(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, April 6, 2017

மூடிய டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக வேறு இடங்களில் கடைகள் அமைக்க எதிர்ப்பு!!

No comments :
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்தில் நெடுஞ்சாலையை ஒட்டி இருந்த டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இந்தக் கடைகளுக்கு பதிலாக வேறு இடங்களில் கடைகள் அமைக்க புதிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள இடங்களில் மதுபானக் கடைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு அந்தந்த பகுதி மக்கள் தொடர்ந்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு நாள்தோறும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திரளாக வந்து மதுக்கடை அமைக்கக் கூடாது என்று மனு கொடுத்து வருகின்றனர்.


நேற்று கமுதி அருகே உள்ள ராமசாமிபட்டியை சேர்ந்த பொதுமக்கள் கமுதிஅருப்புக்கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்திருந்த மதுக்கடையை அகற்றி தற்போது ராமசாமிபட்டிக்கு வரும் வழியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று மனு கொடுத்தனர். 

ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூர் மாணிக்கநகர் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்கள் பகுதியில் பஸ் நிறுத்தத்திற்கும் கிராமத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த கடை அமைந்தால் பெண்கள் உள்பட அனைவரும் யாரும் அந்த வழியாக செல்ல முடியாத நிலை ஏற்படும். எனவே உடனடியாக கடையை அந்த பகுதியில் அமைக்கக்கூடாது. எங்களின் எதிர்ப்பை மீறி கடையை அமைத்தால் கிராம மக்கள் அனைவரும் ஒன்றாக தற்கொலை செய்துகொள்வோம். இவ்வாறு மனு தெரிவித்தனர். 

கமுதி அருகே உள்ள என்.கோபாலபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏற்கனவே அமைந்திருந்த டாஸ்மாக் மதுக்கடையால் நாங்கள் பாதிக்கப்பட்டதை உணர்ந்து வேறு இடத்திற்கு மாற்றி வைத்தனர். தற்போது மீண்டும் எங்கள் கிராம பகுதியில் மதுக்கடை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனவே, உடனடியாக இந்த பணியை தடுத்து நிறுத்தி மதுக்கடையை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு மனு அளித்தனர். 

இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தி உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment