Saturday, December 19, 2015
தங்க மகன் - தமிழ் திரை விமர்சனம்!!
தனுஷ், அவரது நண்பர் சதீஷ் மற்றும் உறவுக்காரப் பையன் அரவிந்த்
மூவரும் சேர்ந்து ஒரே கல்லூரியில் படித்து வருகிறார்கள். தனுஷின் அப்பா
கே.எஸ்.ரவிக்குமார் வருமானவரித் துறை அலுவலகத்தில் கணக்கு எழுதுபவராக பணிபுரிந்து
வருகிறார். ரவிக்குமாரின் மனைவி ராதிகா குடும்பத் தலைவி. நடுத்தர குடும்பம்தான்
என்றாலும் இவர்களது குடும்பத்தில் சந்தோஷத்துக்கு குறைவில்லை.
இந்நிலையில் ஒருநாள் நாயகி எமிஜாக்சனை
கோவிலில் பார்க்கிறார் தனுஷ். பார்த்ததும் அவள்மீது காதல் துளிர்விட, தொடர்ந்து அவரையே சுற்றி வந்து, தனது காதலை வெளிப்படுத்துகிறார் தனுஷ். ஒருகட்டத்தில்
எமிஜாக்சனும் தனுஷை காதலிக்கத் தொடங்குகிறார். இருவரும் காதலர்களாக மாறுகிறார்கள்.
அதேநேரத்தில், சதீஷும் எமிஜாக்சனுடன் கூடவே வரும் அவரது தோழியை காதலிக்கிறார். தனுஷும், சதீஷும் காதல் வலையில் சிக்கி, தங்களது காதலிகளுடன் ஊர் சுற்ற, அரவிந்துக்கு இதுபற்றி எதுவுமே இவர்கள் தெரிவிப்பதில்லை. இதனால், அரவிந்தனுடனான இவர்களுடைய நட்பில் விரிசல் ஏற்படுகிறது. ஒருகட்டத்தில், இவர்கள் காதல் செய்யும் விஷயம் அரவிந்துக்கு தெரிய, தன்னிடம் இதைப்பற்றி தெரிவிக்காத நண்பர்களிடம் கோபித்துக் கொண்டு
அவர்களிடமிருந்து நிரந்தரமாக பிரிகிறான்.
பின்னர், ஒருநாள் எமி ஜாக்சன், தான் கட்டிவரும் கனவு இல்லத்தை தனுஷிடம் காட்டி, திருமணத்திற்கு பிறகு இருவரும் தனியாக இந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்று கூறுகிறார். ஆனால், அப்பா, அம்மா மீது அதிக பாசம் கொண்ட தனுஷோ, பெற்றோரை விட்டு தனியாக வரமுடியாது என்று கூறுகிறார். இதனால், இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிந்து போகிறார்கள்.
இதையடுத்து
தனுஷ் படித்து முடித்துவிட்டு அப்பா வேலைசெய்யும் வருமான வரித்துறை அலுவலகத்திலேயே
வேலைக்கு சேர்கிறார். அதன்பின்னர், சமந்தாவை தனுஷுக்கு பெற்றோர்கள் திருமணம்
செய்து வைக்கிறார்கள். இருவருடைய திருமண வாழ்க்கையும் நன்றாக சென்று
கொண்டிருக்கும் நிலையில், கே.எஸ்.ரவிக்குமாருக்கு அவரது உயரதிகாரி
ஜெயப்பிரகாஷ் மூலமாக பிரச்சினை வருகிறது.
கே.எஸ்.ரவிக்குமார் மீது திருட்டு பட்டம் கட்டி அவரை அவமானப்படுத்துகிறார் ஜெயப்பிரகாஷ். இந்த அவமானத்தை தாங்க முடியாத கே.எஸ்.ரவிக்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்கிறார். அவருடைய மரணத்திற்கு பிறகு தனுஷின் குடும்பமே நிலைகுலைந்து போகிறது. தங்குவதற்குகூட வீடு இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். குடும்பத்தை காப்பாற்ற தனுஷும் கிடைத்த வேலையை செய்துவருகிறார்.
