(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, January 7, 2018

பஸ் ஸ்ட்ரைக் மற்றும் பஸ் கண்ணாடி உடைப்பு;- ராமநாதபுர மாவட்டம் மக்கள் கடும் அவதி!!

No comments :

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பஸ் போக்குவரத்து சேவை பெரிய அளவில் முடங்கியது.

அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் மூலம் பஸ்கள் இயக்கப்பட்டாலும் பெரும்பாலான வழித்தடங்களுக்கும், அதிக மக்கள் செல்லக்கூடிய மதுரை போன்ற பகுதிகளுக்கும் போதிய அளவில் பஸ்கள் இயங்கவில்லை. இதுதவிர, கிராமப்பகுதிகளுக்கும் வழக்கமாக செல்லக்கூடிய பஸ்கள் செல்லாததால் பொதுமக்கள் சொல்ல முடியாத அவதிஅடைந்து வந்தனர்.குறிப்பாக கிராமப்புறங்களில் இருந்து வந்து செல்லும் பள்ளி கல்லூரி மாணவமாணவிகள் பஸ்கள் கிடைக்காமல் அங்கும் இங்கும் அலைந்து திரிந்தனர். தனியார் பஸ்கள் முழுமையாக இயக்கப்பட்டாலும் அனைத்து வழித்தடங்களுக்கும் பயணிகளை ஏற்றவில்லை என்றும், சில பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்ததாகவும் பயணிகள் புகார் தெரிவித்தனர்.

பெரும்பாலான பயணிகள் தங்களின் பகுதிகளுக்கு செல்ல வழிதெரியாமல் வேன், கார்களில் ஏறிச்சென்றதை காணமுடிந்தது. நேற்று முன்தினம் இருந்ததை விட நேற்று கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும் தேவைப்படும் இடங்களுக்கு பஸ்களை இயக்கவில்லை என்று பயணிகள் தெரிவித்தனர். பஸ்கள் செல்லவில்லை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல் தெரிந்ததால் பொதுமக்கள் பெரும்பாலோர் தங்களின் பயணத்தை ஒத்தி வைத்துவிட்டனர்.

இதன்காரணமாக பஸ் நிலையங்களில் பஸ்களைபோல பயணிகளின் கூட்டமும் குறைவாகவே இருந்தது. தனியார் பஸ்கள் மட்டுமே முடிந்தளவு பயணிகளை ஏற்றி சென்றுவந்தனர். பஸ்களை இயக்க வேண்டும் என்பதற்காக தனியார் பள்ளி, கல்லூரி பஸ் டிரைவர்களையும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருந்த டிரைவர்களையும், கண்டக்டர்களையும் தற்காலிகமாக பஸ்களை இயக்க வைத்ததால் ஒருசில பஸ்கள் சென்றுவந்ததை காணமுடிந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ராமநாதபுரத்தில் இருந்து சென்ற 2 அரசு பஸ்களை அச்சுந்தன்வயல் அருகேயும், எல்.கருங்குளம் பகுதியிலும் சிலர் கல்வீசி தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த தாக்குதலில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இதுதொடர்பாக பஸ் டிரைவர்கள் ராமநாதபுரம் நகர் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அரசு பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரவி பதற்றம் ஏற்பட்டதால் பயணிகள் பஸ்களில் செல்வதற்கு அச்சமடைந்தனர்.

இதனை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பயணிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி பஸ்களில் ஏறிச்செல்ல ஏற்பாடு செய்தனர். பஸ்கள் கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுத்திருந்தாலும் ஒட்டுமொத்தமாக மாவட்டத்தில் இந்த வேலைநிறுத்தத்தினால் பயணிகள் தங்களின் பயணத்தேவைக்கு அலைந்து திரியும் நிலை உருவாகி உள்ளது.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment