(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, April 22, 2015

சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது - திரை விமர்சனம்!!

No comments :

சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது


பல்வேறு கனவுகளுடன் சென்னைக்கு வரும் இளைஞர்கள் பல விதங்களிலும் படும் பாட்டைச் சொல்கிறது படம்.

அறிமுக இயக்குநர் மருதுபாண்டியன் சினிமாத் தனத்தைக் கூடுமான வரையில் தவிர்த்துள்ளார் இந்த முதல் படைப்பில். சினிமாக் கனவுடன் திரியும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கலில் முக்கியமானது வீடு பிடிப்பது. வெற்றிபெற்ற பிறகு தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுபவர்கள், அடையாளம் தெரிவதற்கு முன் அலைக்கழிப்பதை சோகமாகவும் ஜாலியாகவும் சித்தரிக்கிறது படம்.

வழக்கமாகத் திரைக்கதையில் காணப்படும் ஒரே திசை சார்ந்த குவியம் இதில் இல்லை என்பது முதல் ஆறுதல். நகர வாழ்க்கையின் அவதிகளை எதிர்கால வெற்றி எனும் கனவுக்காக சகித்துக்கொள்ளும் பரிதாப மனிதர்கள்... இவர்களிடம் பலவீனமான பல குணங்கள் குடிகொண்டிருக்கின்றன. ஆனாலும் அவர்கள் ஒப்பனையின்றி உலாவருகிறார்கள். அதனால் இது வழக்கமான திரைப்படம் தரும் அனுபவத்திலிருந்து விலகி நிற்கிறது.


வெவ்வேறு விதமான மனிதர்கள் பெரும் கனவுகளுடன் சென்னை என்னும் பெருநகரில் குவிகிறார்கள். இயக்குநராகும் ஆசையில் கதை எழுத உட்காரும்போதெல்லாம் செல்லப் பாண்டியனுக்கு (பாபி சிம்ஹா) ஏதாவது இடையூறு ஏற்படுகிறது. விவேகானந்தரின் பொன்மொழியைச் சொல்லித்தான் ஆரம்பிக்கிறான். ஆனால் நடைமுறை அவனை நகரவிடாமல் தடுத்துக்கொண்டே இருக்கிறது. சொந்த அறையிலேயே அந்நியன்போல ரகசியமாக இரவில் வந்து தங்குகிறான். தான் காதலித்த பெண்ணிடம் காதலைச் சொல்ல இயலவில்லை. காதல் அவனுக்குள் லேசான நறுமணம் வீசிவிட்டுக் காற்றோடு கலந்துவிடுகிறது.

செல்லப் பாண்டியனின் கனவு இயக்குநராவது என்றால் அவனைத் தேடி வரும் கிராமத்து அண்ணன் சரவணனின் (மருதுபாண்டியன்) கதையோ வேறு. ஓயாமல் குடிக்கும் சரவணனுக்கும் ஓயாமல் உழைக் கும் அவருடைய மனைவிக்கும் இடையில் இருக்கும் உறவும் அரிதாரம் பூசப்படாமல் ஈரத் தன்மையுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

கார்த்தி தன் காதலிக்குத் துரோகம் இழைக்கிறான். ஆனால் அவளால் கார்த்தியை வெறுக்க இயலவில்லை. அவள் அவனை உண்மையாக நேசிக்கிறாள். அவனை உள்ளத்தில் இருத்தி அவன் தந்த குழந்தையுடன் பெருநகரில் சிரமமான வாழ்வை நடத்துகிறாள்.

அவளால் கிராமத்துக்குத் திரும்பிப் போக இயலாது. கிராமம் அவளது நிலையைப் புரிந்துகொள்ளாது. அவளுக்கான அடைக்கலத்தை ஒரு பெருநகரமே வழங்க முடியும் என்பதைப் படம் போகிறபோக்கில் சொல்கிறது.

நண்பர்களுடன் ஓசியில் குடிக்கும் நாகராஜ் தனது அண்ணன் மகனுக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தர விரும்புகிறான். ஆனால் அவனால் அதை நிறைவேற்ற முடியவில்லை. பிரமாண்ட சினிமா கனவைச் சுமப்பவர்கள் சிங்கிள் டீக்கு வழியின்றித் தள்ளாடுவது உருக்கம்.

பாதியில் நின்றுபோன படத்தை இயக்கிய இயக்குநரிடம் செல்லப்பாண்டியன், ஏன் சார் படம் நின்று போனது எனக் கேட்கும்போது, ‘மருதநாயகமே டிராப் ஆயிருச்சு, சினிமாவுக்கு லாஜிக் ஏதுஎன்கிறார். அதில் விரக்தி மட்டும் தொனிக்கவில்லை.. விநோதமான உண்மையும் தெறிக்கிறது.

சரண்யா, பாபி சிம்ஹா, பிரபஞ்செயன், லிங்கா உள்ளிட்ட பலரின் நடிப்பும் இயல்பு. குறிப்பாக பாபி சிம்ஹா அடங்கிய தொனியில் நுட்பமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ரத்னசாமியின் ஒளிப்பதிவும் பலம். பொருத்தமான இசைக் கோலங்களுடனும் சில இடங்களில் தேவைப்படும் மவுனத்தைப் பேணிய வகையிலும் கேம்லின் - ராஜாவின் இசை படத்துக்கு உதவியுள்ளது. அப்துல் ரகுமான், விக்கிரமாதித்யன் கவிதை ஆகியவற்றை கோத்திருக்கும் விதம் ரசனை.

உதிரி உதிரியாக மனிதர்களின் வாழ்வைச் சொல்ல இந்த யதார்த்த வடிவமும், பளிச்சென்ற பாத்திரப் படைப்புகளும் பொருத்தமானதுதான். 




No comments :

Post a Comment