இந்நிலையில், சமந்தா கர்ப்பமடைகிறார். சந்தோஷப்படவேண்டிய இந்நேரத்தில் தனது குடும்பத்தின் நிலையை அறிந்த மிகவும் வேதனையடைகிறார் தனுஷ். இறுதியில், தனது அப்பா மீதுள்ள திருட்டுப் பட்டத்தை தனுஷ் எப்படி நீக்கினார்? தனுஷ் தன்னுடைய குடும்பத்தை எப்படி மேலே கொண்டு வந்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் முதல்
பாதியில் நண்பர்களுடன் அரட்டை, எமி ஜாக்சனுடன் காதல் என ஜாலியாக வரும்
தனுஷ், பிற்பாதியில் பொறுப்பான குடும்பத்
தலைவனாகவும், அப்பா மீதுள்ள கலங்கத்தை துடைக்க
நினைக்கும் ஆக்ரோஷமான மகனாகவும் அழகாக நடித்திருக்கிறார். சண்டைக் காட்சியாகட்டும், ரொமான்ஸ் காட்சியாகட்டும் தனுஷ் தனது பணியை நிறைவாக செய்திருக்கிறார்.
எமிஜாக்சன் தனது முந்தைய படங்களை இந்த படத்தில் இன்னும் கொஞ்சம் அழகாக தெரிகிறார்.
காதல் காட்சிகளில் தனுஷுடன் சேர்ந்த இவர் செய்யும் ரொமான்ஸ் விஷயங்கள் ரொம்பவும்
ரசிக்க வைக்கிறது. சமந்தா, அழகான குடும்ப பெண்ணாக அனைவர் மனதிலும்
பதிகிறார். அலட்டல் இல்லாத பொறுமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்கிறார்.
காமெடிக்கு சதீஷ், தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.
தனுஷின்
உறவுக்கார பையனாக வரும் அரவிந்த் பார்க்க அழகாக இருக்கிறார். நடிப்பிலும் கொஞ்சம்
தேறியிருக்கிறார். முதன்முதலாக படம் முழுக்க வரும் கே.எஸ்.ரவிக்குமார், இந்த படத்தின் கதையை தாங்கி நிற்கிறார். குடும்பத்தின் மீது அக்கறை காட்டும்
பாசமிகு அப்பாவாக மனதில் பதிகிறார். ராதிகாவும் தனது அனுபவ நடிப்பால் அனைவர்
மனதையும் கவர்கிறார்.
இயக்குனர்
வேல்ராஜ்-தனுஷ் கூட்டணியில் உருவான படம் என்றதுமே,
இந்த படத்திற்கு
மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அந்த எதிர்பார்ப்பை வேல்ராஜ் பூர்த்தி
செய்திருக்கிறார் என்றால் அது உண்மையே. இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியையும்
ரொம்பவும் ரசித்து எடுத்திருக்கிறார் என்பது மட்டும் புரிகிறது. அப்பா மீதுள்ள
கலங்கத்தை போக்க நினைக்கும் ஒரு மகனின் வேதனையை அழகாக சொல்லியிருக்கிறார். அதே
நேரத்தில், இப்படி ஒரு குடும்பம் நமக்கும் வேண்டும்
என்ற ஆசையையும் ஏற்படுத்தியிருக்கிறார். குமரன் ஒளிப்பதிவில் காட்சிகள் எல்லாம்
அழகாக பளிச்சிடுகின்றன. சண்டைக் காட்சிகளில் எல்லாம் இவரது கேமராவின் பணி அழகாக
இருக்கிறது. அனிருத் இசையில் பாடல்கள் ஏற்கெனவே ஹிட்டாகிவிட்டன. இருந்தாலும், இதை காட்சியமைப்பில் பார்க்கும்போது கூடுதல் அழகாக இருக்கிறது. பின்னணி இசை
வழக்கம்போல் தெறிக்கவிட்டிருக்கிறார்.
மொத்தத்தில் ‘தங்கமகன்’ வெற்றி வீரன்……..
விமர்சனம்: இனிய தமிழ்.காம்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment