அதிகாரிகளை கண்டித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்யப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. 

ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நகராட்சி டோல்கேட் என்ற பெயரில் அதிகளவில் வாகன நுழைவு கட்டணம் வசூல் செய்யப்படுவது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறையினர் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்க வலியறுத்தியள்ளனர். மேலும் வாகன நுழைவு கட்டணம் வசூல் செய்வதற்கும் தடை விதித்தும், கட்டண வசூல் மையத்தை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இருந்து அகற்றவும் நகராட்சி நிர்வாகத்திற்கு பல முறை உத்தரவிட்டுள்ளனர். ஆனால் நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து வசூல் செய்ய அனுமதித்து வருகிறது. ரூ.22 கோடி செலவழித்து பாலம் கட்டிய தேசிய நெடுஞ்சாலை துறையே குறைந்த வருவாய் கிடைத்ததோடு பாம்பன் பாலம் வாகன கட்டணம் வசூலை நிறுத்தி விட்டது. ஆனால் தேசிய நெடுஞ்சாலையில் சட்டத்திற்கு புறம்பாக நுழைவு கட்டணம் என்ற பெயரில் நடந்து வரும் பகல் கொள்ளையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

இம்மாத இறுதியில் நகராட்சி வாகன நுழைவு கட்டண வசூல் டெண்டர் முடிவுறும் நிலையில் இதனை நீட்டிக்காமல் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் நலன் கருதி வாகன கட்டண வசூலை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கடிதம் மூலம் அறிவுறுத்தியும் வாகன நுழைவு கட்டண வசூலை நிறுத்தவில்லை. உயர் அதிகாரிகளும் இதற்கு ஆதரவாக இருக்கின்றனர். மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதால், தமிழக அரசு அதிகாரிகள்தான் இதனை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

செய்தி: தினகரன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment