(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, January 24, 2017

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரேஷன்கார்டுகளை கலெக்டரிடம் ஒப்படைத்த கிராமத்தினர்!!

No comments :
ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரேஷன்பொருட்கள் கிடைக்கவில்லை என்று புகார் தெரிவித்து ரேஷன்கார்டுகளை கிராம மக்கள் கலெக்டரிடம் ஒப்படைத்தனர்.


மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலர் அலி அக்பர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தனர்.

கமுதி அருகே பாப்புரெட்டியாபட்டி ஊராட்சியை சேர்ந்த டி.குமாரபுரம் கிராமத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- பாப்புரெட்டியாபட்டியில் உள்ள ரேஷன்கடையில் அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படவில்லை.



தாமதமாக செல்லும் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதில்லை. மேலும், இந்த ரேஷன்கடைக்கு உட்பட்ட 4 கிராம மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.

அதேசமயம், இந்த கடைக்கு வரக்கூடிய ரேஷன் பொருட் களை உள்ளுரில் உள்ள சில கடைக்காரர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மூலம் கூடுதல் விலைக்கு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனுவை அளித்த பொதுமக்கள் இந்த ரேஷன்கடைக்கு உட்பட்ட 120 ரேஷன்கார்டுகளையும் ஒப்படைக்க முயன்றனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்டகை எடுப்பதாக தெரிவித்தார்.

குடிநீர் தட்டுப்பாடு

ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள மேலசெங்குடி கிராமத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் ராஜேசுவரி என்பவரின் தலைமையில் வந்து மனு அளித்தனர். அந்த மனுவில், ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள மேலசெங்குடி கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.


இதனால் பெண்கள் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டி உள்ளது. எனவே, மேலசெங்குடி கிராமத்திற்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின்கீழ் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக தண்ணீர் சப்ளை செய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். 

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment