(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, March 5, 2018

ராமநாதபுரத்தில் நடந்த அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி

No comments :
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தமிழக அரசின் மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், அமைச்சர் மணிகண்டன் கலந்துகொண்டு வேலைக்கு செல்லும் மகளிருக்கு மானியவிலையில் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் இருசக்கர வாகனங்களை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெண்களின் நலனை பாதுகாக்கும் வகையில் எண்ணற்ற மகளிர் நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். அந்த வகையில் 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நேரத்தில் பணிபுரியும் ஏழை மகளிர் பயன்பெறும் வகையில் அம்மா இரு சக்கர வாகன திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார். அதன் அடிப்படையில்தமிழ்நாடு அரசின் மூலம் இத்திட்டம் தொடங்கப்பட்டு உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்பட்டு வருகிறது.



ராமநாதபுரம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் இந்த ஆண்டில் ஊரக பகுதிகளுக்கு 1,340 வாகனங்களும், நகர்புற பகுதிகளுக்கு 580 வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின்கீழ் தற்போது முதல்கட்டமாக 100 பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்பட்டு உள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறையின் மூலம் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், அரசு கேபிள் நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் பெறப்பட்டு குறைந்த கட்டணத்தில் தரமான முறையில் அதிக டி.வி. சேனல்களை பார்த்து மகிழ்திடும் வகையில் அரசு கேபிள் செட்டாப்பாக்ஸ் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 39 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்தந்த கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ரூ.20 கோடி மதிப்பில் முதற்கட்டமாக வைபை, கணினி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு அறைகள் நடத்த திட்டமிடப்பட்டுஉள்ளது. சொன்ன வாக்குறுதியை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது. சிலர் இந்த அரசை கொச்சை படுத்தி வருகின்றனர். பதவி வெறியில் இந்த அரசை குறை கூறி கலைக்க நினைக்கின்றனர். ஜெயலலிதா இருக்கும் போது ஒருவர்கூட வாயை திறந்து பேசியது இல்லை. இவ்வாறு அவர் பேசினார். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சுமன், திட்ட அலுவலர் குருநாதன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயஜோதி உள்பட அரசு அலுவலர்கள், மகளிர் கலந்து கொண்டனர். 

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment