(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, December 20, 2020

ராமநாதபுரம் நகராட்சியில் சாக்கடை அடைப்புகளை அகற்றும் ரோபோ எந்திரத்தை கலெக்டர், எம்.எல்.ஏ தொடங்கி வைத்தனர்!!

No comments :

ராமநாதபுரம் நகராட்சியில் மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ. ஆகியோர், பாதாள சாக்கடை அடைப்புகளை அகற்றும் ரோபோ எந்திரத்தை தொடங்கி வைத்தனர்.

 

மனிதர்களைக் கொண்டு கழிவுநீர் தொட்டி மற்றும் பாதாள சாக்கடைகளில் பணி செய்யும்போது எதிர்பாராத விதமாக உயிரிழப்புகள் ஏற்படுவதை கருத்தில் கொண்டு மனித கழிவுகளை மனிதனே அகற்றுவது தவறு என சட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

இத்தகைய சூழ்நிலைகளை முற்றிலுமாக தவிர்த்திடும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ராமநாதபுரம் நகராட்சியில் ஓ.என்.ஜி.சி.சமூக பொறுப்பு நிதி ரூ.45 லட்சம் மதிப்பில் ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவனம் சார்பாக பாதாள சாக்கடை அடைப்புகளை அகற்றும் ரோபோ எந்திரம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

 


ராமநாதபுரம் நகராட்சியில் 10,500-க்கும் மேற்பட்ட பாதாள சாக்கடை இணைப்புகளும் 2,100-க்கும் மேற்பட்ட மனிதன் உட்புகும் நுழைவுகள் உள்ளன. இவற்றில் கழிவு நீர் செல்ல தடை ஏற்படும் பட்சத்தில், அதனை உடனே சரிசெய்ய இந்த ரோபோ எந்திரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 

இந்த எந்திர ரோபோ ஜென் ரோபோடிக் இன்னோவேஷன் எனும் திருவனந்தபுரத்தை சார்ந்த நிறுவனம் வடிவமைத்து உள்ளது.இந்த ரோபோடிக் எந்திரத்தில் ஆபத்தான விஷ வாயுக்களை கண்டறியும் வசதி, எளிய முறையில் இயக்கும் வசதி, குறைவான எடை, கேமரா வசதி மற்றும் தண்ணீர் உட்போகா வண்ணம் அமைக்கப்பட்டு இருப்பதால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மிகவும் பயனாக அமைந்துள்ளது.

 

முதற்கட்டமாக ராமநாதபுரம் நகராட்சியில் செயல்படுத்தப் பட்டுள்ள இந்த ரோபோ எந்திரத்தின் செயல்திறன் மற்றும் பயன்பாட்டை பொறுத்து மாவட்டத்தின் பிற உள்ளாட்சி அமைப்புகளையும் தேவைக்கேற்ப இந்த எந்திரத்தை பயன்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment