(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, April 20, 2015

விபத்தில் மரணமடைந்த பள்ளப்பட்டி ஆலிம்கள், ஓட்டுநர், காயமடைந்தவர் குடும்பங்களுக்கு ரூ.3,25,654/-- நிதி உதவி!!

No comments :
விபத்தில் மரணமடைந்த பள்ளப்பட்டி ஆலிம்கள், ஓட்டுநர், காயமடைந்தவர் குடும்பங்களுக்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) மூணேகால் இலட்சம் ரூபாய் நிதி உதவி!


சாலை விபத்தில் பலியான பள்ளப்பட்டி ஆலிம்கள், ஓட்டுநர் குடும்பத்திற்கும் மற்றும் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் ஆலிம் ஒருவருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) சார்பில் 3,25,654 (மூன்று இலட்சத்து இருபத்தைந்தாயிரத்து அறுநூற்றி ஐம்பத்தி நான்கு) ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.


கடந்த 03.04.2015 அதிகாலை செம்பட்டி அருகே சித்தையன்கோட்டை பிரிவில் நடந்த சாலை விபத்தில் மரணமடைந்த பள்ளபட்டி இளம் உலமாக்களின் குடும்பத்தாருக்கு உதவி செய்யுமாறு பள்ளப்பட்டி நகர ஜமாஅத்துல் உலமா சபை விடுத்த கோரிக்கையை குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் உலகம் முழுவதும் சேர்க்கும் பணியையும், குவைத்தில் நிதி திரட்டும் பொறுப்பையும் முன்னெடுத்து செய்தது.



பள்ளபட்டி நகர ஜமாஅத்துல் உலமா சபை செயலாளரின் வங்கிக் கணக்கு எண்ணிற்கும், கரூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலாளரின் வங்கிக் கணக்கு எண்ணிற்கும் சகோதர, சகோதரிகள் தாராளமாக உதவி அனுப்பியது அறிந்து குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் பேருவகை அடைந்தது.


இதன்றி, தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை சார்பாகக் கடந்த 10.04.2015 வெள்ளியன்று ஜும்ஆவில் தமிழகமெங்கும் பொதுமக்களிடம் வசூல் செய்யப்பட்டதிலும் நம் சகோதரர்கள் தாராளமாக நிதியுதவி செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு பள்ளிவாசலிலும் அந்தந்த இமாம்களே முன் நின்று அக்கறையோடு இந்த நல்ல பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். நிதியுதவியும் வழங்கியிருக்கிறார்கள்.


16.04.2015 வியாழன் அன்று 11 பேர் கொண்ட உலமாக்கள் குழு பள்ளபட்டி சென்று, விபத்தில் இறந்த இளம் ஆலிம்களின் குடும்பத்தாரைச் சந்தித்து, நிதியுதவியை வழங்கிவிட்டு வந்துள்ளனர். இறந்தவர்களில் சிறுகுழந்தைகள் இருப்பவர்களுக்கு, குழந்தைகளின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருப்பது வரவேற்கத் தக்க நடவடிக்கையாகும்.


எவர் ஒரு முஃமினின் இவ்வுலக கஷ்டமொன்றை நீக்கி வைக்கின்றாரோ அல்லாஹ் அவரை விட்டும் மறுமையின் கஷ்டமொன்றை நீக்கி வைப்பான். எவர் கஷ்டத்தில் இருக்கும் ஒருவருக்கு உதவுகின்றாரோ அல்லாஹ் அவருக்கு உலகிலும் மறுமையிலும் கஷ்டங்களை நீக்கி வைத்து உதவுவான். மேலும், எவர் (ஆடை கொடுத்தோ அல்லது குறைகளை மறைத்தோ) ஒரு முஸ்லிமின் மானத்தை மறைக்கின்றாரோ அல்லாஹ் அவரது மானத்தை ஈருலகிலும் மறைப்பான். ஒரு அடியான் தனது சகோதரனுக்கு உதவியாக இருக்கும் காலமெல்லாம் அல்லாஹ் அவனுக்கு உதவியாக இருக்கின்றான்என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அருள்மொழியை கவனத்தில் கொண்டு அம்மாபெரும் பணிகளில் பங்கெடுப்பதற்காக குவைத் வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுமைக்கும் நற்காரியங்களை எடுத்துரைக்கும் உன்னத பணிகளை கடந்த பத்து ஆண்டுகளாக செய்து கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) சார்பில் அதன் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் வழங்கிய மூன்று இலட்சத்து இருபத்தைந்தாயிரத்து அறுநூற்றி ஐம்பத்தி நான்கு (3,25,654) ரூபாய்களை காசோலை வழியாக பள்ளபட்டி நகர ஜமாஅத்துல் உலமா சபை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


நம் சகோதரர்களின் கொடையுள்ளம் பார்போற்றத் தக்கது. நிறைவான உதவியைத் தாராளமாக வழங்கியுள்ளார்கள். சமூக வலைத் தளங்களில் செய்தியறிந்து உதவிகளை அனுப்பிய நண்பர்களுக்கும், ஜும்ஆவில் தாராளமாக உதவிய பெருமக்களுக்கும், அதற்காக முன் நின்று உழைத்த மாநில, மாவட்ட, வட்ட ஜமாஅத்துல் உலமா சபை பெரியவர்களுக்கும், இமாம்களுக்கும், சகோதர, சகோதரிகளுக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் தமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது.
இவர்கள் அனைவருக்கும், இனியும் உதவிகளை வழங்க இருக்கும் சகோதர, சகோதரிகளுக்கும் அருளாளன் அல்லாஹ் வளமான வாழ்க்கையை இம்மையிலும், சுகந்த சுவனத்தை மறுமையிலும் அருளி, பிரதிபலன் வழங்குவானாக!

நன்றி! வஸ்ஸலாம்.

அன்புடன்....
மவ்லவீ அல்ஹாஜ் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ - தலைவர்
மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., - பொதுச் செயலாளர்
மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள்.


குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)

No comments :

Post a Comment