(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, September 5, 2015

இமானுவேல் சேகரன் நினைவு தினம், கலெக்டர் நந்தகுமார் தலைமையில் சட்டம்-ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம்!!

No comments :
பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளதையொட்டி ராமநாதபுரத்தில் கலெக்டர் நந்தகுமார் தலைமையில் சட்டம்-ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 
பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளதையொட்டி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் சட்டம்- ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. 

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், மாவட்ட வருவாய் அதிகாரி அலிஅக்பர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வருகிற 11-ந்தேதி பரமக்குடியில் நடைபெற உள்ள இமானுவேல் சேகரன் நினைவுதினம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம் வருமாறு:- அஞ்சலி செலுத்த ராமநாதபுரம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் சொந்த வாகனங்களில் மட்டுமே வரவேண்டும். வாடகை வாகனங்கள் மற்றும் திறந்தவெளி வாகனங்களில் வரக்கூடாது. இதேபோல இரு சக்கர வாகனங்கள், டிராக்டர், மின்வேன், சைக்கிள் போன்ற வாகனங்களிலும் வரக் கூடாது.


சொந்த வாகனங்கள் மூலம் வருபவர்கள் வாகன எண், வாகனத்தில் பயணம் செய்வோர் விவரங்களை வருகிற 8-ந்தேதிக்கு முன்பாக மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்தில் அளித்து வாகன அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். இதனை வாகனத்தில் முன்புற கண்ணாடியில் ஒட்ட வேண்டும். வாகன அனுமதிச் சீட்டு இல்லாத வாகனங்கள் பரமக்குடி செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டாது.

சொந்த வாகனங்களில் செல்பவர்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவிடத்திற்கு செல்ல வேண்டும். வாகனத்தின் மேற்கூரையில் பயணம் செய்யவோ, ஆயுதங்கள் எடுத்துச்செல்லவோ கூடாது. வரும் வழித்தடங்களில் பட்டாசு வெடிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். வாகனத்தில் ஒலி பெருக்கிகள், சாதி மத உணர்வுகளை தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்கள் போன்றவை கட்டக்கூடாது. மேலும் கோஷங்கள் எழுப்பக்கூடாது. 

பரமக்குடி நகருக்குள் சந்தைப்பேட்டை சந்திப்பு முதல் காட்டுப்பரமக்குடி வரை தேசிய நெடுஞ்சாலையில் எந்த ஒரு வாகனத்தையும் நிறுத்தி வைக்க அனுமதி கிடையாது. வாகனங்களில் வரும்போது வரும்வழியில் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் வாகனங்களை நினைத்த இடங்களில் நிறுத்தக்கூடாது.

அஞ்சலி செலுத்துவதற்காக கிராமங்களில் இருந்து பஸ்களில் வருபவர்கள் தங்கள் ஊரில் இருந்து காலை 11 மணிக்குள் புறப்பட வேண்டும். பஸ்களில் பிளக்ஸ் போர்டு, பேனர், கட்சி கொடிகள் மற்றும் ஒலிபெருக்கி ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது. பஸ் படிக்கட்டு மற்றும் மேற்கூரையில் பயணம் செய்யக்கூடாது. அனைவரும் முறையாக பயணச்சீட்டு பெற்று வர வேண்டும். 11-ந்தேதி ஒருநாள் மட்டும் கூடுதல் பஸ்கள் இயக்கப் படும்.

தலைவர்கள் வரும்போது அவர்களுடன் 3 சொந்த வாகனங்கள் மட்டும் வர அனுமதிக்கப்படும், மேலும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு செல்ல வேண்டும். நடைபயணமாக அஞ்சலி செலுத்த வரக்கூடாது. பரமக்குடி நகருக்குள் மட்டும் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் நடைபயணமாக செல்லலாம். ஜோதி, முளைப்பாரி மற்றும் பால்குடம் ஆகியவற்றிற்கு அனுமதி இல்லை. இவற்றை நினைவிடத்தில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவிற்குள் மட்டுமே எடுத்து வர அனுமதிக்கப்படும். சொந்த ஊரில் செப்டம்பர் 11-ந்தேதிக்கு முந்தைய தினமோ, அடுத்த தினமோ எந்தவித நிகழ்ச்சிகள் கொண்டாடவும், ஒலிபெருக்கி அமைப்பதற்கும் அனுமதி கிடையாது. செப்டம்பர் 11-ந்தேதி மட்டும் அவரவர் சொந்த ஊரில் ஒலிபெருக்கி இல்லாமல் புகைப்படம் வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தலாம். 

அலங்கார ஊர்தி அணிவகுப்பு, மாட்டு வண்டியில் வருதல், சாதி தலைவர்கள் வேடமணிந்து வருதல் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை. நினைவிடத்தில் தேவேந்திர பண்பாட்டுக் கழகம் சார்பாக மட்டுமே கூட்டத்தை முறைப்படுத்த ஒலிபெருக்கி பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படும். நினைவிடத்திற்குள் தலைவர்கள் ஒலிபெருக்கியில் பேசுவதற்கு அனுமதி கிடையாது. தேவேந்திர பண்பாட்டு கழகம் சார்பாக குறைந்த பட்சம் 100 தன்னார்வ தொண்டர்களை ஏற்பாடு செய்து நினைவிடத்தில் கூடியிருக்கும் கூட்டத்தினரை அவ்வப்போது வெளியேற்றி கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும்படி செய்ய வேண்டும். பிளக்ஸ் போர்டு மற்றும் சுவரொட்டிகள் ஆகியவை பரமக்குடி நகருக்குள் மட்டும் வருகிற 9,10,11-ந்தேதிகளில் மட்டும் வைத்துக்கொள்ளலாம். பிளக்ஸ் போர்டு வைப்பதற்கு முன்பாக காவல்துறையிடம் முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும். காவல் அனுமதி குறித்த விவரம் பிளக்ஸ் போர்டு மற்றும் சுவரொட்டிகளில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

நினைவிடத்தில் 11-ந்தேதி அன்று மாலை 4 மணிக்குள் அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக்கொள்ள வேண்டும். அஞ்சலி செலுத்த வருபவர்களில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு மட்டும் நேரம் ஒதுக்கீடு செய்யப்படும். இதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 8-ந்தேதிக்கு முன்பாக விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். 

இவ்வாறு ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

செய்தி: தினத்தந்தி(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment