வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே! ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே!

Tuesday, August 29, 2017

குடிநீர் விநியோகக் குழாய்களைச் சேதப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர்!!

No comments :
காவிரி  குடிநீர் விநியோகக் குழாய்களைச் சேதப்படுத்துவோர், குடிநீரை முறைகேடாகப்  பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும என கலெக்டர் நடராஜன்  தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவரது அறிக்கை:

ராமநாதபுரம்  மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களின் நிலத்தடி நீர், குடிநீருக்குப்  பயன்படுத்த இயலாத அளவிற்கு உப்புத்தன்மையதாக உள்ளது.  இதனால் திருச்சி  காவிரி ஆற்றுப்படுகையிலிருந்து குடிநீரை குழாய்கள் மூலம் எடுத்து வந்து  கிராமங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வடகிழக்குப் பருவமழை  பெய்யாமல் விட்ட காரணத்தாலும், காவிரி ஆற்றில் நீர்வரத்து இல்லாததாலும்  அனைத்துப் பகுதியிலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. 

இதனால்  காவிரி ஆற்றுப்படுகையிலிருந்து ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக  எடுக்கப்படும் நீரின் அளவும் குறைந்து வருகிறது. இந்த நிலை மேலும்  குறையாமல் இருப்பதற்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.


அதனை  ஈடுசெய்வதற்காக வாய்ப்புள்ள இடங்களில் புதிய குடிநீர் திட்டங்களை ஆரம்பிக்க  மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், காவிரி  குடிநீர் விநியோகம் செய்வதற்காக நிலத்தடியில் பதிக்கப்பட்டுள்ள குழாய்களை  சில நபர்கள் சேதப்படுத்தி குடிநீரை வீணாக்கி வருகின்றனர்.

இதனால்  அதற்கடுத்து பயன்பெறக்கூடிய கிராமங்களுக்கு குடிநீர் சென்றடையாமல் தடை  ஏற்பட்டு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படும் சூழல் உருவாகி வருகிறது.  இந்நிலை தொடர்ந்தால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது போலீசார் மூலம் மிக  கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும். 

குடிநீர் விநியோகத்தின் செயல்பாடுகளை  உன்னிப்பாக கவனித்து தொடர் நடவடிக்கை எடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்தில்  04567- 231375 மற்றும் 04567 -230431 என்ற தொலைபேசி இணைப்புகளுடன் தொடர்பு  கொள்ளக்கூடிய தகவல் மையம் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. 


இதுதவிர அனைத்து  ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் தகவல் மையம் தொடங்கப்பட்டுள்ளது.  பொதுமக்கள் குடிநீர் தேவை மற்றும் குடிநீரை முறைகேடாக பயன்படுத்துவோர்  பற்றிய தகவல்களை அங்கு தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment