(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, July 19, 2015

தீவிபத்தால் ஏர்வாடி மீன் மார்க்கெட் எரிந்து சாம்பலானது!!

No comments :
ஏர்வாடி பகுதியில் நேற்று ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் மீன் மார்க்கெட் எரிந்து சாம்பலானது.

தீ விபத்து

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவின் பின்பகுதியில் மீன்மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட் பகுதியில் சுமார் 25-க்கும் மேற்பட்ட கடைகளும், மீன் பதப்படுத்தும் கிடங்கும் உள்ளது. இந்தநிலையில் நேற்று பிற்பகலில் இந்த பகுதியில் திடீரென்று தீப்பிடித்தது. மளமளவென பரவிய இந்த தீ காற்றின் வேகத்தால் அனைத்து கடைகளுக்கும் பரவியது. இதனால் 20-க்கும் மேற்பட்ட கடைகள் முழுவதுமாக எரிந்து சாம்பலானது. மேலும், மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள மீன்பதப்படுத்தும் கிடங்கும் எரிந்து அதில் இருந்த பதப்படுத்தும் பெட்டிகள், ஐஸ்பெட்டிகள், மீன்கள் முதலியவை எரிந்து விட்டன. இந்த மார்க்கெட் பகுதியை ஒட்டி அமைந்துள்ள அப்துல்ரஷீத் என்பவரின் ஓட்டலுக்கும் பரவிய தீ அங்கிருந்த பொருட்களில் பற்றி எரிந்தது. இந்த தீவிபத்து குறித்து அறிந்த ஏர்வாடி தீயணைப்பு நிலைய அலுவலர் சாமிராஜ் தலைமையில் முன்னணி தீயணைப்பு அலுவலர் தசரதன் உள்ளிட்டோர் அங்கு விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ வேகமாக பரவியதால் மார்க்கெட் உள்ளிட்டவற்றில் இருந்த எந்த பொருளையும் பத்திரமாக மீட்க முடியவில்லை. மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து நடந்திருக்கலாம் என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

அச்ச உணர்வு

இதுகுறித்து அந்த பகுதியினர் தெரிவித்ததாவது:- இந்த மார்க்கெட் பகுதி ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்துள்ளதாலும் அருகில் மதுக்கடை உள்ளதாலும் மார்க்கெட் பகுதியில் அமர்ந்து மதுகுடிப் பவர்கள் பல்வேறு அசம்பாவித செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மனநலம் பாதித்தவர்கள் ஒதுக்குப்புறமாக உள்ள இந்த பகுதியில் சர்வ சாதாரணமாக சுற்றித் திரிவதோடு, என்ன செய்கிறோம் என்று தெரியாமல் சில செயல்களில் ஈடுபட்டு விடுகின்றனர். பாதுகாப்பு இல்லாத இந்த பகுதியில் அடிக்கடி வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் நடப்பதாலும், தீ வைப்பு சம்பவங்கள் நடப்பதாலும் அச்ச உணர்வுடன் உள்ளோம். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரியநடவடிக்கை எடுக்கவேண்டும்.
செய்தி: தினத்தந்திNo comments :

Post a Comment