(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, August 29, 2017

ராமநாதபுரம் மாவட்டம் முழுதும் செப்.6ம் தேதி வரை பாலின் தர பரிசோதனை முகாம்!!

No comments :
பாலின் தரம் குறித்து பரிசோதனை செய்ய ராமநாதபுரம்  நகராட்சி அலுவலகத்தில் இலவச சிறப்பு உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. செப்.6ம் தேதி வரை இந்த முகாம் நடைபெறுகிறது.

மாவட்ட  உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் சார்பில்  கலெக்டர் நடராஜன் தொடங்கிவைத்துப் பேசுகையில், “மாவட்டத்தில் உணவுப்  பாதுகாப்புத் துறையின் மூலம் பொதுமக்கள் உட்கொள்ளும் உணவுப் பொருள்களின்  தரம் குறித்து அவ்வப்போது அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு உறுதி  செய்யப்படுகிறது. தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும்  அத்யாவசியத் தேவையான பாலின் தரம் குறித்து பரிசோதனை செய்திட `இமேட்’ என்ற   இயந்திரம் மூலம் மாநிலத்திலேயே 2வதாக நமது மாவட்டத்தில்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரமானது 100 சதவீதம் கணினிமய  தானியங்கி கருவி. இக்கருவியின் மூலம் பொதுமக்கள் தங்கள் வீடுகளில்  பயன்படுத்தும் பாலின் தரத்தையும், கலப்படம் ஏதும் உள்ளதா என்பதையும் மிக  துல்லியமாக அறிந்து கொள்ள இயலும். பால் உணவு மாதிரிகள் பகுதி வாரியாக  சேகரிக்கப்பட்டு உணவு பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள் உடனடியாக  தெரிவிக்கப்படுகிறது. இச்சிறப்பு முகாம் வரும் 6ம் தேதி வரை (விடுமுறை  நாட்கள் தவிர) மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்திட  திட்டமிடப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் இம்முகாம்களில் கலந்துகொண்டு தாங்கள்  பயன்படுத்தும் பாலின் தரம் மற்றும் தன்மைகள் குறித்து விழிப்புணர்வு பெற்று  பயனடையலாம். இவ்வாறு அவர் பேசினார்.

இதே போல் இன்று (ஆக.,29) கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் நடக்கும் முகாமில் ஒன்றிய பகுதிகளிலும்,
ஆக., 30 ல் பரமக்குடி நகராட்சி அலுவலகத்தில் நடக்கும் முகாமில் பரமக்குடி ஒன்றியம், போகலுார், நயினார்கோவில் ஒன்றிய பகுதியில் உள்ளவர்கள் பாலின் தரம் குறித்து சோதனை செய்து கொள்ளலாம்.

செப்., 1 ல் முதுகுளத்துார் பேரூராட்சி அலுவலகத்தில் நடக்கும் முகாமில், கமுதி, முதுகுளத்துார், கடலாடி, ஒன்றியத்தினை சேர்ந்தவர்களும்,

செப்., 4 ல், ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்தில் நடக்கும் முகாமில் மண்டபம் ஒன்றியத்தினரும்,

செப்., 6 ல், ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் நடக்கும் முகாமில், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை ஒன்றியப்பகுதியில் வசிப்பவர்களும், பாலினை கொடுத்து இலவசமாக தரம் அறிந்து கொள்ளலாம்.


நிகழ்ச்சியில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஸ் சந்திரபோஷ் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தகவல்: திரு. ஃபத்தாஹ், கீழை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment