வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே! ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே!

Sunday, November 19, 2017

ராமநாதபுரத்தில் அதிரடி: ஆக்கிரமிப்புகள் அகற்றம், தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் புழுக்களுடன் பழச்சாறு பறிமுதல்!!

No comments :
ராமநாதபுரம் நகரில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகஅளவில் இருப்பதாகவும், இதன்காரணமாக போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன.

இதனை தொடர்ந்து கலெக்டர் நடராஜன் உத்தரவின்படி ராமநாதபுரம் நகரசபை ஆணையாளர் நடராஜன், துப்புரவு அலுவலர் இளங்கோ, பொறியாளர் சுப்பிரமணி, நகரமைப்பு ஆய்வாளர் வனிதாமணி உள்ளிட்டோர் போலீசார் துணையுடன் நேற்று காலை திடீரென்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் ரெயில்நிலையம் பகுதியில் தொடங்கிய இந்த பணி வழிநெடுகிலும் நடத்தப்பட்டு ரோட்டின் இருபுறங்களிலும் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பழைய மற்றும் புதிய பஸ் நிலைய பகுதிகள், ரெயில்வே பீடர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இந்த பணி மேற்கொள்ளப்பட்டு ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டன. இந்த பணியின்போது அதிகாரிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக தடுக்கும் நடவடிக்கையையும் மேற்கொண்டனர். இதன்படி பல்வேறு கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் கிலோ கணக்கில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டம்ளர்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.


ரெயில்வே பீடர் ரோட்டில் ஒரு கடையில் 100 கிலோ பிளாஸ்டிக் பைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்த அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த கடையின் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

நகரசபை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றம், பிளாஸ்டிக் பைகள் ஒழிப்புக்காக அதிரடி சோதனை நடத்தி வந்தபோது புதிய பஸ் நிலையம் அருகில் சிக்னல் பகுதியில் அமைந்துள்ள பழக்கடையில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பழ ஜூஸ் பெட்டிகளை அகற்ற முயன்றபோது அதில் வைக்கப்பட்டிருந்த ஜூஸ் குடிப்பதற்கு லாயக்கற்ற முறையில் சுகாதாரக்கேடாக இருந்தது தெரியவந்தது. அங்கு ஜூஸ் தயாரிக்க வைக்கப்பட்டிருந்த பழங்களின் கலவைகளை சோதித்தபோது அதில் புழுக்கள் இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும், பழ கலவை தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பழங்களை பார்த்தபோது அவை அனைத்தும் அழுகிய நிலையில் உண்பதற்கு லாயக்கற்றதாக பார்க்கவே அருவருப்பாக இருந்தன. இதனை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த நகரசபை அதிகாரிகள் இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து ஒப்படைத்தனர். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இந்த பழங்கள் உள்ளிட்டவைகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment