(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, November 26, 2016

ராமநாதபுரத்தில் குரூப்–1 போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு!!

No comments :
ராமநாதபுரத்தில் குரூப்–1 போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பை மாவட்ட கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் தொகுதி– 1 நிலை அலுவலர் பணியிடங்களுக்கு உரிய போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பை மாவட்ட கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

தமிழ்நாடு அரசின் மூலம் இளைஞர் நலனை மேம்படுத்தும் வகையில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப்–1 நிலை அலுவலர் பணியிடங்களுக்குரிய போட்டித்தேர்வுகளில் பங்கு பெற்று வெற்றி பெறுவதை லட்சியமாக கொண்டுள்ள எண்ணற்ற இளைஞர்களுக்கு உறுதுணையாக ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குரூப்–1 நிலை அலுவலர் பணியிடங்களுக்குஉரிய போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடங்கி வைக்கப்பட்டுஉள்ளது.



இந்தபயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் 248 இளைஞர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து கொண்டு அடையாள அட்டை பெற்றுள்ளனர். இந்தபயிற்சி வகுப்பு வாரந்தோறும் திங்கட்கிழமை தவிர மீதமுள்ள 6 நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடத்தப்படும்.

இதில் கலந்து கொண்டுள்ள இளைஞர்களுக்கு பொது அறிவு, வரலாறு, அறிவியல், தொழில் நுட்பம், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களில் இருந்து போட்டித் தேர்வுக்கு தேவையான பல்வேறு பிரிவுகளின்கீழ் பயிற்சியும், பாடப்புத்தகங்களும் வழங்கப்படுகிறது. இதுதவிர அரசுத்துறைகளில் பணிபுரிந்து வரும் இந்திய ஆட்சிப்பணி நிலை அலுவலர்கள், துணை ஆட்சியர் நிலை அலுவலர்கள் கலந்து கொண்டு அவ்வப்போது பயிற்சி வகுப்பை நடத்துவதோடு, தங்களது போட்டித்தேர்வு அனுபவங்களை இளைஞர்களிடம் பகிர்ந்து கொள்ளும் வகையில் பயிற்சி வகுப்பை நடத்த திட்டமிடப்பட்டுஉள்ளது.

எனவே நடைபெறவுள்ள குரூப்–1 தேர்வில் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ள இளைஞர்கள் அனைவரும் வெற்றி பெற்று நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


அப்போது மாவட்ட வேலைவாய்ப்பு துறை உதவி இயக்குனர் அபுபக்கர் சித்திக் உடன் இருந்தார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment